வேலூர் சிக்கியப் பணம் – துரைமுருகன் நண்பரிடம் தீவிர விசாரணை !

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (15:15 IST)
துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரிடம் நடந்து முடிந்துள்ள விசாரணையை அடுத்து இப்போது சீனிவாசனிடம் விசாரணை நடக்க இருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில்  கடந்த 3 நாட்களில்  நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கொடவுனில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக அனுப்பவேண்டிய விவரங்களும் அதன் கவர்களில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதனால் வாக்குகளுக்குப் பணம் கொடுத்ததாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா அல்லது வேலூர் தொகுதிக்கே தேர்தல் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் ‘எங்களுக்குத் தொல்லைகளைக் கொடுத்து, எங்கள் வெற்றியைத் தடுப்பதே அவர்களின் நோக்கம். கடந்த 3 நாட்களாக என் மகன் கதிர் ஆனந்தை வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் சோதனை. வருமான வரித்துறை அதிகாரிகள்…வந்தார்கள்… எங்கள் பணம் இல்லை என சொன்னோம்… போய்விட்டார்கள்… நீங்கள் என்னவெல்லாமோ செய்தி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் சிமெண்ட் கொடவுனின் உரிமையாளர் பூஞ்சோலை சீனிவாசன் கைப்பற்றப்பட்ட 11 கோடி ரூபாய் பணமும் அதற்கான உரிய ஆவணங்களை தான் அளிப்பதாகவும் அந்த பணத்திற்கும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும் எந்த சம்மதமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திடம் இருந்து விசாரணையை பூஞ்சோலை சீனிவாசன் பக்கம் திருப்பியுள்ளது வருமானவரித்துறை. அவர் கைப்பற்றப்பட்டுள்ள பணத்திற்கு முறையான கணக்குகள் காட்டாதப்பட்சத்தில் அவரிடம் அந்த பணத்திற்கு உண்டான வரியை வசூல் செய்யும்  என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் வேலூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் தேர்தலை தள்ளிவைக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்