அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பாக வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று சேலம் மாவட்டம் கருமந்துரையில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். சேலம் பகுதி பொது மக்களைச் சந்தித்து, பிரச்சார வேனிலிருந்தபடி பொதுமக்களிடம் உறையாற்றினார்.
அப்போது ‘எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் இயக்கம் தான் அதிமுக. அவர்களின் வழியிலேயே இந்த அரசு நடத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பாதுகாப்பிற்கு வலிமையான தலைவர் மிக அவசியம். அந்த தகுதியுடைய ஒரே தலைவர் நரேந்திர மோடிதான்.
அன்மையில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடனடியாக போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஒரு பெருமையை பெற்றுத்தந்த ஒரு பிரதமர் தான் நரேந்திர மோடி. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்நிறுத்தி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆனால் திமுக, அமைத்துள்ள கூட்டணியின் யார் பிரதமர் என்று முடிவு செய்யப்படவில்லை.
இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அதற்கு பிறகு பல்வேறு கட்சித்தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்று முடிவு செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். பச்சோந்தி என்று சொன்னால் அது ஸ்டாலினுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.