இந்திரா – இந்திய வலிமையின் அடையாளம்!

சனி, 31 அக்டோபர் 2009 (17:28 IST)
WD
இந்தியாவின் மூன்றாவது பிரதமராகப் பொறுப்பேற்ற - இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்று பெருமையும் பெற்ற -இந்திரா காந்தியின் 25ஆவது நினைவு தினம் இன்று.

‘இந்திராதான் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா’ என்று காங்கிரஸ்காரர்களால் (இந்த முழக்கத்தை கோத்துக் கொடுத்தது இரஷ்யாவின் உளவு அமைப்பு என்று கூறப்பட்டது) பெருமையாக முழங்கப்பட்டவர். அதே நேரத்தில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை நிலைப்படுத்தியது மட்டுமின்றி, பாரம்பரிய பெருமைமிக்க காங்கிரஸ் கட்சியை தனது அரசியல் ‘நலனிற்காக’ உடைத்து, ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியவர், தன்னை காப்பாற்றிக் கொள்ள அவசர நிலை பிரகடனம் செய்து, இந்தியாவின் ஜனநாயக அரசியலிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர் என்று மக்களால் மதிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களான பெருந் தலைவர் காமராசர், லோக் நாயக் ஜெயப் பிரகாஷ் நாராயணன், அசோக் மேத்தா, நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் ஆகியோரால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்திரா காந்தி.

மன்னர் மானியங்களை ஒழித்து, தனியார் வங்கிகளை அரசுடமையாக்கி, பொதுத் துறையைப் பலப்படுத்தி, இராணுவ பலத்தை அதிகரித்து, விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு வேகமான திருப்பு முனையை ஏற்படுத்தியவர் என்று பொருளாதார நிபுணர்களால் பாராட்டப்பெற்றவர் இந்திரா காந்தி.

இந்தியாவைப் போன்றதொரு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக 18 ஆண்டுக் காலம் தலைமைப் பொறுப்பேற்று ஆண்ட ஒரு தலைவரி்ன் மீது இப்படிப்பட்ட புகழ் மாலைகளும், பாராட்டுதல்களும் அதே நேரத்தில் கடுமையான - ஆனால் நேர்மையான - எதிர்ப்பும் இருந்துள்ளது. ஆயினும் மறுக்க முடியாத ஒன்று: இந்திரா காந்தி இந்தியாவின் வலிமையான அடையாளமாகத் திகழ்ந்தார் என்பதே.

WD
சுதந்திரம் பெற்ற பாரத நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற நேரு 1964ஆம் ஆண்டு மறைவும் வரை, 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது இந்தியா ஒரு சமாதானத்தை விரும்பும், சர்வதேச அமைதிக்காக பாடுபடும், அடிமை விலங்கொடித்து விடுதலைப் பெறும் நாடுகளின் ஆதரவு நாடாகப் பெருமையாக அடையாளப்படுத்தப்பட்டது.

உலகத்தின் பெரும் பெருளாதார, இராணுவ வல்லமைப் பெற்ற நாடுகள் அனைத்தும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பிலும், சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான வார்சா உடன்படிக்கை நாடுகள் அணியிலும் அணி வகுத்து நின்றபோது, இரண்டு அணிகளையும் சேராமல், அதே நேரத்தில் சர்வதேச அமைதி காக்கவும், மூன்றாம் உலக நாடுகளின் உரிமைகள் மற்றும் நலனைப் பேணவும் அணி சேரா அமைப்பை, யுகோஸ்லாவிய அதிபர் ஜெனரல் மார்ஷல் டிட்டோ, எகிப்து அதிபர் நாசர் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி உலக அரசியலில் ஒரு நடுப்பாதையை ஏற்படுத்தினார் பிரதமர் நேரு.


PIB Photo
PIB
இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களில் அணி சேரா அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும், நேருவின் இந்தியா வகுத்த பரஸ்பர அமைதிப் பாதைக்கு மதிப்பும் தரவில்லை, இந்தியாவுடனான உறவில் நேர்மையையும் காட்டவில்லை. அதன் விளைவுதான் பஞ்ச சீலக் கொள்கை தந்த பாரத நாட்டின் மீது 1962ஆம் ஆண்டு சீனா மேற்கொண்ட படையெடுப்பும், அதனைத் தொடர்ந்து 1965இல் இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலும் அதன் விளைவாக இந்தியா சந்திக்க நேர்ந்த இரண்டு போர்களுமாகும்.

ஆக, அண்டை நாடுகளின் பார்வையில் இந்தியா ஒரு பலவீனமான நாடாகவே இருந்தது. இந்த நிலையை மாற்றியதில் இந்திரா காந்திக்குப் பெரும் பங்குண்டு. நேருவின் மறைவிற்குப் பின் மிகக் குறுகிய காலமே பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி வித்திட்ட இந்தியாவின் அணு ஆயுத திட்டத்திற்கு இந்திரா காந்தி முழு ஆதரவளித்தார். அதேபோல் ராக்கெட் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், ஏவுகணை ஆய்வி்ற்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து ஊக்கமளித்தார்.

1974ஆம் ஆண்டு போக்ரானில் இந்தியா நடத்திய முதல் அணு ஆயுத சோதனை, சீனாவில் இருந்து அமெரிக்கா வரை அனைத்து நாடுகளுக்கு ஒரு அதிர்ச்சியை அளித்தது. இந்தியாவை எந்த நாடு தாக்கினாலும் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உண்டு என்பது அந்த சோதனையிம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அணு ஆயுத வல்லமையைப் பெறுவதற்கானத் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்ட அதே நேரத்தில், இந்தியாவின் படைப்பலமும் பன்மடங்கு பெருகியது. இதன் மூலம் தெற்காசியாவில் சீனாவின் இராணுவ, அணு ஆயுத பலத்திற்கு ஈடாக இந்தியா உயராவிட்டாலும், 1962 போன்று இந்தியாவிற்கு எதிராக மீண்டும் ஒரு இராணுவ சாகசத்தில் சீனா ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

விண்வெளி ஆய்விற்கும் போதுமான ஊக்கத்தை அளித்தார் இந்திரா காந்தி. நமது சொந்த தொழில் நுட்பத்திலேயே செயற்கைக் கோள்களை செலுத்தும் வல்லமை பெற்றதற்கு இந்திரா காலத்தில் அளிக்கப்பட்ட உந்துதல் மிக முக்கியமானதாகும்.

இந்த அளவிற்குப் பல்வேறு முக்கியத் துறைகளில் இந்தியாவை முன்னேற்றப் பாதையிலும், அதே நேரத்தில் நாட்டின் பலத்தை எந்த ஒரு அன்னிய அச்சுறுத்தலிற்கும் பதிலடிக் கொடுக்கும் அளவிற்கு உயர்த்திய இந்திரா காந்தியின் பெருமை, அலகாபாத் நீதிமன்றம் அவருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பில் விளைவுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள 1975ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்ததால் சரிந்தது.

1947இல் விடுதலைப் பெற்ற நமது நாட்டின் ஜனநாயக அமைப்புகளான நீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், பத்திரிக்கைகள் ஆகியன பலம் பெற்றுவந்த நேரத்தில் தனது ஆட்சிக்கு தான் செய்த தேர்தல் முறைகேட்டால் வந்த சட்ட ஆபத்தில் இருந்து காத்துக் கொள்ள, நாட்டிற்கே ஆபத்து வந்துவிட்டது என்று கூறி, அவசர நிலையை (போர் காலத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய அரசமைப்புப் பிரிவைப் பயன்படுத்தி) பிரகடனம் செய்தார்.


PIB
இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட அரசியல் தலைவர்கள் ஜெயப் பிரகாஷ் நாராயணன், அசோக் மேத்தா, நிஜலிங்கப்பா உட்பட ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிக்கைத் தணிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு அரசிற்கு எதிரான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. எதிர்த்து எழுதிய பத்திரிக்கை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கருத்துரிமை பறிக்கப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசுகள் கவிழ்க்கப்பட்டன. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாகிஸ்தானிற்கு எதிராக போர் வெற்றிக்குப் பின் 1971ஆம் ஆண்டுத் தேர்தல் வெற்றி மூலம் ஈடிணையற்ற அரசியல் செல்வாக்குப் பெற்றத் தலைவராகத் திகழந்த இந்திரா காந்தி, அவசர நிலைப் பிரகடனத்தால் செல்வாக்கை இழந்தார்.

1977ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வியைத் தழுவினார். ரே பரேலி தொகுதியில் இந்திரா காந்தியும், அமேதி தொகுதியில் அவரது புதல்வர் சஞ்சய் காந்தியும் தோற்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் துவக்கி வைத்த ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தது.

ஜனதா ஆட்சி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1980ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் 356 தொகுதிகளில் வென்று மீண்டும் பிரதமரானார் இந்திரா காந்தி. அவசர நிலை பிரகடனம் செய்ததற்கும், அதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மன்னிப்புக் கேட்டார். அதனால் வெற்றியும் பெற்றார்.

ஆயினும் எதிர்க்கட்சியினரை தனது அரசியல் எதிரிகளாய்ப் பார்க்கும் அவரது பார்வை மாறவில்லை. ஜனதாக் கட்சியின் ஒரு அங்கமாக இருந்த அகாலி தளத்தை உடைப்பதற்காக தான் ஆதரவளித்து உருவாக்கிய சாந்த் ஜர்னயில் சிங் பிந்தரன் வாலே, தனது ஆட்சிக்கு சவாலாக வளர்ந்தபோது, அவரையும் அவரோடு ஆயுதம் ஏந்திய சீக்கியத் தீவிரவாதிகளையும் ஒடுக்க சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலிற்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். பிந்தரன் வாலே சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் சீக்கிய சமூதாயத்தின் கோபத்திற்கு ஆளானார் இந்திரா.

இதுவே அவரது வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது என்று கூறுப்பட்டது. ஆனால், வலிமையான இந்தியாவை உருவாக்கிய ஒரு தலைவரை - அவர் தனது சர்வதேச எதிரியின் நண்பனாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக - அந்த உலக வல்லரசு, இந்திராவிற்கு எதிராக உள்நாட்டில் எழுந்த இந்த எதிர்ப்பைப் பயன்படுத்தி தீர்த்துக்கட்டிவிட்டது என்றும் கூறினார்கள். இந்திரா காந்தி படுகொலையின் பின்னணி சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாக்கூர் அறிக்கை இன்று வரை நாடாளுமன்றத்தில் வைக்கப்படவில்லை!

இந்திய நாட்டை பலம் வாய்ந்த நாடாக மாற்றிய இந்திரா காந்தியின் மரணமும் மறக்க முடியாத ஒரு கறையை இந்திய வரலாற்றில் ஏற்படுத்தியது. அவரது படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய சமூகத்தினரை குறிவைது டெல்லியிலும் பிற வட மாநிலங்களிலும் நடந்த - காங்கிரஸ்காரர்களால் தூண்டிவிடப்பட்டு, நடத்தப்பட்ட - கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தலைநகர் டெல்லியில் மட்டும் ஐந்தாயிரம் சீக்கியர்கள் (மூன்றாயிரம் என்கிறது மத்திய அரசின் கணக்கு) கொல்லப்பட்டனர்.

18 ஆண்டுக்காலம் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது (அவசர நிலை காலம் தவிர) ஒரு பலம் வாய்ந்த ஆசிய சக்தியாக, உலக வல்லரசுகளுக்கு வளைந்து கொடுக்க மறுத்த ஒரு திமிரான ஜனநாயக நாடாக இந்தியா இருந்தது என்பதையும், இன்று அந்த நிலை இல்லை என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்