1950-களில் விளாதிமிர் நபகோவ் கார்னெல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுத்த ஒரு உரையில் "ஒரு பெண்ணை விட அதிக காலம் வாழ்ந்த ஒரு புத்தகம்" என `மேடம் பொவேரி' யைக் குறிப்பிடுகிறார். அவர் மேலும் இந்த நாவலை புகழ்ந்து பேசுகையில் - மாசாலா புனைகதைகளின் கீழ்த்தரமான விஷயங்களையும், கூடாஒழுக்கம் மற்றும் தற்கொலை போன்றவைகளை மிகவும் கவித்வமாக 19 ம் நூற்றாண்டின் வாழ்வை விவரிக்க பயன்படுத்துகிறார் பிளாபே என்கிறார்.
கதைக்களம் நார்மண்டி, காலம் 19 -ம் நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதி. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகனும், பிடிவாத குணமும், அயராது உழைக்கும் குணமுடையவனுமான சார்லஸ் பொவேரி என்ற கிராமப்புற 15 வயது இளைஞன் கல்விக்காக ரூயெனுக்கு வருகிறான். அவன் அவ்வளவு புத்திசாலியில்லையெனினும், அவன் அம்மாவின் தீராத கண்டிப்பால் ஒரு மருத்துவ அதிகாரியாகிறான். அதுவும் படிமுறையில் மிகவும் கீழ்நிலையில் உள்ள ஒரு மருத்துவனாகிறான்.
அவன் தாயார் அவனை ஓர் சிறிய தாலுகாவில் மருத்துவம் பார்க்க வசதி செய்து தருகிறாள், திருமணமும் செய்து வைக்கிறாள். அவன் மனைவி ஒரு விதவை, மேலும் இவனை விட வயதில் மூத்தவள், செல்வமுடையவள், ஆனாலும் பொறாமைக் குணமும், ஆதிக்க குணமும் நிரம்பியவள்.
இதனாலேயே சார்லஸ் தன்னுடைய நோயாளியான ரௌவால்ட் மற்றும் அவனின் அழகான பெண் `எம்மா' விடனும் நெருங்கிப் பழகுவதில் இன்பம் காண்கிறான். சார்லஸின் விதவை மனைவி எதிர்பாராதவிதமாக மரணமடைகிறாள். அவளின் மரணத்திற்குப் பிறகு - ஒரு சிறு காத்திருப்பிற்குப்பின் `எம்மா'வை மணக்கிறான். மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறான்.
ஆனால் எம்மா - மேடம் போவேரியான பிறகும், அதற்கு முன்னமேயும் கூட மிகையுணர்ச்சி - அசட்டுணர்ச்சி நாவல்களையும், கவிதைகளையும் படித்துபடித்து, `திருமணம் என்பது ஒரு ஆழமான உணர்ச்சிகளின் நிறைவேற்றக்களம்' என்று கதைகளில் வருவதுபோலவே வாழ்வும் என்ற கற்பனைக்குள் மிதந்து கொண்டிருக்கிறாள். தேனிலவுக்கு பிறகு அவளுக்கு மிகவும் சலிப்பு ஏற்படுகிறது. சார்லஸின் கற்பனையற்ற தட்டையான தினசரித்தனம் அவளின் திருமண வாழ்வு பற்றிய கற்பனைக்கதைகளின் கனவை சரித்துவிடுகிறது.
மார்க்லிஸ் ஆண்டர்வில்லியர்ஸ் என்ற செல்வந்தர் ஒரு விருந்துக்கு இருவரையும் அழைக்கிறார். அந்த விருந்தின் மிடுக்கு, ஆடம்பரம் இவளின் தற்போதைய சிறுநகர வாழ்க்கையின் மேல் வெறுப்படையச் செய்து, மிகவும் அமைதியற்றவளாகிறாள். அவள் பேஷன் பத்திரிகைகளை..
படித்தாள், வீட்டை அலங்காரம் செய்வதில் ஈடுபடுகிறாள். ஆனால் அவளின் வெறுப்பு ஒரு நோய் கூறு தன்மையை ஏற்படுத்திவிடுகிறது.
சார்லஸ் அவளின் உடல்நலம் கருதி (அவள் தற்போது ஒரு கர்ப்பிணி) வேறொரு சிறிய நகரத்திற்கு குடிபெயர்கிறான்.
இந்த புதிய யான் வில்லி என்ற நகரம் ஒரு தூங்கு மூஞ்சி நகரமாக இருக்கிறது. அங்கு தம்பதியினரை வரவேற்கிறான் ஹோமெய்ஸ் என்ற மருந்துக்டைக்காரன். இவனின் சிப்பந்தியான லியான் எம்மா பொவேரியுடன் ரொமான்டிக் கனவுகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவளைக் கவர்கின்றான். எம்மா பொவேரி லியானுடனான காதல் குறித்து மட்டற்ற கனவுகளில் நிலைக்கிறாள். ஆனால் காதல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. லியோனோ இந்த சிறு நகர வாழ்வில் சலிப்புற்று, பாரீஸ் சென்று தன் அதிர்ஷ்டத்தை விருத்தி செய்ய கிளம்புகிறான்.
உணர்ச்சியளவில் மிகவும் பேதலித்துப்போன எம்மா போவேரி அருகிலிருக்கும் திருமணமாகாத நாகரீக ரூடால்ப் போலங்கர் என்பவனால் கவரப்படுகிறாள். இந்த நட்பு அவனைப் பொறுத்தவரையில் ஒரு பொழுதுபோக்கு. ஆனால் பொவேரியோ தான் ஏங்கும் வாழ்வின் லட்சிய வடிகாலே அவன் என்பது போல் மீண்டும் காதல் வயப்படுகிறாள். விளைவைப் பற்றி கவலைப்படாத அவளது அசட்டுத்துணிச்சல் - தன் கணவனுக்கு தெரியாமலேயே - பக்கத்து ஊர் வியாபாரியிடம் நிறைய கடன் வாங்க வைக்கிறது.
இதற்கிடையே மருந்துக்கடைக்காரன் ஹோமெய் கோணக்காலால் அவதியுறும் ஒரு பையனின் காலை சரி செய்யும் அறுவை சிகிச்சைக்காக சார்லஸ் பொவேரியை தூண்டுகிறான். எம்மா பொவேரியும் கணவனின் தொழில் வெற்றிக்காக அவனுடன் உறுதுணையாக இருக்கிறாள். தகுந்த திறமையில்லாமலேயே சார்லஸ் அறுவை சிகிச்சை செய்கிறான். கால் சரி செய்ய முடியாத அளவிற்கு மரத்துப்போய்விட்டதையடுத்து வேறொரு நிபுணர் அந்தப் பையனின் காலை எடுத்துவிடுமாறு ஆலோசனை செய்கிறார். நோயாளியின் கதறல் கிராமத்தினூடாக பரவுவதைத் தொடாந்து சார்லஸ் மனமுடைந்து, தோல்வியால் ஏற்பட்ட அவமானத்தால் வீட்டிலேயே முடங்கிவிடுகிறான். எம்மா பொவேரி கணவனை வெறுக்கிறாள்.
ரூடோல்ப் உடன் வீட்டை விட்டு வெளியேற தீர்மானிக்கிறாள். ரூடால்ஃபோ அவளுடனான உறவில் சலிப்படைந்து அவளுடன் நிரந்தரமான உறவு கொள்ள பயம் கொள்கிறான். பழக்கவழக்கங்களை நிறுத்திக் கொள்வோம் என்பதாக அவளுக்கு கடிதமும் எழுதுகிறான். இதனால் கடுமையான உடல் குலைவு ஏற்பட்டு பல மாதங்கள் உடல் நலமில்லாமல் அவதியுறுகிறாள் எம்மா பொவேரி. பிறகு மெதுவாக குணமடையும் அவள் `சமயம்' சார்ந்த சிந்தனைகளில் அதிகம் ஈடுபடுகிறாள். இந்த மத ஈடுபாடும் பழைய ரொமான்டிக் ஈடுபாடு போலவே மிகையுணர்ச்சியுடன்தான் இருக்கிறது. கடைசியில் நன்றாக குணம் அடைந்த பிறகு அவளின் கணவன் ரூயென் நகரத்தின் ஒரு இசை நாடகத்திற்கு அழைத்துச் செல்ல அங்கு தன் பழைய காதலன் லியானை எதேச்சையாக சந்திக்கிறாள். அவன் இப்போது பாரீஸிலிருந்து திரும்பி வந்துவிட்டான்.
லியானுடன் மீண்டும் தன் காதலுறவை ஆரம்பிக்கிறாள் பொவேரி, லியானிடம் இசை கற்றுக் கொள்வதாக நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அவனைச் சந்திக்க வாரம் ஒரு முறை ரூயென் நகரத்திற்குச் செல்ல தொடங்குகிறாள். இந்தப் பயணத்திற்கான பணச் செலவிற்காக..
பக்கத்துகிராம வியாபாரி லியுரேயிடம் மேலும் அதிகமாக கடன் வாங்கத்துவங்குகிறாள். தன் கணவனின் கணக்கு வழக்குகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கணவனை வற்புறுத்துகிறாள்.
நோயாளிகள் செலுத்தும் பணத்திலும் தன் தலையீட்டை நுழைக்கிறாள். கணவனுக்குத் தெரியாமலேயே சொத்தைக்கூட விற்குத் துணிந்துவிடுகிறாள். இறுதியில் லியானுடனான அவள் உறவு ஒரு முடிவுக்கு வருகிறது. அவன் தன்முன்னேற்றத்தை பாதிக்கும் உறவாக இதை நினைக்க, பொவேரியோ, திருமணம் போலவே தகாத உறவுகளும் அற்பமானதாகவே உணர்கிறாள். ஒரு நாள் லியானுடன் சண்டையிட்டு வந்து வீடு வரும்போது அவள் கடன் 320 பவுண்டு உடனடியாக திருப்ப வேண்டுமென கோர்ட்டு தீர்ப்பு வருகிறது.
தற்போது அரைப்பைத்தியமான மனநிலையில், எம்மா பொவேரி ஒவ்வொரு வட்டிக்கடைக்காரரையும் அணுகுகிறாள். லியானை அணுகி அவனிடம் ஒப்படைக்கப்பட்ட உடைமையை கையாடல் செய்ய தூண்டுகிறாள். ரூடால்பிடம் கெஞ்சுகிறாள். அவன் அவளை கண்டு கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிடுகிறான். ஒரு வக்கீலை அணுகி உதவி கேட்கிறாள். ஆனால் அவனோ அவளின் இந்த நிலைமையை தனக்குத் சாதகமாக உபயோகித்துக் கொள்ளப்பார்க்கிறான்.
இறுதியில் ஹோமெயின் மருந்துக்கடைக்குள் நுழைந்து அவனின் சிப்பந்தியிடம் சாவியைக் கொடுக்குமாறு நிர்பந்திக்கிறாள். கையளவு நஞ்சினை எடுத்து விழுங்கிவிட்டு, மரணத்தை எதிர்பார்த்து வீட்டிற்கு வருகிறாள். அவளின் வலி அதிகமாகிறது. மருத்துவர் வருவதற்கு அதிக நேரம் பிடிக்க, எம்மா பொவேரி என்ற கற்பனைக்கதைகளால் பீடிக்கப்பட்ட பெண் மரணத்திற்கு பலியாகிறாள்.
இறுதிச் சடங்கிற்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சார்லஸ், சிறிது சிறிதாக இறந்த மனைவியின் மீறுதல்களையும் நேர்மையின்மையும் தெரிந்து கொள்கிறான். ரூடால்ப் மற்றும் லியானிடமிருந்து தன்மனைவி எழுதிய காதல் கடிதங்களைப் பெற்று, தன் மனைவி தன்னை நேசிக்கவில்லை என்ற காலங்கடந்த உண்மையை தெரிந்து கொள்கிறான். அவனும் மரணம் அடைகிறான்.
அவர்களின் பெண் குழந்தை பாட்டியால் வளர்க்கப்படுகிறது. அதே வருடம் பாட்டியும் இறக்கவே, மகள் ஒரு ஏழை அத்தையிடம் வளர்கிறாள். அத்தை அவளை ஒரு தொழிற்சாலையில் வேலையில் சேர்த்து விடுகிறாள்.
வீரதீர காவியக் கதைகளைப் படிக்கும் ஒருவனின் வாழ்வை நக்கல், நையாண்டியுடன் சித்தரித்த டான்குவிசாட் போலவே, பிளாபெ ரொமாண்டிக் - மிகையுணர்ச்சிக் கதைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை சோகமான எதார்த்த நடையில் சித்தரிக்கிறார். வாழ்விற்கும் கற்பனைக்கும் இடையிலான இடைவெளியை உணராத மரமண்டைப் பெண்ணின் சுய-அழிவைக் காட்டுவதற்காகவே இதை எழுதியிருக்கிறார் கஸ்தேவ் பிளாபெர். இவரது இந்தச் சித்திரம் பிரெஞ்சு மொழியில் `பொவெரிசம்' என்ற புதிய வார்த்தையையே புழக்கத்திற்கு கொண்டு வந்தது.
ஆசிரியருக்கு பெண்களின் கால்கள், பெண்களின் காலணிகள் மேல் ஒரு பதிலி மோகமும் (Fetish) பீடிப்பு மனோநிலையும் உள்ளது. மரியோ வார்கஸ் - லோசா `நிரந்தர சிற்றின்ப களியாட்டம்' என்ற தன் புத்தகத்தில் பிளாபேயின் `மேடம் பொவேரி' என்ற நாவலில் வரும் கால், காலணிகள் மேல் ஆசிரியருக்கு இருக்கும் பாலியல் பற்றுதல்களை விவரிக்கிறார்.
`மேடம் பொவேரி' பற்றி மரியா வார்கஸ் லோசா கூறுகிறார் : "பின்னால் வரவிருக்கும் நூற்றாண்டின் தொழில் சமூகங்களால் ஆண், பெண் இருவரின் அந்நியமாதலின் முதல் கூறுகளை இநாவல் கூறுகிறது. தனிமனித வாழ்வில் நவீன வாழ்க்கை நிரந்தரமாக்கிய `சூனியத்தன்மை' மனக்கிளர்ச்சியின் வடிகாலாக நுகர்வுக்கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்க பணிக்கிறது. ஆசைக்கும் அதன் பூர்த்திக்கும் இடையேயான இடைவெளியை நாடகமாக்குகிறாள் எம்மா பொவேரி".
எல்லா விஷயங்களிலும் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் `இன்மை'யை நாமும் கற்பனைக்கதைகள், பாலுறவு, என நுழைந்து பூர்த்தி செய்ய விரும்புகிறோம். அதனாலேயே எம்மா பொவேரியுடன் நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். பெண்ணியவாதிகள் தங்கள் சொந்த சலிப்பிற்கு இந்நாவலை கை கொள்ள விழைகின்றனர். ஆனால் நாவலோ நவீன உலகின் `மனிதனின் நிலை' பற்றி பொதுத் தன்மையுடன் பேசுவதாகவே தோன்றுகிறது.
இறுதியாக ஒரு கேள்வி, மிகையுணர்ச்சியால் கற்பனை கதைகளில் வாழ்ந்து எதார்த்தத்தில் தோற்றதாக எள்ளும், வருந்தும் ஒரு எழுத்தாளர், தன்னைத்தானே கேள்விக்கு, கேலிக்குட்படுத்திக் கொள்கிறாரோ?