"புதிய ஆங்கில இலக்கியங்கள்" - ஆதித்தனர் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்!
வியாழன், 21 பிப்ரவரி 2013 (13:29 IST)
FILE
ஆங்கிலக் கல்வியியல் வட்டாரங்களில் இலக்கியக் கருத்தரங்கங்கள் நடைபெறுவது என்பது புதிய விஷயமல்ல. ஆனால் திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலை, விஞ்ஞானக் கால்லூரியில் நடைபெற்ற இந்த இலக்கியக் கருத்தரங்கில் இந்திய வம்சாவளி கனடா நாட்டுக் கவிஞர் ஸ்டீபன் கில் என்பவரை அழைத்து அவரது கருத்துக்களை அரங்கில் ஒலிக்க செய்து அவரை கவுரவித்தது சற்று புதிய விஷயம்தான்.
இந்தக் கருத்தரங்கத்தை ஆதித்தனார் கலை, விஞஞானக் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த 2 நாள் கருத்தரங்கில் ( 18 மற்றும் 19) பல்வேறு கல்லூரிகளிருந்து பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ மாணவிகள் பங்கேற்று கவிஞர் ஸ்டீபன் கில்லுடன் ஆவலுடன் உரையாடி, கேள்வி கேட்டு அவரது கருத்துக்களை மேலும் செழுமையடையச் செய்தனர்.
முதல் நாள் முதல் அமர்விலேயே ஸ்டீபன் கில் தனது வாழ்வனுபவம், படைப்புக்கு உந்துதலான தனது இன்றியமையாத வாழ்க்கைக் கணங்கள், கட்டங்கள், உலக அமைதி, சமாதானம், ஜனநாயகம் ஆகிய சிந்தனைகளின் தாக்கம் தனக்கு எப்படி ஏற்பட்டது, அதற்குக் காரணமான நிகழ்வுகள் என்னன்ன என்று உரை நிக்ழ்த்தினார்.
இந்திய பாகிஸ்தான், பிரிவினை காலக்கட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகள் தனது பால்யபருவத்தை மிகவும் பாதித்தது என்றும் அது ஒரு பெரிய துன்ப நினைவாக, நினைவுத் துன்பமாக இன்றும் தன் மன மூலையில் சுமந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் உலக அமைதி, சமாதானத்தை வலியுறுத்தும் ஒரே சமகாலப் படைப்பாளி நான் என்று அவர் மார்தட்டுகிறார்.
நாவல் விமர்சனங்கள், கவிதைத் தொகுப்புகள் என்று இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் கில். இவருக்கு ஆங்கிலம் தவிர உருது, இந்தி, பஞ்சாபி மொழிகளிலும் பாண்டித்தியம் உண்டு. அமைதி மற்றும் சமாதானத்திற்கான இலக்கிய விருதுகளை இவர் நிறைய பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் பிறந்த ஸ்டீபன் கில், இந்தியாவில் வளர்ந்தார். பிறகு எத்தியோப்பியாவில் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிவிட்டு இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
ஆனாலும் இவருடன் தனியாகப் பேசியபோது தனது வயதை அவர் கூற மறுத்து விட்டார். வயதைக் கூறினால் அது தனது படைப்பைப் பற்றிய முன் அனுமானத்திற்கும் முன் தவிர்ப்பிற்கும் வழிவக்கும் என்று கருதுவதாக அவர் தெரிவித்தது படைப்பாளிகளுக்குள்ளும் இருக்கும் ஒருவித தற்காப்புணர்வை அறிவுறுத்தியது.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் உலக அரசாங்கம், அமைதியின் வழிமுறையில் அமைதி, சமாதானம், உலக அமைதி இதுதான் இவரது கருத்தியல்.
இவர் உரை முடிந்தபிறகு பங்கேற்பாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்தார். அதில் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் என்று ஒருவர் கேள்வி கேட்க அதற்கு ஸ்டீபன் கில் என்று தன் பெயரையே கூறியது அரங்கத்தில் ஒருவிதமான வக்ரோக்தியான நகைப்பை (Ironic Smile) ஏற்படுத்தியது.
அமைதியே அழகு, அமைதியே படைப்பாற்றல், வாழ்க்கையின் அர்த்தம் அமைதி என்பதுதான் இவரது வாழ்க்கை, படைப்பு, அரசியல் கொள்கை. பிரிவினை வன்முறைகள் இவரை கடுமையாக பாதித்துள்ளது அவரது உரையில் வெளிப்படையாக தெரிந்தது.
முதல் அமர்வில் இவரது உரை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வில் இந்தக் கருத்தரங்கின் முக்கிய அங்கம் அரங்கேறியது.
FILE
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர் நோயல் ஜோசப் இருதயராஜ் சிந்தனைச் சட்டக மாற்றங்களை மிக விரிவாக, தத்துவ, இலக்கிய வரலாற்று நுட்பங்களுடன் விளக்கினார். இந்த உரை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை இலக்கியத் திறனாய்வில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் புத்துணர்வு கொடுப்பதாகவும் புத்தொளி ஊட்டியதாகவும் அமைந்தது.
இலக்கியக் கோட்பாடு, இலக்கிய படைப்புக் காலக்கட்டங்கள், விஞ்ஞானக் கோட்பாடு, தத்துவக் கோட்பாடு, மொழியியல், சமூகவியல் ஆகிய துறைகளில் அடிப்படைச் சிந்தனைச் சட்டக மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தது என்பதை சில வேளைகளில் கோடிகாட்டியும் பல தருணங்களில் ஆழமாகவும் விவரித்தார் நோயல் இருதயராஜ்.
நியூ இங்கிலிஷ் லிட்ரேச்சர்ஸ் என்ற கருத்தரங்கத் தலைப்பில் உள்ள நியூ என்ற வார்த்தையை எடுத்து கொண்டு நோயல் தத்துவார்த்தமாக அலசினார். புதிது என்ற ஒன்று இருக்க முடியுமா? அப்படியிருந்தால் அதன் வகைமாதிரிகள் எப்படியிருக்கும், அதன் சட்டகம் எப்படி இருக்க முடியும், அதன் சாத்திய, அசாத்தியங்கள் பற்றி இவர் எழுப்பிய கேள்விகள், வெளிக்கொணர்ந்து வந்த சிந்தனைகள் மிகவும் முக்கியமானவை கோட்பாட்டுத் த்றையில் நிபுணத்துவம் அடைய விரும்புவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை.
புதிய ஆங்கில இலக்கியங்கள் என்பது பிரிட்டன், அமெரிக்க ஆங்கில இலக்கியங்கள் அல்லாத தற்போதைய எழுச்சியான பின் காலனிய எழுத்து முறைகள், ஆப்பிரிக்க இலக்கியங்கள், கரீபிய இலக்கியங்கள், இந்திய, பாகிஸ்தானிய இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் இன்ன பிற, இதுவரை மையத்திற்குள் வராத விளிம்பு நிலை இலக்கிய ஆக்கங்களைக் குறிக்கிறது.
காலனியாதிக்க நாடுகள் காலனி அடிமைகளைப்பற்றி சிந்தித்த சிந்தனைகள், வரைந்த சித்திரங்கள், கட்டமைத்த சொல்லாடல்கள், எழுப்பிய மாறாத நிலையானபிம்பங்கள் ஆகியவற்றுக்கு அடியில் உள்ள ஏகாதிபத்திய எந்திரத்தை, அதன் தொழிற்பாடுகளை தற்போது பின் காலனிய எழ்த்தாளர்கள், சிந்தனையாளர்கள், கோட்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் திருச்செந்தூரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கம் மிக முக்கியாமன ஒரு பங்களிப்பை செய்துள்ளது என்று கூறவேண்டும்.