துபாயில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகனுக்கு கவுரவிப்பு

செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (16:19 IST)
அரபுநாடுகள் தமிழ் மன்றத்தின் 2012ஆம் இலக்கியக் கூடல் நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களான ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் கவுரவிக்கப்பட்டனர்.

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்௨012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தளர் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் இருவரையும் பாராட்டும் வகையில் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துபாய் கராமாவில் அமைந்துள்ள சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீரகத்தின் எழுத்தாளரான ஆப்தீன் முன்னிலை வகிக்க, அமைப்பின் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வரவேற்புரையின் போது, துபாயில் இதுபோன்ற இலக்கிய விழாக்கள் குறைவாகவே நடைபெறுவதையும், திரைத்துறை சார்ந்த நிகழ்வுகளுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதையும் வருந்தத்தக்கது என தெரிவித்த அவர், இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு மாற்றாக அமையுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனைக் குறித்த அறிமுகவுரைக்குப் பின்னர், பேச வந்த நாஞ்சில் நாடன் தமிழின் சொல்வளமையைக் குறித்து பேசினார். 1330 குறள்களில், குறைந்த பட்சம் 4000 தனித்துவம் நிறைந்த சொற்கள் உபயோகமாகி இருக்கும், கம்பராமாயணத்தில் 12,500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான சொற்களை பயன்படுத்தியிருக்கலாம்.

கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம் - ஆனால் எவ்வளவு பயன்படுகிறது? பல்லாயிரக்கணக்கான சொற்கள் தமிழில் இருந்தும் நல்ல படைப்பாளிகள்கூட நாலாயிரம் சொற்களைத் தாண்ட முடிவதில்லை என்பதையும், சாதாரணமாக எழுதுபவர்கள் 200க்குள்ளேயே முடங்கிப் போவதையும் தனக்கேயுரித்தான ஆதங்கத்துடனும் நகைச்சுவையுடனும் விவரித்தார்.

கம்ப ராமாயணம் தொடங்கி தமிழின் பல்வேறு இலக்கிய நூல்களையும் அடிக்கோடிட்டு காணாமல்போன சொற்களின் பட்டியலை எடுத்துரைத்து அவற்றையெல்லாம் தமிழில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் அழகுற எடுத்துச் சொல்வதாக அமைந்தது அவரது பேச்சு.

எழுத்தாளர் ஜெயமோகன் குறித்த அறிமுக உரையை சித்தநாத பூபதி வழங்க, அதனைத் தொடர்ந்து பேச வந்த எழுத்தாளர் ஜெயமோகன், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காப்பியங்களைக் குறித்து விரிவான உரை நிகழ்த்தினார்.

சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார். மணிமேகலை சென்றடைந்த பளிங்கு மண்டபமும் கையில் இருந்த மாலையில் கண்ணீரும் பெண் நிலைமையை அன்றில் இருந்து ஏன், சிவனும் உமையாளும் ஆடிய ஆடு புலி ஆட்டத்தில் இருந்தே லா.ச.ராவின் ஆடு புலி ஆட்டம் வரை தொடர்கிறது என்றார்.

கண்ணகி எறிந்த இடது முலை எப்படி மணிமேகலையின் கையில் அட்சய பாத்திரமாக மாறுகிறதென்பதை மிகத் தெளிவாக விளக்கினார். முலை என்பது கருணையின் குறியீடாக இருப்பதாகவும் அதனை அறச்சீற்றம் கொள்ளும் கண்ணகி எறிந்த பின்னர் தொடர்கின்ற மணிமேகலைக் காப்பியத்தில் அதுவே அட்சய பாத்திரமாக அள்ளக் குறையாத கருணையாகப் பிரவாகம் எடுப்பதும் இரு காப்பியங்களுக்குமுள்ள நெருக்கமான முடிச்சு என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்