2007ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டன் நாவலாசிரியை டோரிஸ் லெஸ்ஸிங்கிற்கு கிடைத்துள்ளது.
88வது வயதில் நோபல் பரிசு பெறும் முதல் எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இது வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவரையும் சேர்த்து 11 பெண் எழுத்தாளர்களுக்கு கிடைத்துள்ளது.
1919-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்சியாவில் (இப்போது இரான்) பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆல்ஃப்ரட் டெய்லர், தாயார் எமிலி மௌட் டெய்லர். பெர்சியாவிலிருந்து குழந்தை பிராயத்திலேயே இவரது குடும்பம் அப்போதைய பிரிட்டிஷ் காலனியான ருடீஷியாவிற்கு புலம் பெயர்ந்தது, ருடீஷியா தற்போது ஜிம்பாப்வே.
செல்வச் செழிப்பான ஒரு சூழலில்தான் லெஸ்ஸிங் வளர்ந்தார். இவரது தந்தை ருடீஷியாவில் 1000 ஏக்கர்கள் நிலம் வாங்கி விவசாயம் செய்தார். ஆனால் வேளாண்மையில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிட்டவில்லை.
webdunia photo
WD
தற்போது ஹராரே என்று அழைக்கப்படும் ஜிம்பாப்வே தலைநகர் அப்போது சாலிஸ்பரி என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள டொமினிகன் பெண்கள் உயர் நிலை பள்ளியில் கல்வி பயின்றார் டோரிஸ் லெஸ்ஸிங். 14 வயதில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு, வீட்டில் தானாகவே படித்தார். 15 வயதில் செவிலியர் பணியில் சேர்ந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அவர் அரசியல், சமூகவியல் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். 1937ஆம் ஆண்டு வாக்கில் எழுத தொடங்கினார். பிறகு தற்போதைய ஹராரேயில் தொலைபேசி ஆபரேட்டராக பணியாற்றினார். அப்போதுதான் இவருக்கு பிராங்க் விஸ்டம் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் 2 குழந்தைகள் பிறந்தன. 1943ல் இருவரும் பிரிந்தனர்.
அதன் பிறகு இடதுசாரி புத்தக் கிளப் ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்டது. இங்குதான் தனது 2வது கணவர் காட்ஃப்ரைட் லெஸ்ஸிங் என்பவரை சந்தித்தார். இரண்டாவது திருமணம் நடந்து, மீண்டும் ஒரு குழந்தை பிறகு 1949ல் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
தனது மகனுடன் 1949ல் லண்டன் வந்து சேர்கிறார் டோரிஸ் லெஸ்ஸிங். இப்போதுதான் இவரது முதல் நாவல் "தி கிராஸ் இஸ் சிங்கிங்" (The Grass is Singing) என்ற முதல் நாவல் வெளியாகிறது.
தற்போதைய ஜிம்பாவே அப்போதைய ரூடீஷியாவில் நிலவிய நிறவெறி பேதங்களை அடிப்படையாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டது. வெள்ளை இன பெண்ணிற்கும் கறுப்பரின பணியாளருக்கும் இடையே தோல்வியடையும் ஒரு காதலை கதைக்களமாக அதில் அமைத்திருந்தார் லெஸ்ஸிங். அந்த நாவல் வெளிவந்ததும் ஜிம்பாப்வேயில் இலக்கிய தாக்கம் ஏற்படுத்திய ஒரு முக்கிய எழுத்தாளரானார் லெஸ்ஸிங்.
இவரது இலக்கிய பாணியை ஒரு 3 காலக்கட்டமாக விமர்சகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 1944- - 56 காலக் கட்டத்தில் கம்யூனிச தாக்க எழுத்துக்கள், அதன் பிறகு உளவியல் பாங்கான எழுத்துக்கள் (1956- 69). அதன் பிறகு விஞ்ஞான புனைக்கதை வாயிலாக சூஃபி இஸ்லாமிய தத்துவங்களை வெளிப்படுத்துதல் என்று 3 காலக் கட்டங்கள் உள்ளன.
தற்போது நோபல் பரிசிற்காக பரிந்துரை செய்யப்பட்ட "தி கோல்டன் நோட் புக்" (The Golden Notebook) அனைத்து விமர்சகர்களாலும் பெண்ணிய மற்றும் பெண் நிலைவாத எழுத்துக்களின் மூலாதார நாவலாக கருதப்படுகிறது. இது 1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த நாவலில் பெண் எழுத்தாளர் ஒருவரின் அக உலகம் மற்றும் அவளது சமூக சஞ்சாரம் ஆகியவை எவ்வாறு உடைந்து சுக்கு நூறாகிறது என்பது புதுமையான கதை சொல்லல் முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அன்னா உல்ஃப் என்ற எழுத்தாளர்தான் இந்த நாவலின் எழுத்தாளர் கதை நாயகி. தனது வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் 4 நோட்டுப் புத்தகங்களில் இந்த எழுத்தாளர் பதிவு செய்கிறார். முதல் பகுதியில் சுதந்திர பெண் என்று முரணான தலைப்பிடப்பட்ட பகுதியில் எதார்த்த நடை வெளிப்படுகிறது. 4 நோட்டுப் புத்தகங்களில் கறுப்புப் புத்தகம் அன்னா உல்ஃப் மத்திய ஆப்பிரிக்காவில் தனது நினைவுகளை பதிவு செய்கிறது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனது அனுபவங்களை பதிவு செய்வது சிகப்பு நோட்டுப்புத்தகம். தனது சோகமான காதல் கதைக்கு மஞ்சள் நோட்டுப் புத்தகம், தனது நினவுகள், கனவுகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வ எண்ணங்களுக்காக நீல நோட்டுப்புத்தகம் என்ற 4 அதிகாரங்களுடன் கடைசியாக இந்த அனைத்து அனுபவங்களையும் கதையாடலையும் ஒருண்க்கிணைத்து நோக்கும் தங்க நோட்டுப் புத்தகம்.
வேலை,காதல், காமம், தாய்மை மற்றும் அரசியல், சமுதாயம் ஆகிய வெளிகளில் பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களையும், மன உளைச்சல்களையும் வெளிப்படுத்தும் ஒரு நாவல் இது என்று பெரும் வரவேற்பை இந்த நாவல் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைப் பற்றி அமெரிக்க இலக்கிய தகர்ப்பு விமர்சகர் ஹெரால்ட் ப்ளூம் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். அதாவது, “நோபல் குழுவினரின் இந்த முடிவு சுத்தமாக அரசியல் சீர்திருத்த நோக்கமுடையது, இலக்கிய மதிப்பீடுகளுக்கு தொடர்புடையது அல்ல” என்று கடுமையாக சாடியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் டோரிஸ் லெஸ்ஸிங்கின் ஆரம்ப கால எழுத்துகளில் பாராட்டக்குடிய சில அம்சங்கள் இருந்ததாகவும், ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அவரது எழுத்துக்களை படிக்கக் கூட முடியவில்லை என்றும், 4ம் தர விஞ்ஞான புனைகதைகளை அவர் எழுதி வருகிறார் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.