குவந்தனாமோ வதைக் கவிதைகள்: அமெரிக்க அராஜகத்திற்கு எதிராக கவிதைப்போர்!
வியாழன், 31 ஜனவரி 2013 (19:24 IST)
FILE
குவந்தனாமோவிலிருந்து கவிதைகள், கைதிகள் பேசுகின்றனர், என்ற தலைப்பில் ஒரு புத்தகம் 22 வலி நிறைந்த கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ளது. 22 கவிதைகள் உள்ள இந்தத் தொகுப்பை கொண்டு வந்தவர் மார்க் ஃபால்காஃப் (Marc Falkoff) என்பவர்.
இந்தப் புத்தகத்திற்கு அவர் ஒரு அறிமுகம் எழுதியுள்ளார். அனைவரும் படித்து சிந்திக்கவேண்டிய புத்தகம் மற்றும் அறிமுகம் ஆகும் இது.
இன்று பயங்கரவாதத்திற்கு எதிராக... ஜனநாயகத்தை உருவாக்க, நீதியை நிலைநாட்ட... போன்ற பெயர்களில் அமெரிக்காவின் போர் தனது கொடுங்கோல் வக்கிர முகத்தைக் காட்டி வருகிறது.
விஸ்வரூபம் திரைப்படத்தில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகளை சித்தரிக்கவில்லை, தான்
FILE
இஸ்லாமியரின் தோழன், மதம் எனக்கு முக்கியமல்ல மனிதமே முக்கியம் என்றெல்லாம் 'புர்'விடும் கமல்ஹாசன், அமெரிக்காவில் தன்னை விமான நிலையத்தில் பேண்ட்டை உருவியதைக் (அவரது பெயரில் ஹசன் உள்ளதாம் அது முஸ்லிம் பெயராம்) கூட மறந்து முழுக்க முழுக்க அமெரிக்க அடிவருடித் திரைப்படத்தை எடுத்துள்ளார்.
குவந்தனாமோ வதைக்கூடத்தில் அடைக்கப்பட்ட முஸ்லிம்களை துன்புறுத்தக் கடைபிடித்த பல வழிமுறைகளில் ஒன்றுதான் அவர்களது புனித பிரதியான குர் ஆனை கண்டபடி இழிவுபடுத்துவது. அமெரிக்க ராணுவ வீரர்கள் குவந்தனாமோ பே வதைக்கூடத்தில் குர் ஆனை கண்டபடி வசை பாடுவது அந்தப் பிரதியை தாறுமாறான பிரயோகத்திற்கு உட்படுத்துவது இது அத்தனையையும் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட முஸ்லிம் கைதிகள் பார்த்தே ஆகவேண்டும். இதுதான் நடந்தது என்று இந்தக் கவிதை நூலை கொண்டு வந்துள்ள மார்க் ஃபால்காஃப் தனது அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதிகள் குர் ஆனை படித்து விட்டு கொலைபாதகங்களை செய்வதாக சித்தரித்துள்ளார்! இது எப்படி இருக்கிறது?
இனி மார்க் ஃபால்காஃப் அந்த அறிமுகத்தில் கூறியுள்ள விஷயங்கள் வருமாறு:
இந்த கவிதைத் தொகுப்பில் உள்ள 22 கவிதைகளும் கியூபாவில் உள்ள அமெரிக்க வதைக்கூடமான குவந்தனாமோ பே-யில் உள்ள சிறைக்கதிகளான முஸ்லிம்களால் எழுதப்பட்டது. குவந்தனாமோவில் உள்ள அனைத்து கைதிகளைப்போலவே இந்த கவிதைகளை எழுதியதும் முஸ்லிம் கைதிகளே.
இந்த சிறையில் அவர்கள் சுமார் 6 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் இருந்து வருகின்றனர். குற்றம் என்னவென்று கூறாமலேயே அடைக்கப்பட்டுள்ளனர். நீதிவிசாரணை எதுவும் கிடையாது. ஜெனீவா கன்வென்ஷனின் எந்த ஒரு அடிப்படை பாதுகாப்பும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தங்களது சக கைதிகளிடையே ரகசியமாக இந்தக் கவிதைகள் பரவியதை தவிர இந்தக் கவிதைகள் வெளி உலகிற்கு வரவில்லை.
தற்போது இந்தக் கவிதைகள் அமெரிக்க பாதுகாப்பு துறை, ராணுவத்துறையினால் சிலரது பெரு முயற்சிக்கு பிறகு வெளியிடும் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது. அமெரிக்காவின் மிகக் கொடூரமான இந்த சிறையில் நடந்தவற்றை கைதிகளின் குரல்களிலேயே இப்போது வெளி உலகம் தெரிந்து கொள்ள முடிந்துள்ளது.
நாங்கள் சிலர் 2004ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ.-யின் ரகசிய மட்ட பாதுகாப்பு அனுமதிகளை பெற்று நவம்பர் மாதம் குவந்தனாமோ சென்றோம். அங்கு நாங்கள் கேள்விப்பட்ட விஷயம் மிகவும் அதிர்ச்சிகரமானது. 3 ஆண்டுகள் கைதிகளை தனிமையில் வைத்து வாட்டுவது, தொடர்ந்து கடுமையாக இழிவு படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை சித்தரவதை செய்து சந்தோஷம் காணும் நோக்கத்துடன் மனிதன் சாதாரணமாக நிற்க, உட்கார முடியாத நிலைகளிலெல்லாம் அவர்களை பாடாய்படுத்தியுள்ளனர். தூங்க முடியாது. தூங்க அனுமதியில்லை. பயித்தியம் பிடித்து விடும்போல சப்தத்தில் இசையை ஒலிபரப்புவது, முடிவுறா விசாரணைகளின் போது கடும் வெப்பம் அல்லது கடும் குளிர் ஆகிய சீதோஷ்ண நிலையில் அவர்கள் சித்தரவதை செய்யபட்டுள்ளனர்.
FILE
அவர்கள் பாலியல் ரீதியாக மிகுந்த வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். செய்தது அமெரிக்க பெண் ராணுவ அதிகாரிகள். விசுவாசமான முஸ்லிம்கள் அவர்கள் என்று தெரிந்தே அவர்களது உறுப்பை வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, இழிவு படுத்துவது என்று அந்த பெண் அதிகாரிகள் சித்தரவதை செய்துள்ளனர்.
சித்தரவதைக்குப் பிறகு சாதாரணமாக கொடுக்கப்படும் மருத்துவ உதவியும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் விசாரிக்கப்பட்டுள்ளனர். விசாரணையின் போது பேச மறுத்தால் அவர்கள் குடும்பத்தை துன்புறுத்துவோம் என்று அமெரிக்க ராணுவத்தினரால் மிரட்டப்பட்டுள்ளனர்.
இஸ்லாமின் 5 முக்கியத் தூண்களின் ஒன்றான தினசரி தொழுகை செய்ய அவர்களை அனுமதிக்கவில்லை. அமெரிக்க ராணுவத்தினர் குர் ஆனை முறையற்ற விதத்தில் கையாள்வதை முஸ்லிம் கைதிகள் பார்த்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை வைத்துக் கொண்டு முதலில் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. நாங்கள் அங்கு தெர்விக்கப்பட்ட விஷயங்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானவை எனவே அமெரிக்க ராணுவ மையமான பென்டனகனின் 'முன்னுரிமை மதிப்பீட்டு குழு' அனுமதி அளித்த பிறகே வெளியே நாங்கள் இதனை கூறமுடியும் என்று ராணுவத்தினர் எங்களுக்கு விளக்கினர்.
FILE
இந்த மதிப்பீட்டு குழு முதலில் கைதிகளுக்கு செய்த இழிவு, வதை முதலியவற்றை மறைத்து ஒழிக்கவே தனது அதிகாரத்தை பயன்படுத்தியது. எங்கள் குறிப்புகள் "வெளியிடத்த்குந்தவை அல்ல" (கிளாசிஃபைடு) என்ற முத்திரையுடன் திரும்பி வந்தது.
அதாவது எங்களுடைய குறிப்புகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளக்க்கூடியதல்ல. ஏனெனில் அது விசாரணை முறையை வெளிப்படுத்துவதாக உள்ளது. ராணுவம் அதனை ரகசியமாக வைத்திருப்பதற்கான நியாயம் உள்ளது என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தொடரப்படும் என்ற அச்சுறுத்தலின் பேரிலேயே, கடைசியில் அதுவும் ஒரு இடையீடு வழியாக, கைதிகளின் வாக்குமூலம் வழியாகவே வெளியிட அனுமதி வழங்க பென்டகன் மறுபரிசீலனை செய்யவேண்டியதாயிற்று.
கைதிகளின் குரல்கள் வெளியே கேட்கப்படவேண்டும் என்பதற்கான எங்களது போராட்டத்தை பிரதிநித்துவம் செய்வதே இந்தக் கவிதை தொகுதி. இந்தத் தொகுப்பே - ஏன் கவிதைகள் அடங்கிய இந்தப் புத்தகம்- இருப்பதே ஒரு வியத்தகு அற்புதம்தான். குவந்தனாமோ முஸ்லிம் கைதிகள் கொடுத்த ஆன்ம/உயிர்க்காவு ஆழம் காண முடியாதது.
வெளி உலகிலிருந்து முற்றிலும் அவர்கள் துண்டிக்கப்பட்டனர், நடப்பு நிகழ்வுகள் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாமல் அடிக்கபட்டது. எப்போதாவது குடும்ப உறவினர்களிடமிருந்து கடிதம் வரும்போது அதில் உள்ள விஷயங்கள் மூலம் வெளி உலக நிகழ்வுகள் அவர்களுக்கு தெரியவரும், அதுவும் அந்த கடிதங்கள் தறுமாறாக சென்சார் செய்யப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும். வழக்கறிஞர்கள் சந்திக்கலாம் ஆனால் வழக்கு தவிர வேறு எதையும் அவர்கள் பேசிவிடமுடியாது.
இந்தச் சூழ்நிலையில் நம்பிக்கை என்பது எப்படி துளிர் விட முடியும். எப்போதாவது வரும் வழக்கறிஞர்கள், அதைவிடவும் அரிதாக வரும் உறவினர் கடிதங்கள் அதுவும் தாறுமாறாக சென்சார் செய்யப்பட்ட கடிதங்கள் தவிர புற உலகம் அவர்களுக்கு இல்லாத ஒன்றே.
வாழ்வின் குரூரங்களை ஒட்டுமொத்தமாக குறுகிய காலத்தில் அனுபவித்து வரும் சிறைக்கைதிகளில் ஒரு டஜன் பேர்களாவது தற்கொலை செய்ய முயன்றிருப்பார்கள். தூக்கிட்டோ, அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்தைப் பதுக்கி அதனை அதிகமாக உட்கொண்டோ அல்லது தங்களது மணிக்கட்டை அறுத்துக் கொண்டோ தற்கொலைக்கு முயன்றுள்ளனர். (ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் மனிதாபிமானம் இல்லாத ராணுவம் இந்தத் தற்கொலை முயற்சிகளை "சுய காயம் ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சித்திறம் நிரம்பிய நடத்தை" Manipulative Self-Injurious Behavior) என்று வர்ணித்தது. ஜூன், 2006-இல் கைதிகளில் ஓரிருவர் வெற்றிகரமாக தற்கொலை செய்துகொண்ட துயரத்தையும், "ஒத்திசைவற்ற, செவ்வொழுங்கற்ற போர் நடவடிக்கை" (Assymmetric Warfare) என்று வர்ணித்தது.
இத்துணை இழிவுகளையும் துன்பங்களையும் மீறி குவந்தனாமோ சிறைக்கைதிகள் தங்கள் மன ஆரோகியததை தக்கவைக்க கவிதை எழுதத் தொடங்கினர். தங்களது ஆரோக்கியத்தை பராமரிக்க கவிதையே சிறந்த வழி, தங்களது வாதைகள், துயரங்களை நினைவுச்சின்னமாக்க கவிதை ஒரு உபகரணமாக அவர்களுக்கு கை கொடுத்தது. தங்களது புண்பட்ட மனிதார்த்த உணர்வுகளை படைப்புச் செயல் மூலம் தக்க வைத்தனர். ரஷ்யாவில் குலாக்குகள் அடக்குமுறையின் போது சென்ற அதே காலடிச் சுவடுகளை குவந்தனாமோ கைதிகளும் கடைபிடித்தனர். நாஜி வதைமுகாம் கைதிகள் பாதையை கடைபிடித்தனர். மேலும் நெருக்கமாக கூறவேண்டுமென்றால் ஜப்பானிய-அமெரிக்க போர்க்கைதிகள் கட்டுப்பாட்டு முகாம்களில் கைதிகள் இதே வழிமுறையக் கடைபிடித்தனர்.
கவிதைகளை அவர்கள் இயற்றுவதற்குள் ஏற்பட்ட தடைகள் மிகவும் ஆழமானது. முதலில் கைதிகளுக்கு பேனா, பேப்பர் அளிக்கப்படமாட்டாது. மதிய உணவு, இரவு உணவு வழங்கப்படும் ஸ்டைரோஃபோம் கோப்பைகளை பொத்திப் பாதுகாத்து அதில் தங்கள் குறுங்கவிதைகளை எழுதினர். அப்படியும் எழுத எழுது கோல் எங்கே? கூழாங்கற்களில் கோப்பை மீது எழுத்துக்களை செதுக்கினர். டூத் பேஸ்டைக் கொண்டு எழுத்துக்களை வடிவமைத்தனர். பிறகு இந்தக் 'கோப்பைக் கவிதைகளை' ஒவ்வொரு செல்லிற்கும் பாஸ் செய்தனர்.
கமல் உங்கள் அறம் என்ன?
முஸ்லிமாகவும், ரா உளவாளியாகவும் கதாபாத்திரம் ஏற்று கமல் இதனை செய்ய வேண்டிய அவசியத்தை கருத்துச் சுதந்திரம், படைப்பாளியின் சுதந்திரம், என்றும் ' ஸ்பை த்ரில்லர்' என்றும் முலாம் பூசி மறைக்க முடியாது!
ஆனால் கோப்பைகள் காலையில் குப்பைக் கூடைக்குள் போய் விடும். துயரங்களின் கண்ணீர் கவிதை வரிகள் குப்பைத்தொட்டிக்கு அடியில் மக்கிப்போகும். பாகிஸ்தானைச் சேர்ந்த கவிஞர் அப்துர் ரஹீம் முஸ்லிம் தோஸ்த் கவிதைகள் இரண்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது அவர் தன் நினைவிலிருந்து கூறியவையையே. இவர் 2005ஆம் ஆண்டு ஏப்ரலில் விடுவிக்கப்பட்டார்.
இதன் பிறகு ஓராண்டு கழித்து கைதிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. முதன்முறையாக உணவு பொழுதையும் கடந்து அவர்கள் தங்கள் கவிதைகளைத் தக்கவைக்க முடிந்தது. நான் பார்த்த முதல் கவிதையை எனக்கு அனுப்பியவர் அப்துல்சலாம் அலி அப்துல் ரஹ்மான் அல்-ஹீலா என்பவர். இவர் தனது கவிதையை அராபிய மொழியில் எழுதியிருந்தார். இவர் தனிமைச்சிறையில் நீண்ட காலம் கழித்தவர். இவரது கவிதை ஒரு மனதை உருக்கும் கதறல். மதத்தின் நம்பிக்கையளிக்கும் ஆறுதல் உணர்வுகளுக்கான ஒரு வேண்டுதற்பா.
அத்னன் ஃபர்ஹான் அப்துல் லடீஃபின் கவிதை-இவர் கருணையற்ற விதத்தில் சிறையில் துன்புறுத்தப்பட்டவர். இவரது கவிதைத் தலைப்பு "மரணத்தின் ஓலம்" (The Shout of Death) (நான் இந்தக் கவிதை குறித்து இங்கு குறிப்பிடமுடியாது காரணம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான பெண்டகன் அனுமதி இல்லை)
நிறைய வழக்கறிஞர்களிடம் விசாரித்த பிறகு குவந்தனாமோ சிறையில் ஏகப்பட்ட அமெச்சூர் கவிஞர்கள் இருப்பதை அறிந்தேன். பல கவிதைகள் வதைக்கூடத்தில் தாஙகள் அனுபவித்த சித்தரவதை, வலி, மற்றும் இழிவு பற்றியதாகவே இருந்தது. ஜுமா அல் தோசாசி என்ற கவிஞரின் வார்த்தைகளில் அந்த உணர்வைக் கூறவேண்டுமென்றால், "அமைதியின் காப்பாளர்களாக" தங்களை கூறிக்கொள்ளும் அமெரிக்கர்கள் நீதியின் ஒரு தெறிப்பைக் கூட காட்டவில்லையே!
எங்கள் நாட்டு அரசினால் "தீமையிலும் தீமை" 'பூவுலகின் தீமை புரியும் இனம்' என்றெல்லாம் முத்திரைக்குத்தப்பட்ட இவர்களின் மனிதார்த்த உணர்வுகளே இந்தக் கவிதைகள்.
நிர்வாகிகளின் பரப்புரையை கேள்விக்குட்படுத்தும் உண்மை என்னவெனில், ராணுவத்தின் ஆவணங்களின் படியும் கூட, கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் 8 சதவீதத்தினரே அல்கய்டா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆப்கான் போரின் போது 5 சதவீதத்தினரே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பிடிக்கப்பட்டு சித்தரவதைக்கு ஆளானதோ அனைத்துக் கைதிகளும்.
பாகிஸ்தானிய கைதி/கவிஞர் ஷைக் அப்துர் ரஹிம் முஸ்லிம் தோஸ்த் எழுதிய கவிதை வரிகள் 25,000 ஆனால் அவர் விடுதலையடைந்த பிறகு அமெரிக்க ராணுவத்தினர் அவரிடம் கொடுத்த வரிகளோ மிகக்குறைவு.
நூற்றுக்கணக்கான வதைக்கவிதைகள் இன்னும் பெண்டகன் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் தனது அறிமுகத்தில் எழுதியுள்ளார். ஒரு தேசத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப 25,000 வரிகள் தேவையில்லை. ஒரு கவிதையின் ஓரிரு தெறிப்புகளே போதும்.!
நாம் விஸ்வரூபம் விவகாரத்திற்கு வருவோம்! முஸ்லிம் எதிர்ப்பு பற்றிய நியாய/அநியாயங்களுக்குள் செல்லாமல், கமல் தரப்பு வாதங்களின் நியாய/அநியாயங்களுக்குள் செல்லாமல் கேள்வி எழுப்புவோம். சார்புத்துவம் (relativism) தலைதூக்கி நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கான நியாயங்களை உறுதியானதாக, இறுதியானதாக நிலைநாட்டுவார்கள். இவற்றில் எது ஆகச்சிறந்த நியாயம் என்பதை யார் தீர்மானிப்பது?
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டினாரா? இந்திய முஸ்லிம்கள் இல்லையே, தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இல்லையே, சர்வதேச பயங்கரவாதம்தானே போன்ற விமர்சனமற்ற குப்பை பொதுப்புத்திப் பார்வைகளைக் கடந்து பயங்கரவாததிற்கு எதிரான போர் என்ற போர்வையில் ஆப்கானில், தாலிபான்களின் கொடூரத் தீவிரவாதத்தைத் தீவிரப்படுத்தியதும், ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுவதற்கான முதன்மை காரணகர்த்தாவாகவும், ஒரு நேரத்தில் சமாளிக்க முடியாமல் தாக்குப் பிடிக்க முடியாமல், உள்நாட்டு எதிர்ப்புகள் வலுக்கவே ஈராக்கிலிருந்து ஓடிவிட்ட அமெரிக்காவின் அடிவருடியாகக் கமல் செயல்படுவது விஸ்வரூபத்தில் வெட்ட வெளிச்சம்!
குர் ஆனை நாங்கள் இழிவு படுத்தவேயில்லை, முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் இழிவு படுத்துகின்றனர் என்ற அமெரிகக விஷமப் பிரச்சாரத்தின் ஏஜெண்டாக கமல் செயல்படவேண்டிய அவசியம் என்ன? அதுவும் அந்தப் படத்தில் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், ரா உளவாளியாகவும் கதாபாத்திரம் ஏற்று கமல் இதனை செய்ய வேண்டிய அவசியத்தை கருத்துச் சுதந்திரம், படைப்பாளியின் சுதந்திரம், என்றும் ' ஸ்பை த்ரில்லர்' என்றும் முலாம் பூசி மறைக்க முடியாது!