இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது - த‌ந்தை பெ‌ரியா‌ர்

வெள்ளி, 24 டிசம்பர் 2010 (17:34 IST)
FILE
"புத்துலுக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" இதபகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரைப் பற்றி யுனெஸ்கோ குறிப்பிட்ட வார்த்தைகள்.

1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தனது 94வது வயதில் மறைந்த தந்தைப் பெரியாரை, 1.4.1959 ‌அ‌ன்று 'குடி அரசு' இதழில், இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது என்று எழுதிய தலையங்கம் மூலம் நினைவு கூர்வோம்.

பார்ப்பனரிடமிருந்து தமிழர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோய்கள் பல. கேழ்வரகு, சோளம், கம்பு முதலிய உணவுத் தானியங்களைவிட அரிசியை உணவாக்கி உண்பது, அதுவும் தவிடு போக்கிய வெண்மையான அரிசிச் சோற்றைக் கஞ்சி வடித்து உண்பதுதான் கீழ்ச்சாதியிலிருந்து உயர்ந்து செல்வதற்குரிய முறை என்று கருதிச் சத்தான உணவு வகைகளைக் கைவிட்டனர், தமிழர்கள்.

ஆனால், பார்ப்பனரிடமுள்ள இரண்டொரு நற்பண்புகளை மட்டும் தமிழர்கள் அறிந்து நடக்கத் தவறிவிட்டனர். அதிகாலையில் எழுதல், இனப்பற்றுக்காக எதையும் தியாகம் செய்தல், எல்லாவற்றையும் விட கல்வியைப் பெருஞ்செல்வமாகக் கருதுதல் ஆகிய சில பண்புகளை ஆரியர்களிடமிருந்து கற்றுணர்ந்து நடக்க வேண்டும். தமிழர்களிடம் இன்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற பெரு நோய் ஒன்றைப் பற்றி இன்று எழுதுகிறோம்.

நாமக்கல் வட்டம் கடகப்பாடி என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் வயது 16தான். கோவைக்குச் சென்று கல்வி பயில்வதற்காகத் தன் மாமனாரிடம் 150ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததாகவும், இந்த ஆத்திரத்தினால் தன் மனைவியின் தந்தையை நள்ளிரவில் பேனாக்கத்தியினால் கொலை செய்துவிட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கில் இந்தக் குற்றவாளிக்கு அய்ந்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்கள்தான் இதில் முன்னணிக் குற்றவாளிகளாயிருக்கின்றனர். தாங்கள் தம்மகனின் கல்விக்காகச் செலவழித்த பணம், தம் கடமையைச் சேர்ந்தது என்று கருதாதபடி, ஏதோ ஒரு வியாபாரத்தில் போட்ட முதலீடாகக் கருதிக் கொண்டு அந்த முதலீட்டையும், வட்டியையும் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலமாக வசூல் செய்துவிட வேண்டுமென்றே கருதுகின்றனர்.

இந்த நோய் ஆந்திரர்களிடையிலும், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களிடையிலும் முற்றியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் சொத்துடைய ஒருவருக்கு மூன்று பெண்களிருந்தால் போதும், அவர்களின் திருமணம் முடிந்தவுடன், அவர் ஓட்டாண்டியாக வேண்டியதுதான். வரதட்சணை மூலம் அவர் சொத்தைக் கசக்கிப் பிழிந்து குடித்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

இந்த வரதட்சணை நோயைச் சட்டத்தின் மூலம் தடுத்து விடலாமென்று ஆட்சியாளர் முயன்று கொண்டிருக்கின்றனர். பொய்யையும் விபச்சாரத்தையும் சட்ட மூலமாக ஒழிப்பது எப்படியோ, அதுபோலத்தான் இம்முயற்சியும்.

சமுதாயத்தில் நல்ல முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான் இம்மாதிரித் தீமைகளை ஒழிக்க முடியும். தானே பாடுபட்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், தமிழ் நாட்டு இளைஞர்களிடையே வளர வேண்டும். பிறர் சொத்துக்கோ சூது மூலம் கிடைக்கும் திடீர் வருமானத்துக்கோ, யாரும் ஆசைப்படக்கூடாது. பெற்றோரின் சொத்தைக்கூட அவர்களுக்குப் பிறகுதான் அடைய வேண்டுமே தவிர, சம்பாதிக்கக்கூடிய வயதிலும்கூட பெற்றோர் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர் சொத்தையே இப்படிக் கருத வேண்டுமென்றால், மாமனார் வீட்டுச் சொத்தைப் பற்றிக் கனவிலும் ஆசைப்படக்கூடாது.

பொருள் வசதியுள்ள மாமனார் எவரும் எத்தகைய கருமியும், தன் மகள் வறுமையினால் தொல்லைப்படுவதைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டார். ஆதலால், திருமணத்தின்போது இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு நகையோடு இத்தனை ஆயிரம் ரூபாய் வரதட்சணை கொடு; மாப்பிள்ளைக்குக் கார் வாங்கித்தா! வீடு வாங்கித்தா! என்றெல்லாம் பையனின் பெற்றோர் கேட்பது, மகா மானக்கேடான செய்கையாகும். தன் மகளுக்கு மற்றவன் கேட்கிறானே என்று சமாதானம் கூறக்கூடாது. இரண்டும் தவறு என்பதைத் துணிந்து கூற வேண்டும்.

இந்தத் தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும் நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆக முடியாமலேயே இருக்கின்றனர். இளைஞர்கள் மதவெறியையும், சாதி உணர்ச்சியையும் மறந்து கலப்புத் திருமணம் செய்ய முன்வராவிட்டாலும், அவரவர் சாதிக்குள்ளும் மதப் பிரிவுக்குள்ளுமாவது வரதட்சணை கேட்காதபடி மணம் புரிந்து கொள்ள முன்வரக்கூடாதா? நல்ல காரியம் செய்யத்தான் இளைஞர்களுக்குத் துணிவு வேண்டும். வழக்கம் என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வருவதற்குச் செக்கு மாடுகளே போதும். தமிழ் நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இருத்தல் வேண்டாம். பந்தயக் குதிரைகளாக இருக்க வேண்டும்.

ந‌‌ன்‌றி : ‘குடி அரசு' 1.4.1959

வெப்துனியாவைப் படிக்கவும்