இன்று ஒரு சோகத் தகவல்: தென்கச்சி சுவாமிநாதன் மரணம்
வியாழன், 17 செப்டம்பர் 2009 (11:05 IST)
வானொலியில் எதைக் கேட்போமோ இல்லையோ, இன்று ஒருத் தகவலைக் கேட்கத் தவறியதில்லை என்று பலரும் கூறுவார்கள். ஆனால் நேற்று ஒரு சோகமான தகவலை அந்த வானொலி அறிவித்தது. அதாவது தென்கச்சி சுவாமிநாதனின் மரணச் செய்திதான் அது.
அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குனரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் நேற்று மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்த அவருக்கு வயது 67.
சென்னை வானொலியில் இன்று ஒரு தகவல் என்னும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள் வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன். அது ஒலிபரப்பான காலகட்டத்தில் அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அந்நிகழ்ச்சி புகழ் பெற்று விளங்கியது. அதில் தினம் தினம் புதுப்புது தகவல்களை சொல்வதுடன், அதற்கு முடிவாக ஒரு நகைச்சுவை கலந்த கதையையும் கூறி இன்று ஒருத் தகவலை முடிப்பார். அவர் தொகுத்து வழங்கும் விதம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
முகம் அறியா குயிலின் நாதத்திற்கு நாம் மெய் மறப்பது போல, முகம் தெரியாத அந்த காலக்கட்டத்திலேயே தென்கச்சி சுவாமிநாதனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அவரது கதைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு பயன்பெற்றனர்.
ஒவ்வொரு தகவலும் ரத்தினச் சுறுக்கமாகவும், கடைசியாகச் சொல்லும் கதை சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். தினமும் ஒரு தகவலைக் கூடத் தேடிவிடலாம். தினமும் ஒரு கதையை எங்குதான் தேடுவாரோ என்று ஊரெல்லாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தனர்.
தென்கச்சி சுவாமிநாதன், பிரபல எழுத்தாளராகவும் விளங்கினார். அன்பின் வலிமை, தீயோர் மற்றும் அறிவுச்செல்வம் உள்பட ஏராளமான புத்தகங்களை தென்கச்சி சுவாமிநாதன் எழுதியுள்ளார்.
1977-ம் ஆண்டில் அகில இந்திய வானொலி பணியில் சேர்ந்த அவர், விவசாய நிகழ்ச்சி பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டபோது, வீடும் வயலும் என்ற சிறப்பான நிகழ்ச்சி மூலம் விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவிபுரிந்தார். இதுதவிர, குழந்தைகளுக்கான ஏராளமான நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தொலைக்காட்சிகளிலும் தோன்றி இன்று ஒரு தகவலை வழங்கி வந்தார்.
அவரது மறைவு வருங்கால சந்ததியினருக்கு பெரும் இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். நாம் அவரிடம் கேட்ட கதைகளை நினைவு கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டியது நமது பொறுப்பு. அவருக்கு செய்யும் சிறு தொண்டாகவும் இதனைக் கருதலாம்.