அர்த்த அலகு 3

செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (14:28 IST)
'சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில்
கொஞ்சம் குறையமணி நான்காகும் வேளையிலே
குப்பன் எனும்வேடக் குமரன் தனியிருந்து
செப்புச் சிலைபோலத் தென்திசையைப் பார்த்தபடி
ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின்
வாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான்.
வரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச்
சுரக்கின்ற காதலொடு சென்றான். தொடாதீர்கள்
என்று சொன்னாள் வஞ்சி. இளையான் திடுக்கிட்டான்.'

களத்தின் அடிப்படைத் தேவைகள் காலமும் இடமும். அதனால்தான் தொல்காப்பியரும் முதற்பொருள் என்று காலம்-இடத்தைக் குறிப்பிட்டார். இங்கு முதல் இரண்டடிகளில் ஒரு புனைவுக்காலம் நிச்சயிக்கப்படுகிறது. (பெரும்பொழுது கூறப்படவில்லை, சிறு பொழுது மட்டுமே. காரணம், பின்னர் வரும் உரையாடல்களிலிருந்து இவர்கள் ஆங்கில/ ஃபிரெஞ்சு ஆதிக்கக்காலத்தில்-இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில், வாழ்பவர்கள் என்னும் குறிப்பை நாம் பெறமுடியும்.) கதைத்தொடக்கம் நாட்டுப்புறக் கதை வடிவில் இருக்கிறது. இடம் அர்த்த அலகு இரண்டிலேயே அறிமுகமாகிவிட்டது. இரண்டு செயல்படுவோர்-கதைமாந்தர் (actants), குப்பன்-வஞ்சி அறிமுகமாகின்றனர்.

இடுபெயர்கள் (அல்லது சிறப்புப் பெயர்கள்-proper nouns) இரண்டாம்நிலை அர்த்தத்தில் (connotation) மிகவும் வளமானவை. எனவே இவற்றைக் குறிப்பான்களின் அரசன் என்பார் பார்த். குப்பன்-வஞ்சி என்னும் பெயர்கள் நிறையச் செய்திகளை நமக்குச் சொல்கின்றன. இவை சமூக-இனச் சங்கேதங்கள் (கலாச்சாரச் சங்கேதங்கள்). குப்பன்-தமிழினப் பெயர்; ஆனால் நாகரிகம் பெறாநிலையைக் குறிக்கும், சாதாரண கிராமப்புறப்பெயர். படித்த, சுயஉணர்வுள்ள, தமிழ்ப்பற்றைக்காட்டும் தன்மை இதில் இல்லை. (படித்தோர், நாகரிகம் மிகுந்தவர்களாகத் தம்மைக் கருதிக்கொள்வோர், இம் மாதிரிப் பெயரை வைப்பதில்லை).

வஞ்சி-தமிழினப் பெயர்; ஆனால் குப்பன் என்ற பெயருக்கு மாறாக, படித்த, சுய உணர்வுள்ள, தமிழ்ப் பற்றுள்ள நிலையை இப்பெயர் காட்டுகிறது. படித்தவர்களாக இருந்தாலும் பொதுநீரோட்டத்தோடு ஒத்துச் செல்பவர்கள் கிராமத்தவர்களாக இருப்பின், லட்சுமி சரஸ்வதி போன்ற தெய்வப்பெயர்களை வைப்பார்கள். நகர்ப்புற-நாகரிகத்தவர்கள் விஷ்ணுப்ரியா, பானுப்ரியா மாதிரி சமஸ்கிருதமயப் பெயர்களை வைப்பார்கள். வஞ்சி என்பது பழந்தமிழ்ச்சொல்லும்கூட. இப்பெயர் தூயதமிழ்ச் சார்பு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகிய தன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

குறிப்பீட்டலகு என்னும் நிலையில், வஞ்சி என்னும் பெயர் பெண்மைத்தன்மையைக் குறிக்கிறது.

வஞ்சி என்பது கொடி. கொழுநன்(கணவனைத்) தேடுபவள் என்பது குறிப்பு. இங்கு ஒரு தலைகீழாக்கல் இருக்கிறது. உண்மையில் குப்பனுக்கு அறிவாற்றலில் கொழு கொம்பாக இருப்பவள் வஞ்சியே என்பதைப் பாட்டின் பிற்பகுதி காட்டுகிறது. குப்பன் என்ற பெயர் மூடநம்பிக்கையின் அடையாளம். இப்பெயர் வைக்கப்படும் முறையே கிராமப்புற மூடநம்பிக்கைக்குச் சான்று. (பல குழந்தைகள் பிறந்தும் தக்காமல் இறந்து போகும் நிலையில் பெற்றோர் கடைசியாகப் பிறந்த குழந்தையைக் குலதெய்வத் திற்கு வேண்டிக்கொண்டு, அது உயிர்தரிப்பதற்காகக், குப்பையில் போட்டு எடுத்துக் குப்பன், குப்புசாமி என்று பெயரிடுவது எங்கள் ஊர் வழக்கம்.)

எனவே மூடநம்பிக்கை உடையவன் என்ற குறிப்பிலேயே குப்பன் என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

குப்பனின் காத்திருத்தல் செயல்சங்கேதம். இதுவும் ஒரு முன் அடையாளமே. பின்னரும் குப்பனின் காதல் எண்ணத்திற்குத் தடைகளும், அதனால் காத்திருத்தலும் நிகழ்ந்தவாறே உள்ளன.
வந்த வஞ்சி, 'தொடாதீர்கள்' என்கிறாள். இந்தச் சொல்லே, அவள் மத்தியதர/ உயர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்பதைக் காட்டுகிறது. (கீழ்த்தட்டுப் பெண்கள் கணவனை நீ, வா என்றே அழைப்பது வழக்கம்).


குப்பன் எனும் வேடக்குமரன்-என்னும் தொடரில், புராணிகச் சங்கேதம் உள்ளது. வேடக்குமரன் என்றாலே வேடம் தரிக்கும் (வேஷம்போடும், இக்கால நோக்கில் மேக்-அப் போட்டுக்கொள்ளும்) இளைஞன் என்று பொருள். குறிப்பாக இச்சொல் முருகப் பெருமானை உணர்த்துவது. முருகன் வேடமிட்டு வள்ளியை இதேபோன்ற காட்டுப் புலத்தில் நாடிச்சென்ற கதையை உட்கொண்டுள்ளது. எனவே ஒருவாறு இந்த இளைஞனுக்கு தெய்வத்தன்மையும் ஏற்றப்படுகிறது. செப்புச்சிலைபோல என்ற அடைமொழி யும் தெய்வத்தன்மையைக் குறிப்பதாகிறது.

வேடக்குமரன் என்ற சொல்லை ஆசிரியர் மேற்கண்டவாறு நினைத்துப் பயன்படுத்தினாரா, அல்லது வேடர் குலத்தைச் சார்ந்த என்ற பொதுப்பொருளிலேயே பயன்படுத்தினாரா என்பது தெரியாது. ஆசிரிய நோக்கத்தை மீறியே இம்மாதிரி அர்த்தங்கள் தாமாகப் பிரதியில் நிகழ்வன என்பது இக்கால நோக்கு.அதேபோல, வாடாத பூ முடித்த வஞ்சி என்ற தொடரும், வஞ்சியும் குமரனுக்கேற்ற தெய்வத்தன்மை கொண்டவள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது (தேவர்கள் அணியும் பூக்கள்தான் வாடாமல் இருக்கும் என்பது புராணச்செய்தி). இன்னும் குறிப்பாக, வாடாத பூ என்பது தேவலோக மலர்-பாரிஜாதப் பூ. (இதைக் கொண்டுவரச் சொல்லி பாஞ்சாலி பீமனை தேவருலகிற்கு அனுப்புகிறாள் என்பது பாரதக்கதை).
வஞ்சி வரக்கண்டதும் வாரிஅணைக்கச் சென்றான் குப்பன் என்பது பாரதிதாசனின் தனி முத்திரை. வாரி அணைத்தலும் முத்தம் பொழிதலும் பாரதி/பாரதிதாசன் காலம் வரை வெளிப்படையாகத் தமிழிலக்கியத்தில் சொல்லப்படுவதில்லை. (சங்க இலக்கியத் தில் முயங்குதல் குறிப்பு உண்டு. முத்தக்குறிப்பு இல்லை. கன்னியரை முத்தமிடுதல் பாரதி-பாரதிதாசன் காலம்வரை தமிழ் இலக்கியத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்டது கிடையாது. ஆண்டாள் மட்டுமே சங்கினைப் பார்த்து மதுசூதனனின் 'வாய்ச் சுவையும் நாற்றமும்' அறிவாயா என்று கேட்டிருக்கிறாள்).

சஞ்சீவிபர்வதத்தின் சாரல் ஒரு பெண்ணிய நூல் அல்லது பெண்ணின் மேன்மை பேசும் நூல் எனச் சில அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். இங்குச் செயல்படும் பொருள்கோள் சங்கேதங்கள் அந்த அர்த்தத்தைத் தகர்ப்பனவாக உள்ளன. வந்த குப்பன் தென்திசை நோக்கி ஆடாது அசையாது நின்றான் என்ற குறிப்பும், முன்பே மலையோடு அவனை ஒப்புமை செய்வதும், குப்பனைச் சிவபெருமானோடு ஒப்ப நிறுத்துகின்றன (தட்சிணாமூர்த்தி). (பர்வத) வல்லி(வஞ்சி) என்பது உமையம்மையோடு அவளை ஒப்பநிறுத்துகிறது.
குப்பனை முருகனோடு, சிவனோடு உவமித்தாலும், வஞ்சியை வள்ளியோடு, உமையோடு உவமித்தாலும் இவை ஆணின் மேன்மையை வலியுறுத்தும் புராணக்கதைகளுக்கே கொண்டுசெல்கின்றன. புராணக்கதைகளின்படி, சிவனே மேலானவன், உமை இடப் பாகம் கொண்டவள். முருகனே மேலானவன், வள்ளி அவனது ஞானத்தின் உருவகம். எனவே குப்பன் மேம்பட்டவன், வஞ்சி இரண்டாம் நிலையினள் என்னும் புராண மதிப்புகளையே இவை உள்ளாழத்தில் விதைக்கின்றன.

எனவே சமூகநோக்கில் குப்பன்-வஞ்சி என்ற பெயர்கள் உண்டாக்கு உயர்வு தாழ்வு நிலை, புராண நோக்கில் தகர்க்கப்படுகிறது.
மேலும் வஞ்சி என்ற (கொழுகொம்பை நாடும்) சொற்குறிப்பும் புராணக்குறிப்புகளும் சேர்ந்து என்ன இருந்தாலும், ஆணைவிடப் பெண் விஞ்சியவள் அல்ல என்ற அர்த்தத் திற்கே இட்டுச்செல்கின்றன.
மேலும் இடக்குறிப்புகளும் ஆணின்மேன்மை, பெண்ணின் தாழ்வு இவற்றையே வலி யுறுத்துகின்றன. குப்பன்-மலை-அசலம்- நிலைகுலையாதது, உறுதியானது. வஞ்சி-தழுவும்கொடி-சாரல்-சார்ந்திருத்தல், சார்புநிலை.
மலை, குப்பன், மலையைச் சார்ந்திருக்கும் (தாழ்வான பகுதியாகிய) சாரலே வஞ்சி.

மேம்போக்காகக் குப்பன் அறியாமைஉடையவன், மூடநம்பிக்கை கொண்டவன் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அவன் மேலானவன் என்ற கருத்தைத்தான் நூல் விதைக்கிறது. குப்பன் ஆண், அசையாதவன், மூலமுழுப்பொருள், முதன்மையானவன்; வஞ்சி சாரல், சார்ந்தவள், கொடி, தழுவுபவள், இன்பம் தருவதற்காக இருப்பவள், இரண்டாம் நிலையினள், பெண். இதுதான் இந்தப் பிரதியின் அடிப்படைக் கருத்தியல். பாரதிதாசன் பெண்ணின் பெருமை பேசுவதுபோல எழுதினாலும், அடிப்படையில் மரபுக் கருத்தினரே என்பதைப் பிறபடைப்புகளும் காட்டும்.
வஞ்சியும் குப்பனுக்கு இணையான காதலுணர்வு உடையவளே. எனவே அவள் 'தொடா தீர்கள்' என்றதும் குப்பனுக்குத் திடுக்கிடல் (நமக்கு சஸ்பென்ஸ்) ஏற்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்