[அமில்கார் லோபஸ் கப்ரால் (1924- 1973) : இவர் ஆப்பிரிக்க அரசியல் சிந்தனையாளர் மார்க்சிய அரசியல் சார்புடையவர் கினியா-பிஸ்ஸாவ் சுதந்திரப்போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர். 1973ஆம் ஆண்டு போர்த்துக்கீசிய காலனியாதிக்க கூலிப்படையினரால் இவர் கொல்லப்பட்டார்.] ---------- ஒரு மக்கள் சமூகம் மீது அன்னியர்கள் அடக்குமுறை ஆட்சி நடத்தும் போது வெறும் பொருளாதாரச் சுரண்டலை மட்டும் செய்வதில்லை. பொருளாதாரச் சுரண்டலை தீவிரமாக நடத்துவதற்காக மக்கள் சமூகத்தின் கலாச்சார வாழ்வை அடக்குமுறையாளர்கள் திட்டமிட்டு நசுக்கி இருக்கிறார்கள் என்பது வரலாறு பகரும் உண்மை. அடக்கப்பட்ட மக்கள் சமூகத்தினுள் கலாச்சார ரீதியாக இயங்கக் கூடியவர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் அடக்குமுறையாளர்கள் தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்துகின்றனர்.
மக்களின் கலாச்சார வாழ்வினை அழிப்பதற்கும், வீரியமிழக்க வைப்பதற்கும், முடக்குவதற்குமே அடக்குமுறையாளர்கள் ஆயுதத்தினைப் பிரயோகிக்கிறார்கள். ஏனெனில் ஒரு உறுதியான உள்நாட்டுக் கலாச்சார வாழ்வு இருக்குமிடத்தில் அந்நிய ஆட்சி நிரந்தரமடைய முடியாது.
ஒரு மக்கள் சமூகம் அடக்கப்படும் போது அம்மக்களின் உணர்வுகள் வளர்ந்து வந்து ஒரு குறிப்பிட்ட திருப்பு முனையில் கலாச்சார வடிவான எதிர்ப்பாகத் திரள்கிறது. இதனை உடைத்தெறிய முடியாது. இந்த கலாச்சார எதிர்ப்பே அரசியல் விழிப்பாகவும், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான இயக்கமாகவும், ஆயுத எதிர்ப்பாகவும் தோற்றம் கொள்கிறது.
அடக்குமுறையாளர்கள் ஒரு மக்கள் சமூகத்தின் மீது தங்கள் ஆட்சியை நிலைகொள்ளச் செய்ய பின்வருவனவற்றுள் ஒன்றைத்தான் தெரிவு செய்யலாம்.
1. அடக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டுதல். இதனால் கலாச்சார எதிர்ப்பு பிறக்க இடமில்லாமல் செய்யலாம்.
2. அடக்கப்பட்ட மக்களின் கலாச்சார வாழ்வுக்குப் பங்கம் வராதவாறு ஆதிக்கம் செய்தல் அதாவது சுரண்டலை எதிர்க்காத வகையில் அடக்கப்பட்டவர்களது கலாச்சாரத்தை இசைய வைத்தல்.
இவற்றுள் முதலாவது முறைதான் சரித்திரத்தில் நடந்துள்ளது. இரண்டாவது முறை எங்குமே இன்றுவரை நடந்ததில்லை. மனித வர்க்கத்தின் அநுபவத்தில் இந்த இரண்டாவது முறை நடைபெற முடியாததொன்று. ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தைப் பேணியபடி, அந்தச் சமூகத்தின் பொருளாதார அரசியல் வாழ்வினை அடக்கி ஆள்வது முடியாத காரியம்.
ஆனால் அடக்குமுறையாளர்கள் அடக்கப்பட்டவர்களை தங்கள் இனத்தினராக
மாற்றலாமென எண்ணுவதுண்டு. இது நடைமுறையில் எப்படி என்று பார்த்தால், ஏறத்தாழ வன்முறை மூலம் மக்களின் கலாச்சாரத்தினை மறுப்பதாகவே இது அமையும். ஆனால் அவ்விதம் ஒரு மக்களின் கலாச்சாரத்தினை எளிதாக செயலிழக்க வைக்க முடியாது என்பதனால் இந்தக் கருத்துக்கு அர்த்தமில்லை. ஆப்ரிக்கா, கலாச்சாரம் இல்லாத ஒரு கண்டம் என போர்த்துக்கீஸர்கள் கூறிய கருத்து இதற்கு உதாரணம்.
இயற்கையிலேயே கறுப்பர்கள் குறைவுபட்ட மனிதத்தன்மை உள்ளவர்கள் என்ற சித்தாந்தம் கூட இத்தகையதுதான். இதன்படி இயற்கையே கறுப்பு வெள்ளையானது என்றாகும். உலகின் மிகக் குரூரமான முறை மூலம் தென்னாப்பிரிக்காவின் சிறுபான்மை வெள்ளையர்கள் கறுப்பர்களை அடிமைகளாக வைத்துள்ளனர். இந்த சித்தாந்த நாடகத்தை ஏகாதிபத்தியவாதிகள் ஆடுவதே ஒன்றை மறைப்பதுக்குத்தான் அது அடக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்ற உண்மையாகும்.
மாறுதலுக்கு இடம் விடும் சமூகமாயினும் சரி மாற முடியாத சமூகமாயினும் சரி கலாச்சாரம்தான் அதன் ஜீவநாடி. சமூகத்தில் எல்லாவித உறவுகளையும் கலாச்சாரமே தீர்மானிக்கிறது. அடக்கப்பட்ட சமூகத்தின் சரித்திரத்தையும் இதர அம்சங்களையும் ஒரு இலட்சியம் வழி நடத்தினால் அந்த இலட்சியம் அந்த சமூகத்தின் கலாச்சாரத்துக்கே உரியது. அந்நிய ஆதிக்கத்தினை கலாச்சாரத்தின் மூலமே எதிர்ப்பதென்பதன் விளக்கம் இது.
கலாச்சாரம் கடந்தகால சரித்திரத்தின் விளைவு மட்டுமல்ல எதிர்கால சரித்திரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது. தனது சமூகக் கட்டுமானத்துக்குள் நிலவும் குழுக்களின் உறவுகளையும் மனித உறவுகளையும் ஆள்வதன் மூலம் கலாச்சாரம் சரித்திரத்தையே ஆட்சி செய்கிறது.
இந்த உண்மையை புரிந்து கொள்ளாததால் பல அடக்குமுறைகள் தோல்வி கண்டுள்ளன. சில விடுதலை இயக்கங்களின் தோல்விகளுக்கும் இதுவே காரணம்.
தேசிய விடுதலையின் அம்சங்களை இனி கவனிப்போம். ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கமே தேசிய விடுதலை இயக்கம். ஏகாதிபத்தியம் ஒரு மக்கள் சமூகத்தின் சுதந்திரமான உற்பத்தி முறை வளர்ச்சியை பிடுங்கி விடுகிறது. இந்த உற்பத்தி முறையே இயக்குகிறது. எனவே அம்மக்களின் இயற்கையான சரித்திர வளர்ச்சியை மறுப்பதாகவே ஏகாதிபத்திய சுரண்டல் அமைகிறது. இதுதான் ஏகாதிபத்தியத்தின் இலட்சணம்.
ஒவ்வொரு சமூகமும் இயற்கையை உற்பத்திச் சாதனமாக உபயோகிக்கிறது. இயற்கையுடன் சமூகமும் கொள்ளும் உறவு வேறுவகையானது. எனவே இந்த சமூகங்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவுகளிலும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இது வர்க்க மோதலாக விளைகிறது. இது சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் தீர்மனிக்கிறது.
மரத்தில் மலர் போன்று சரித்திரத்தினின்றும் மலர்வது கலாச்சாரம். சமூகமானது சூழ்நிலையையும் அதனால் அமைக்கப்பட்ட சமூகத்தின் தன்மயையும் வெளியிடுகிறது. ஏற்றத்தாழ்வுகளையும் மோதல்களையும் அறிய உதவுவது சரித்திரம். ஏற்றத்தாழ்வுகளை இணைத்தும் மோதல்களைத் தவிர்த்தும் சமூகத்தை இடைவிடாமல் புனருத்தாரணம் செய்வது கலாச்சாரம்.
சமூகத்தின் உயிரூட்டமான பொறுப்புணர்வுகளை பேணுவது கலாச்சாரம்தான். ஏகாதிபத்திய அடக்குமுறை ஒரு சமூகத்தின் சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும்
சேர்த்தே அழிக்கிறது. இதனால் தேசிய கலாச்சாரங்களே தேசிய விடுதலை இயக்கங்களை உருவாக்கி ஊக்குவிக்கிறது. மக்களின் சமூக அரசியல் அம்சங்களினது நிலை எப்படியிருப்பினும் அவர்களது கலாச்சாரம்தான் விடுதலை இயக்கமாக வடிவெடுக்கிறது.
சரித்திரத்தினின்றும் ஒரு சமூகம் அன்னியப்படுத்தப்பட முடியாத உரிமையே தேசிய விடுதலையின் அஸ்திவாரம் ஆகும். எனவே ஒரு விடுதலை இயக்கத்தின் நோக்கம் ஏகாதிபத்தியவாதிகளால் பறித்தெடுக்கப்பட்ட இந்த உரிமையினை மீட்பதாகும். அதாவது தேசிய உற்பத்தி சக்திகளை விடுவிக்கும் இயக்கமே இது. ஆகவே தேசிய உற்பத்தி முறைகள் பரிபூரணமாக விடுதலை பெறுவதே தேச விடுதலை. உற்பத்தி சக்திகள் விடுபட்டதும் அந்த சமூகத்தின் கலாச்சாரத்துக்கு புதிய வளர்ச்சி ஏற்பட இடம் கிடைக்கிறது.
கலாச்சார விடுதலை என்பது அன்னிய கலாச்சாரத்தை முற்றாக நிராகரிப்பதல்ல. வளர்ச்சிக்கு வேண்டியவற்றை வெளியிலிருந்து சுவீகரித்து தேவையற்றவற்றை நீக்கி ஒரு தேசத்தின் கலாச்சாரத்தை வளர்த்தலாகும்.
அன்னிய அடக்குமுறை என்பது கலாச்சார அடக்குமுறை என்றால் அன்னியரிடமிருந்து விடுதலை பெறுவது கலாச்சார விடுதலை பெறுவதாகும். இதன்படி பார்த்தால் விடுதலை இயக்கம் என்பது கலாச்சார சக்தியின் அரசியல் அமைப்பு ஆகிறது. எனவேதான் மக்களது கலாச்சாரத்தினை உணர்ந்தவர்களாக விடுதலைப் போராளிகள் இருப்பது அவசியமாகிறது.
இயந்திர நுட்பமும் நிற வேறுபாடுகளும் கலாச்சார அறிகுறிகள் என்ற போலிக் கருத்துக்கள் மறைந்துவிட்டன. எல்லாவித மக்களிடம் கலாச்சார உணர்வு உள்ளதென்பது இன்று ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். மக்கள்தான் கலாச்சாரத்தின் படைப்பாளிகளும் சேமிப்பாளர்களும் என்பதனைப் போராளிகள் உணர்வது அவர்களது கடமை. மக்கள் அனைவரும் பொதுவான கலாச்சாரப் பண்பினை பிரதிபலிக்காது ஒரு பகுதியினரை மட்டும் விடுதலை இயக்கம் பிரதிபலிக்கக்கூடாது.
கலாச்சாரத்துக்கு ஒரு பொது அமைப்பு இருப்பினும் மக்களின் எல்லாப் பகுதியினரும் ஒரே தரத்திலான கலாச்சாரக்காரர்களாக இருக்க முடியாது. அவர்களிடையே வளர்ச்சி வேறுபாடு இருக்கும். ஒவ்வொரு சமூகப் பகுதியும் பொருளாதாரத்தினால் உருவாக்கப்பட்டாலும் அப்பகுதியை ஆள்வது ஒரு சமூகப் பிரிவினரே. விடுதலைப் போர்ப் பார்வையினை அவர்களது கலாச்சாரப் பண்பே தீர்மானிக்கிறது. இந்த இடத்தில்தான் கலாச்சாரம் தனது முழு விசேஷத் தன்மையையும் ஒரு தனிமனிதன் மூலம் வெளியிடுகிறது.
ஆப்ரிக்காவில் கிராமப்புறங்களிலிருந்து நகரங்கள் வரை பல்வேறு வடிவங்களில் கலாச்சாரம் வேறுபட்ட தன்மைகளை வெளியிடுகிறது. விடுதலை இயக்கங்கள் இந்த வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
சுரண்டலுக்காக ஏகாதிபத்தியவாதிகள் அடக்கப்பட்டவர்களிடையே கலாச்சார, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளனர். இதன் விளைவாக நகர்ப்புறத்தினரும் கிராமத்தின் குட்டி முதலாளிகளும் அன்னிய கலாச்சாரத்தினை ஏற்று தங்கள் சொந்த மக்களின் கலாச்சாரத்தை ஏளனப்படுத்தும் நிலை பிறக்கிறது. சுயநலத்திலிருந்து இந்த அந்நிய கலாச்சாரவாதிகள் அந்நியமாகின்றனர். விடுதலை இயக்கத்தில் இவர்களது நிலையினை இதுவே நிதானிக்கிறது. எனவே போர்க்காலத்தின் தியாகங்களும் அன்றாடப் பிரச்னையுமே இவர்களை மனம் திருப்ப வைக்க முடியும்.
இருந்தும் மனம் திரும்பாமலே சந்தர்ப்பவாதிகளாக விடுதலை இயக்கத்தினுள் சிலர் நுழையலாம். இவர்கள் தங்களது படிப்பறிவு, கருவிஞானம் ஆகியவற்றால் இயக்கத்தின் உயர்பதவிகளைக் கைப்பற்றக் கூடும். எனவே கலாச்சாரத் தளத்திலும் இது பற்றி தீவிர விழிப்பு அவசியம். எனிலும் அன்னிய மனோபாவாக்காரர்களாக அடக்குமுறையாளர்களினால் உருவாக்கப்பட்டவர்களிடமிருந்து கூட உண்மையான விடுதலை வீரர்கள் பிறந்துள்ளனர். வர்க்க உணர்வினை இவர்கள் முற்றாகத் துறப்பதுதான் போராட்டத்திற்கு முக்கியமானது.
நாட்டின் படித்த அறிவுவாதிகள், பட்டம் பெற்றவர்கள், சுயமான தொழில்களில் உள்ளவர்கள், கிராமத்து மேல்மட்டத்தினர்
ஆகியோர் விடுதலைப் போரின்போது அன்னியருக்கு ஆதரவாக நடத்திருக்கின்றனர். இவர்கள் அன்னிய கலாச்சாரத்தை மதித்ததின் விளைவே இது. கலாச்சார மதிப்பீடே அரசியல் சார்பினை தீர்மானிக்கிறது என்பதற்கு இது உதாரணமாகும். வர்க்க உணர்வையும் இதில் காணலாம். இவர்கள் தங்களது வர்க்க தேவைகளே பிரதானமானவை என்ற மனோபாவம் உள்ளவர்கள். போராட்டத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சார அடிப்படைகளைப் பேண வேண்டுமானால் விடுதலை இயக்கத்தினர் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வது அவசியம்.
மனமாற்றமடையும் சமூகத்தின் மேல்தட்டில் உள்ளவர்களின் கலாச்சாரப் பங்கும் மக்களின் கலாச்சாரப் பங்கும் ஒற்றுமை பெறுகிறபோதுதான் போராட்டம் திறனடையும். இதில் முக்கியமானதையும், முற்போக்கானதையும் புரட்சி கரமானதையும் போராளிகள் பேணுவது தேசீய கலாச்சாரத்துக்கு வழிகாட்டும்.
ஒவ்வொரு சமூகப் பிரிவின் கலாச்சார அம்சங்களையும் விடுதலை இயக்கம் ஐக்கியமாக்கிக் கொள்வதும் இந்த ஐக்கியம் ஒரு தேசிய கலாச்சாரக் கட்டமைப்பாக உருவாவதும் அவசியம். தேசிய உணர்வுக்கும், ஒழுக்கத்துக்கும் பல்வேறு சமூகப் பிரிவுகளின் கலாச்சார அம்சங்களை இணைப்பது ஓர் உபாயமாகும். இது விடுதலை இயக்கத்துக்கு இன்றியமையாதது. இது தேசியச் சூழலுடன் மக்களை இணைக்கிறது. தங்களது பிரச்னைகளையும் அபிலாஷைகளையும் மக்கள் நேரே சந்திக்க வகை செய்கிறது.
விடுதலை இயக்கம் முன்னேறும்போது அது பல்வேறு நோக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும். உள்வேறுபாடுகளைக் களைந்து பொதுவாக இலட்சியமாக விடுதலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்கள் கஷ்டங்களுக்கும் தியாகங்களுக்குமிடையே விடுதலை இயக்கத்தின் இலட்சியத்தை இதயபூர்வமாக ஆதரிப்பார்களேயானால் அது ஒரு மாபெரும் கலாச்சார வெற்றியுமாகும்.
அடக்குமுறையாளர்களுக்கும் அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள கலாச்சார வேறுபாடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு மேற்படி வெற்றி சாத்தியமாகிறது. அடக்குமுறையாளர்களின் கலாச்சாரத்துடன் ஒற்றுமையுள்ள மக்களை அடக்கி ஆள்வதும் ஆட்சியை நீடிக்க வைப்பதும் எளிது என்கிறது சரித்திரம்.
ஆப்பிரிக்கா விஷயத்தில் காலனி சக்திகள் போட்ட தப்புக்கணக்கு ஆப்ரிக்க மக்களின் கலாச்சார சக்தியினைக் குறைத்து மதிப்பிட்டமையாகும். இதன் விளைவாக போர்த்துகீஸிய காலனி முறையால் இலாபமடைந்திராத போர்த்துகீஸிய மக்கள் மூன்று காலனி யுத்தங்கள் மூலம் தங்கள் தப்புக்கணக்கிற்கு பலனை அனுபவிக்கின்றனர். போர்த்துகீஸரின் காலனிகளில் அடக்கப்பட்ட மக்களின் எழுச்சிகள் அடக்குமுறையாளர்களினால் ஆரம்பத்தில் நசுக்கப்பட்டது. இதற்கு அடக்கப்பட்டவர்களினுள்ளேயே ஒரு பகுதியினரை தனக்கு ஆதரவாக்கி இருக்கிறது காலனி சக்தி. சொந்த மக்களுக்கு கலாச்சாரத்திற்கும் பற்றுணர்வு காட்டிய மேல்மட்டத்தினர் நிர்மூலாக்கப்பட்டனர். காலனி ஆதிக்கம் உறுதியடைந்தது. ஆனால் ஆப்பிரிக்க மக்களின் கலாச்சார எதிர்ப்பு அழிக்கப்படவில்லை. துரோகங்களுக்கு ஆளாகி நசுக்கப்பட்ட கலாச்சாரம், கிராமங்களிலும், வனாந்தரங்களிலும் காலனியாதிக்கத்தினால் பாதிப்படைந்து தலைமுறையினரின் உயிரிலும் ஒளிந்திருந்து, எல்லாவிதமான புயல்களையும் தாங்கி ஜீவித்திருக்கிறது. சரியான சீதோஷ்ண சுவாத்தியத்துக்காகக் காத்திருக்கும் வித்தினைப் போல பொறுத்திருந்த ஆப்பிரிக்க கலாச்சாரம் இன்று எங்கள் கண்டம் முழுவதிலும் தேசிய விடுதலைப் போர்களுக்காக முழுமையடைந்து பரந்து கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்காவின் கரங்களே உலகின் அத்திவாரக்கற்களை நட்டவை என்று போற்றப்பட்ட எம்மக்களின் கலாச்சாரம் பெரும்பாலும் பாதகமான சூழ்நிலைகளிலேயே ஜீவித்திருக்கிறது. பாலைவனங்களிலிருந்து பூமத்தியக்காடுகள்வரை, சதுப்பு நிலங்களிலிருந்து அடிக்கடி பெருக்கெடுக்கும் நதிக்கரைகள் வரை எல்லாவித கஷ்டங்களினூடேயும், மரம், மிருகம், மனிதன் யாவரையும் அழிக்கும் கொள்ளை நோய்களினூடேயும் இந்தக் கலாச்சார இயக்கம் வளர்ந்துள்ளது. பேஸில் டேவிட்ஸன் போன்ற சரித்திர ஆய்வாளர்களின் கருத்தின்படி, மிகவும் பாதகமான சூழலில் ஆப்பிரிக்க மனிதன் சாதித்துள்ள அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சி மனித சரித்திர சிகரங்களுடன் ஒப்பிடத்தக்க தொன்றாகும்.
இந்த உண்மை ஆப்பிரிக்கர்களின் விடுதலைக்காகப் போராடுகிறவர்களுக்கு ஊட்டமளிக்கிறது. ஆனால் எந்தக் கலாச்சாரமும் பரிபூரணமானதொன்றல்ல. இருந்தும் கலாச்சாரமும் ஒரு மக்கள் சமூகத்தில் நிகழும் பிரிவுகளைச் சரி செய்து ஒன்றிணைக்கிற யதார்த்த சக்தி என்பதை மறுக்க முடியாது.
குருட்டுத்தனமான கலாச்சார அணுகுமுறைகள் தீங்கானவை. விமர்சனப் பண்பற்ற தற்புகழ்ச்சி முதலியவை இவை. இதைவிட மனித சமூகத்தின் பொதுச் சொத்தாக ஒரு சிறுபகுதி மனிதர்கள் செய்த சாதனை என்று ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தைக் காண்பதே சரியாகும். இன்றைய விடுதலைப் போராட்டத் தேவைகளை முன்னிறுத்தி விமர்சனப் பூர்வமாக ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தைப் பார்ப்பதே முக்கியமாகும். பலவீனங்களைத் தவிர்த்து அவற்றையே உறுதிகளாக மாற்றுவதற்கு இதுவே உதவும்.
உற்பத்தி முறைகளைப் பரிபூரணமாக விடுவித்து பொருளாதார, அரசியல், கலாச்சார முன்னேற்றத்தைச் சாதிப்பதே விடுதலைப் போரின் நோக்கம். இது அரசியல் விடுதலையையும் கடந்த ஒரு அடிப்படை. இந்தப் பின்னணியிலேயே கலாச்சாரத்தை நிறுத்தி தேர்வு முறைக்கு உட்படுத்தி ஆராய்வது அவசியம். ஆயுதப் போருக்காக மக்களை ஒரு அமைப்பினுள் திரட்டி காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு இத்தகைய ஆய்வு அவசியமாகிறது.
போராட்டத்தின் அன்றாடத் தேவைகளை மக்கள் சந்திக்கும் விதம் அவர்களது கலாச்சாரப் பண்பினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் என்பது அனுபவம். எனவே விடுதலை இயக்கத்தின் முக்கியத்துவத்தினை கலாச்சாரமே உணர்த்தும் வகையில் கலாச்சார இயக்கம் திரட்சி பெற வேண்டும். வேற்று மக்களின் போராட்டங்களிலிருந்து விளைந்த உபாயங்களைப் பயன்படுத்துவதாகப் பிரகடனம் செய்வது கனவுலகப் பேச்சாகும். ஏனெனில் அந்த மக்கள் இங்கே உள்ள கலாச்சாரத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நிலைமைகளைச் சந்தித்தவர்களல்லர்.
போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் தலைவர்களும் சரி, போராடும் மக்களும் சரி, கலாச்சாரமானது எவ்வளவு தூரம் மக்களின் மனோசக்திக்குள் வேரூன்றி உள்ளது என்பதை உணர்வதில்லை. இவற்றை கலாச்சாரம் சாதிக்கும்போது, உண்மை நிலை பற்றிய தவறான கணிப்புகளையும், கடமையினின்றும் தவறியதையும் புரிந்து கொள்வர். அரசியல் விஞ்ஞான அடிப்படையில் நடக்கும் ஒரு போராட்டத்தில் விளையகூடிய திறனின்மைகளையும் கலாச்சாரம் உருவாக்கிவிடும். ஆனால் விடுதலைப் போரில் நேரும் தடைகளையும், தோல்விகளையும், வேதனைகளையும் தாங்கக் கூடிய சக்தியைத் தருவது கலாச்சாரம்தான்.
பெருந்தொகையினரை ஒன்று திரட்டும் ஆயுதப் புரட்சி, சமூகத்தின் கலாச்சார பலவீனங்களைத் தவிர்த்து பலமுள்ள அம்சங்களை ஊக்குவிக்கிறது. பழங்குடிப் பழக்கங்களும், பூர்வீக அனுஷ்டானங்களும் மறைகின்றன. பிதுர்வழிபாடு, உறவினர்க்குத் தரும் சலுகை, சமூகத் தாழ்வுணர்ச்சி, பெண்ணடிமை, பூர்வக்குடி வழிபாடு ஆகியவை விடுதலை இயக்கத்தின் அறிவார்த்த தேசியப் பண்புக்கு உதவாதவை. எனவே விடுதலைப் போராட்டம் என்பது கலாச்சாரத்துக்கும் புத்துயிர் கொடுக்கும் போராட்டமாகும்.