தமிழரின் பண்பாட்டை மீட்டு நிலைநிறுத்திய பதிப்பியல்!
புதன், 23 ஏப்ரல் 2008 (17:59 IST)
வாசித்தல், வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை வளர்க்க உலக புத்தகத் தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது. இது 1995ஆம் ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் உள்ள கேடலோனியா புத்தக விற்பனையாளர்களால் புத்தகத்திற்கும் ஏப்ரல் 23ஆம் தேதிக்குமான தொடர்பு சிந்தரிக்கப்பட்டது. இன்றைய தினத்தில்தான் ஸ்பானிய மொழியின் இலக்கிய மேதை, உலக இலக்கிய முன்னோடி, டான் குவிசாட் நாவல் புகழ் செர்வாண்டிஸ் காலமானார். மேலும் உலக இலக்கிய மேதைகள் பலர் இன்றைய தினத்தில் பிறந்துள்ளனர் அல்லது மறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழைப் பொறுத்தவரை, ஏன் இந்திய மொழிகளைப் பொறுத்தவரையிலும் அச்சு எந்திரங்களின் வருகையையும் அதன் பயன்பாடுகளையும் இன்று முழுதும் நுகரும் ஒரு தன்மையை நாம் பார்க்கிறோம்.
அச்சும் தமிழும்!
webdunia photo
FILE
தமிழ் ஆய்வுகள் இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் பல்வேறு உயர்ந்த நிலைகளை அடைந்துள்ளது என்றாலும், இன்றைய வளர்ச்சிக்கு அன்றைய துவக்கம் அத்தியாவசியமானது. தமிழக பதிப்பியல் வரலாற்றில் நமக்கு கிடைத்த முதல் நூல் தம்பிரான் வணக்கம் (1557).
துவக்கத்தில் கிறித்தவ மத போதனை நூல்களே அதிக அளவில் வெளிவந்தன. 1712 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சுக் கூடம் நிறுவப்பட்டது. இங்கிருந்து பல சமய நூல்களும், மொழி அகராதிகளும் வெளி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் சமய நூல்களே முதலில் வெளிவந்தன. பிறகுதான் மருத்துவம் சமுதாயம், இலக்கியம் சார்ந்த நூல்கள் வெளிவருகின்றன. 1810ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் தமிழில் புதிய பதிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருக்குறள் மற்றும் நாலடியார் ஆகியவை 1812ஆம் ஆண்டு பதிக்கப்பட்டதன் மூலம் இலக்கிய நூல்களின் வெளியீடு துவங்கியது. இதே ஆண்டில்தான் திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது.
தொல்காப்பியத்தையும், நன்னூலையும் நேரடியாக வாசிக்க முடியாமல் இருந்த காலக்கட்டத்தில் 1811ல் திருவேற்காடு சுப்புராய முதலியார் இலக்கண நூலை உரைநடையில் முதன் முதலாக வெளியிட்டார்.
அதன் பிறகு 1824 முதல் 1835 வரை சதுர்கராதி, தமிழ் அரிச்சுவடி, இலக்கண வினா-விடை மாதிரி, நன்னூல் மற்றும் நன்னூல் விருத்தியுரை ஆகியவை பதிக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில்தான் தமிழர் கல்வி இயக்கம் பெரிதும் களை கட்டியிருக்கும் என்று நாம் கருத இடமுண்டு.
நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழில் பல நூல்களை வெளியிட்ட மதுரை பாண்டித்துரைத் தேவர் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
மேலை நாட்டினரின் தமிழ்ச் சேவை!
webdunia photo
FILE
தமிழ்ப் பதிப்பியலிலும், தமிழ் மொழி ஆய்வு மற்றும் பரவல் ஆகியவற்றில் மேலை நாட்டு பண்டிதர்களின் பங்களிப்பை நாம் கூறுவதற்கு வார்த்தைகள் போதாது. ஜி.யு. போப், பெஸ்கி ஆகியோர் இலக்கண வினா-விடை மற்றும் கொடுந்தமிழ் ஆகிய நூல்களை மொழிபெயர்த்து வெளி நாட்டவர்க்கு அனுப்புவதற்காக வேண்டி தமிழிலும் பதிப்புச் செய்தனர். பல ஐரோப்பியர்கள் இந்த காலக்கட்டத்தில் தமிழறிஞர்களிடம் தமிழ் மொழியை கற்றறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றிற்கெல்லாம் பிறகே தொல்காப்பியம் பதிக்கப்படுகிறது. 1848ல் தொல்காப்பியத்திற்கான நச்சினார்க்கினியரின் உரை வெளியிடப்படுகிறது. 1885ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாமோதரம் பிள்ளை என்பார் தொல்காப்பிய பொருளிலக்கணத்தின் நச்சினார்க்கினியர் உரையை பதிக்கிறார்.
ஏடுகளிலிருந்து நூற்பா நிலையை நன்கு புரிந்து கொள்ளும் முறையில் முதன் முதலாக தொல்காப்பியத்தை மகாலிங்க ஐயர் என்பவர் பதிப்பிக்கிறார்.
அதன் பிறகு 1857ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் உருவாகிறது, இது மொழிசார்ந்த கல்வியில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்தது.
தமிழ் மொழியில் உள்ள பக்தி சிந்தாந்தம் சார்ந்த பல நூல்களை வெளியிட்டு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது சைவ சிந்தாந்த நூல் பதிப்புக் கழகம்.
webdunia photo
FILE
சங்க இலக்கிய பதிப்பியல் துறையில் முன்னோடிகளாக கருதப்படும் ஆறுமுக நாவலர் மற்றும் உ.வே. சாமிநாத ஐயர் ஆகியோர் திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளிட்டனர். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐங்குறுனூறு, பதிற்றுப்பத்து ஆகியவை வெளிவந்தன.
ஓலைச் சுவடிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து அவைகளை அச்சில் ஏற்றி புத்தகங்களாக வெளியிட்டு பாரம்பரியத்தைக் காத்த பெருமைக்குரியவர் தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத ஐயர்.
மறைமலையடிகள், மகாதேவ முதலியார், நாராயணசாமி ஐயர், அகநானூறு புகழ் இராகவ ஐயங்கார் ஆகியோர் சங்க இலக்கியப் பதிப்புகளில் அரும்பணி மேற்கொண்டவர்களாகின்றனர். பிறகு இதில் பெரும்பங்கு வகித்தவர் வையாபுரி பிள்ளை. இன்றும் அவரது தொகுப்புகள் கொடுக்கும் வாசிப்பனுபவம் ஒரு தனிச் சிறப்பு என்பதை மறுப்பதற்கில்லை.
webdunia photo
WD
சித்தர்களின் பாடல்கள், சித்த வைத்தியக் குறிப்புகள் ஆகியவற்றை ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சுக்கு ஏற்றி தாது வர்க்கம், மூல வர்க்கம் என்ற பெயரில் 1901ஆம் ஆண்டு இரண்டு புத்தகங்களை வெளியிட்டு கண்ணுசாமி பிள்ளை பெருமை சேர்த்தார்.
கடல்கோளால் காணாமல் போன சுவடிகளும் எழுத்துக்களும் ஏராளம். ஒரு மொழியின் இலக்கியங்கள் தொலைந்து போகிறது என்றால் அது அந்த பண்பாடு தொலைந்து போனதாகவே அர்த்தம். இதனை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அன்றைய பெரியோர்கள், அச்சு எந்திரம் என்ற கலாச்சார மீட்டுருவாக்க எந்திரத்தை நன்கு பயன்படுத்தி நமக்கு நமது பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய நடைமுறைகள் ஆகியவற்றை பதிப்புகள் மூலம் மீட்டுத் தந்துள்ளனர்.
ஒரு 200 ஆண்டுகால வரலாறு கொண்டது தமிழ் பதிப்பியற் துறை. இன்று கணினித் தொழில் நுட்பத்தின் வரவால் செம்பதிப்புகள் கொண்டு வரப்படுகின்றன. ஒளி அச்சு வடிவங்கள் கண்களுக்கு இனிமையாக வெளிவருகிறது.
அச்சு எந்திரங்களின் வருகையால் பெரிதும் பயனடைந்த ஒரு சமுதாயம் தமிழ் சமுதாயம் என்றால் அது மிகையாகாது.