சங்க இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கு
சனி, 28 பிப்ரவரி 2009 (12:51 IST)
தமிழின் பண்டைய மரபு இலக்கியங்களான சங்க இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்த 3 நாள் கருத்தரங்கு திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
வரும் மார்ச் 5,6,7 ஆம் தேதிகளில் இந்த கருத்தரங்கு பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கை சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிளாசிக்கல் தமிழ் என்ற அமைப்பின் நிதி உதவியுடன் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மற்றும் பிற அயல் நாட்டு மொழிகள் துறை நடத்துகிறது.
சங்க இலக்கியங்களின் இரு பெரும் பிரிவுகளான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் பல, ஆங்கிலத்தில் பல காலமாக மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. ஜி.யூ. போப் தொடங்கி ஏ.கே.ராமானுஜம் முதலாக பேராசிரியர் சண்முகம் பிள்ளை, டேவிட் லட்டன் உள்ளிட்டோரின் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் மற்றும் பல உள் நாட்டு, அயல் நாட்டு சங்க இலக்கிய ஆங்கில மொழி பெயர்ப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது பற்றிய விரிவான கருத்தரங்கமாக இது அமையும்.
இந்த 3 நாள் கருத்தரங்கில் பல்வேறு தமிழ், ஆங்கில கல்வியியலாளர்கள், கோட்ப்பாட்டாளர்கள் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சங்க இலக்கியங்கள் பற்றி பல்வேறு கோணங்களில் அலசவுள்ளனர்.
இந்த கருத்தரங்கில் சுமார் 5 பிரிவின் கீழ் கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளது:
1. தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்பு வேலைப்பாடுகளின் பரப்பு மற்றும் வரம்புகள் பற்றிய விமர்சன ஆய்வுகள்.
2. ஒரே வேலைப்பாட்டின் பல்வேறு தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புகள் குறித்த ஒப்பிட்டு ஆய்வுகள்.
3. சங்க இலக்கிய மொழியின் தனி வழக்கு, மற்றும் சங்க நூல்களை மொழி பெயர்க்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மொழி ரீதியான அருமைப்பாடுகள் குறித்த பயிலரங்க விமர்சனப் பார்வைகள்.
4. நடைமுறையில் இருக்கும் மொழி பெயர்ப்பை வாசித்து சோதனை செய்தல்.
5. மொழிபெயர்ப்பு கோட்பாடுகள்- அதாவது மொழிபெயர்ப்பு குறித்த மரபு, நவீனத்துவ மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள். இந்த கோட்பாடுகள் கீழை நாடுகளின் மொழிபெயர்ப்பு கோட்பாடுகளாகவும் இருக்கலாம் மேலை நாட்டு கோட்பாடுகளாகவும் இருக்கலாம்.
இது தவிரவும் தனிச்சிறப்பான விமர்சனப்பார்வைகள், மொழிபெயர்ப்பு குறித்த மேலும் துல்லியமான அகப்பார்வையும், தத்துவப் பார்வையும் கொண்ட கட்டுரைகளும் இந்த கருத்தரங்கில் வாசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரை வாசிப்பு முடிந்தவுடன் கட்டுரை மீதான விவாதமும் நடைபெறும். சங்க இலக்கியங்கள் குறித்த ஆர்வமுடையவர்களுக்கும் நவீன இலக்கிய, மொழிபெயர்ப்பு கோட்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடையவர்களுக்கும் இந்த கருத்தரங்கம் பயனுள்ளதாய் அமையும்.
மரபையும் விமர்சனங்களையும், விவாதங்களையும் விரும்பும் ஆர்வமுள்ள எந்த ஒருவருகும் இந்த கருத்தரங்கம் சுவையாக அமையும்.