.இலக்கிய நோபல் வென்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஜான் மாரி குஸ்தாவ் ல க்ளெசியோ! (J.M.G. Le Clezio)
பால்சாக், பாதலெய்ர், சார்த்ர், ஆல்பர் காம்யூ, மல்லார்மே, ராம்போ. பெக்கெட், ஆந்ரே மார்லோ, ஜார்ஜ் பெரெக், மைக்கேல் பூட்டர், மாரிஸ் பிளான்ஷோ என்று இலக்கிய உலகிற்கு சிந்தனை சிற்பிகளையும், நவீன சிந்தனாமய படைப்பாளிகளையும், செயலூக்கிகளையும் உருவாக்கிய பிரெஞ்ச் இலக்கிய வரிசையில் நீண்ட காலத்திற்கு பிறகு ஜான் மாரி குஸ்தாவ் ல க்ளெசியோ என்ற படைப்பாளிக்கு 2008ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
காலனியாதிக்கத்திலேயே ஊறி வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றின் அடக்கு முறைகளுக்கு சளைத்ததல்ல பிரான்ஸ். ஆப்பிரிக்க நாடுகளை பிரான்ஸ் அடக்கி ஆண்டு காலனிப்படுத்தியது என்பது வரலாறு. நோபல் பரிசு வென்றுள்ள ல கிளெசியோ தனது பெரும்பாலான நாவல்களில் காலனிய ஆதிக்கத்திற்கு முந்தைய, தொழிற்புரட்சிக்கு முந்தைய, நவீனத்துவம் நுழைந்த சீரழிவிற்கு முந்தைய ஆப்பிரிக்க நாடுகளின் மறைந்த கலாச்சாரங்கள், பிரதேசங்கள், இயற்கை எழில்கள், புதிர் வழிப்பாதைகள், இடங்கள் இவரது எழுத்துக்களில் பிராதான இடம் பிடித்துள்ளதால், இவர் ஒரு புரட்சியாளர் என்றே அடையாளம் காணப்பட்டார்.
இவர் ஏப்ரல் 13, 1940ஆம் ஆண்டு தெற்கு பிரான்ஸ் நகரான நைஸ் என்ற நகரில் பிறந்தார். இவரது தாய் பிரான்ஸைச் சேர்ந்தவர் தந்தை பிரிட்டன் மருத்துவர்.
இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டன் ராணுவத்திற்கு மருத்துவ சேவை புரிந்து வந்த இவரது தந்தை குடும்பத்தை பிரிந்து நைஜீரியா செல்ல நேர்ந்தது.
webdunia photo
WD
பிறகு 1948ஆம் ஆண்டு ல கிளெசியோ தந்தையுடன் இணைய ஆப்பிரிக்கா சென்றார். இந்த பயணம்தான் அவர் சந்தித்த தொன்ம உலகங்கள் வாயிலாக அவரது எழுத்தில் பெரும் தாக்கம் செலுத்தின. இந்த பயணத்தை அவர் 1991-ஆம் ஆண்டு வெளியிட்ட அரை சுயவரலாறு நாவலான ஓனிட்ஸ்சாவிலும் 2004-ஆம் ஆண்டு வெளிவந்த தி ஆஃப்ரிக்கன் என்ற நாவலிலும் காணலாம் என்று அவரது விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
அவரது முதல் நாவல் "தி இன்டெராகேஷன்" வெளி வரும் போது கிளெசியோவிற்கு வயது 23. இந்த நாவலில் மனோ வியாதி பீடித்த இளைஞன் ஒருவனது வாழ்வை சித்தரித்திருந்தார். இது விமர்சகர்களிடையே பரவலான பாராட்டை பெற்றது. இந்த நாவலும் இரண்டு விருதுகளை பெற்றது. 1980-ல் இவர் எழுதிய "டெசர்ட்" என்ற நாவல் விமர்சகர்களின் கவனத்தை பெற்றது.
வட ஆப்பிரிக்க பாலைவனப்பகுதிகளில் காணாமல் போன ஒரு கலாச்சாரம் பற்றி அந்த நாவல் பேசுகிறது.
அவர் எழுதிய சுமார் 40 படைப்புகளில், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், மற்றும் கட்டுரைகள், குழந்தை இலக்கியங்கள் அடங்கும். இவற்றில் பல ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது நவீன எந்திர உலகம் புகுந்து அழிக்கும் உலகிற்கு முந்தைய உலகை இவர் எழுதுகிறார்.
உலகின் ஆதி புனித நாகரீகமாக கருதப்படும் லத்தீன் அமெரிக்காவின் தொன்மையான மயன் (mayan) நாகரீகத்தின் பிரதிகளை மொழி பெயர்த்துள்ளார்.
1973-ஆம் ஆண்டு முதல் இவர் பிரான்ஸ், அமெரிக்கா, மொரீஷியஸ் என்று தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
1992-ல் இவர் எழுதிய "பவானா" என்ற நாவலில் அவரது கனவு குறித்து எழுதியுள்ளார். : "ஆதியில், அதாவது முதல் பெரும் துவக்கத்தில், கடலில் ஒருவருமே இல்லாத போது, பறவைகளும், சூரிய ஒளியையும் தவிர வேறு எதுவும் இல்லாத போது, குழந்தை பிராயம் முதல் அந்த இடத்திற்கு செல்ல கனவு கண்டிருக்கிறேன், இந்த இடம் அதாவது எல்லாம் துவங்கி எல்லாமும் முடிவுறும் இந்த இடம்."
இவரது படைப்புகளை 20-ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோவும், கில்லெஸ் டெல்யூஸும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
1985-ஆம் ஆண்டு கிளாட் சிமோன் என்ற படைப்பாளிக்கு பிறகு தற்போது 23 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் எழுத்தாளர் ஒருவருக்கு இலக்கியத்திற்கான நோபல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது