பரதக் கலை தமிழர் கலையே: கோவை ஞானி

வியாழன், 18 நவம்பர் 2010 (17:36 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் பிறந்ததென்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை இன்று இந்தியாவில் நிலவுவதை தாங்கள் குறிப்பிட்டீர்கள்.

சமீபத்தில் நடந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு பத்மா சுப்பிரமணியம் என்கிற பரத நாட்டிய கலைஞர் ஒரு பள்ளியைத் துவக்குகிறார். அந்த பள்ளிக்கு பரத்வாஜ முனிவருடைய பெயரை வைத்து துவக்குகிறார். இதற்கு, அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, அது தமிழருடைய வாழ்க்கையோடு இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக 'பரத்வாஜ இளங்கோ நடன ஆய்வு மையம்' என்று பெயர் சூட்டி, அதனை அவரே திறந்தும் வைத்துள்ளார்.

அறிஞரான உங்களுக்குத் தெரியும். பரதம் என்ற சொல்லிக்குரிய அந்த பரத நாட்டியக் கலை என்பது தமிழருடைய சதிராட்டம் என்பதே. இதனை தேவநேய பாவாணர் அவர்கள் மிகப்பெரிய ஆய்வு நடத்தி அதை மெய்ப்பிக்கும் போது ஒரு விவாதத்திலேயே இதே பத்மா சுப்பிரமணியத்தோடு மோதும் பொழுது, அது ஒரு ஆரிய கலை என்றும், அது பரத்வாஜ முனிவருடைய கண்டுபிடிப்பு என்றும் ப‌த்மா சுப்ரமணியம் சொன்னார். அதனால் பின்னாளில் தேவநேய பாவாணருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூட அறிஞர் ஒருவர் எனக்குக் கூறினார்.

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய நிகழ்வு ஒன்று உண்டு. அன்றைக்கு அந்தக் கலைஞருடைய செய்தியைப் படிக்கும் போது அது எனக்கு நினைவிற்கும் வந்தது. அதனால் கோபமும் ஏற்பட்டது. என்னவென்றால், இதேபோல் ருக்குமணி அரண்டேல் முதன் முதலில் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து டெல்லியில் பேசும் போது, இதுதான் பரத நாட்டியம் என்று சொன்னபோது, பரதத்தில் மிகச் சிறந்து விளங்கிய பால சரஸ்வதி அவர்கள் மேடைக்குச் சென்று, இன்று நீங்கள் பரத நாட்டியம் என்று சொல்வது சதிராட்டம் என்கின்ற தமிழர் கலைதான் என்று சொல்லி ஆடி, நிரூபித்து, அது தமிழருடைய கலைதான் என்பதை மெய்ப்பித்தார். இது வரலாறு.

அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பால சரஸ்வதிக்கு உண்டு. இப்படிப்பட்ட நிலையில், இதையெல்லாம் அறிந்திருக்க வேண்டிய, அறிந்து செயல்பட்டிருக்க வேண்டிய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், ஆரிய வழிபட்டது இந்தக் கலை என்று சொல்லக் கூடிய பத்மா சுப்பிரமணியத்திற்கு, நடனம் தொடர்பான பள்ளிக்கூடம் என்றே வைத்துக்கொள்ளுங்கள் - ஆய்வு என்பது இருக்கட்டும் - அதற்கு அனுமதித்து, தானே அதனைத் தொடங்கியது வைத்துள்ளார். இது செம்மொழி மாநாட்டினுடைய நோக்கத்திலிருந்து மிகப்பெரிய அளவில் முரண்படுகிறதா இல்லையா?

கோவை ஞா‌னி: உண்மைதான். பத்மா சுப்பிரமணியத்தினுடைய நடனத் திறன் என்று சொல்லக்கூடியது பிரமாண்டமானது, வியக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. அதேபோல, பால சரஸ்வதி மற்றவர்கள் எல்லாம் அதனை தமிழர் கலை என்று மெய்ப்பித்துள்ளார்கள். ஆனால், பத்மா சுப்பிரமணியம் விடாப்பிடியாக, பரதம் என்று சொல்லக்கூடியது சமஸ்கிருதத்தோடு தொடர்புடையது, பரத முனிவரோடு தொடர்புடையது என்று சொல்லி வருகிறார். விடாப்பிடியா தமிழறிஞர்கள் இதனை மறுத்தும் வருகிறார்கள்.

எனக்கு எப்பொழுது நடந்தது என்று நினைவில் இல்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். இதைப்பற்றி கேரளாவில் ஒரு விவாதம் வந்த சமயத்தில், பத்மா சுப்பிரமணியம் அந்த அரங்கில் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு அறிஞர், மிகத் தெளிவாக ஒரு உண்மையைப் போட்டு உடைத்தார். பரத முனிவர் வாழ்ந்தது கேரளா. பரத முனிவர் வாழ்ந்த காலம் என்று சொல்லக்கூடிய அந்தக் காலம் கேரளா தமிழ்நாடாக இருந்த காலம்தான் என்கின்ற உண்மையை போட்டு உடைத்தார்.

இசை, நடனம் முதலியவற்றிற்கெல்லாம் ஆதார நூல்கள் என்றால் சிலப்பதிகாரம், அரும்பக ஆசிரியர் உரை, அடியாசனார் உரை முதலியவைகளெல்லாம் உள்ளன. அதுமட்டுமல்ல, சங்க இலக்கியத்தில் இருந்து பெரிய அளவில் மமுது போன்றவர்கள் ஏராளமான ஆதாரங்களை எடுக்கிறார்கள். இசை சங்க இலக்கியத்தில் பெற்றிருக்கிற பதிவுகள், அதேபோல நடனம் பதிவு பெற்றிருக்கிற நிகழ்ச்சிகளெல்லாம், கூத்து பற்றியெல்லாம் நிறைய இருக்கிறது.

அப்படியாயின், பரத முனிவர் கேரளாவில், தென் இந்தியாவில் வாழ்ந்தார் என்றால் அது தமிழ்நாடுதான். இளங்கோ வாழ்ந்தது கேரளப் பகுதி. அப்படியென்றால், தமிழ்நாடுதான் இந்த பரதத்திற்கும், இசைக்கும் ஆதாரக் களம் என்பதற்கான ஆதாரங்கள் இப்படி ஏராளம் இருக்கும்போது, திரும்பத் திரும்ப பத்மா சுப்பிரமணியம் சொல்வது அல்லது பரத்வாஜ முனிவரோ யாரோ பெயர் சொல்வது முதலியவைகளெல்லாம், கலைஞர் ஒப்புக்கொண்டு போனால் போகட்டும் அந்தப் பெயர் இருந்திருக்கட்டும், இளங்கோவினுடைய பெயர் இருக்கட்டும் என்று ஒப்புக்கொண்டு, நிலத்தை நன்கொடையாகக் கொடுக்கட்டும், பள்ளி ஏற்படுத்தட்டும் நமக்கு ஒன்றும் மறுப்பில்லை, அது வேண்டும். சொல்லப்போனால் தமிழனுடைய கலைதான் பரதம் என்பதை ஈழத்தவர்கள் மிக நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

கலைஞர் எப்பொழுதுமே ஆரியத்தோடும், திராவிடம் என்று பேசினாலும் கூட ஆரியத்தோடு சமரசத்திற்கு எல்லா வகையிலும் உடன்பாடாக இருக்கக் கூடியவர்தான். இந்திய அரசோடு செய்யக் கூடிய சமரசம். சொல்லப்போனால் ஈழத்தை அழிப்பதில் சிங்களவர்களோடும், இந்திய அரசோடும் முழு அளவில் ஈடுபாட்டுடன் செயல்பட்ட கலைஞரிடத்தில் வேறு எதிர்பார்ப்பிற்கு ஒன்றுமில்லை. அவர் அப்படித்தான் செய்வார்.

வெப்துனியாவைப் படிக்கவும்