தமிழாய்வு என்பது தமிழியக்கமாக எந்த அளவிற்கு தொடர்கிறது?
புதன், 1 டிசம்பர் 2010 (18:35 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: அரசினுடைய பார்வையில் இருந்து செம்மொழி மாநாட்டை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தமிழினுடைய மேம்பாடு தமிழனுடைய விடுதலையில்தான் சென்று முடிய வேண்டும் என்று சொன்னீர்கள்.
தமிழாய்வு என்பது எப்பொழுதும் ஒரு தமிழியக்கம் போலவே நடைபெற்று வந்துள்ளது. திராவிட இயக்கம் தொடக்க நாளில் மாபெரும் தமிழியக்கமாக இருந்தது. தமிழர்களின் வரலாற்றை தோண்டியெடுத்து நம் காலத்திற்கு தேவையான பொருள் கண்டு அதை அரசியல் களத்தில் வைத்து செயல்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். மனோன்மணியம் சுந்தரனார், மறைமலை அடிகள் போன்றோரும் இந்த திராவிட இயக்கத்தை தூண்டி எழுப்பியவர்கள். அண்ணா இந்த இயக்கத்தின் உச்சம். மறைமலை அடிகள், பாவாணர் வழியே தமிழகத்தில் பேராற்றலாக வளர்ச்சி பெற்றது தனித் தமிழ் இயக்கம். அதன் உச்சமாகத் திகழ்ந்தவர் பெருஞ்சித்தரனார் என்று கூறி தமிழ்நாட்டினுடைய சமூக அரசியல் வரலாற்றில் தமிழ் மொழியினுடைய மேம்பாட்டிற்கு உதவியவர்கள் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டீர்கள். இன்றைய நிலையில் அப்படிப்பட்ட அந்த தமிழாய்வு என்பது தமிழியக்கமாக இப்பொழுது எந்த அளவிற்கு தொடர்கிறது?
கோவை ஞானி: இன்றைக்கு தமிழியக்கம் என்று சொல்லக்கூடியது, தமிழ்நாட்டோடு மட்டுமல்ல, உலக அளவில் தமிழ் மக்கள் பரவியிருக்கிறார்கள். இலங்கையில் நடைபெற்ற கொடுமைகள் காரணமாக ஏராளமான தமிழஞர்கள், தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். இதேபோல 200 ஆண்டுகளுக்கு இடையில் பிஜி தீவு, தென் ஆப்ரிக்கா முதலிய நாடுகளுக்கு எராளமான தமிழ் மக்கள் போனார்கள்.
எனக்கு வியப்பு ஏற்பட்ட நிகழ்ச்சி என்னவென்று சொன்னால், தென் கொரியாவில் ஆய்வு செய்யக் கூடிய என்னுடைய ஒரு நண்பர் கொரிய மொழியில் நிறைய தமிழ்ச் சொற்கள் என்று சொன்னார். பிலிப்பைன்ஸில் ஆய்வு செய்யச் சென்ற நண்பரும் சொன்னார் அங்கும் நிறைய தமிழ்ச் சொற்கள் என்று. இவற்றில் ஒன்றும் வியப்பில்லை, ஏற்கனவே அறிந்த செய்திகள்தான்.
இந்த அளவில் பார்க்கும் பொழுது, இன்றைக்கு தமிழியக்கம் என்று சொல்லக் கூடியது உலக அளவிற்கு தமிழ், தமிழ் நாகரிகம் எங்கெல்லாம் சென்றதோ அதை உள்ளடக்கி செய்ய வேண்டிய ஒரு ஆய்வு. சில அறிஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். செம்மொழி நிறுவனம் என்பது இவர்களையெல்லாம் உள்ளடக்கி செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவொருபக்கம் இருக்க, தமிழ் இயக்கம் என்று சொல்லக்கூடியது, ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கூடியது அவ்வளவும் தமிழ் இயக்கங்கள்தான். அவற்றிற்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்கிற விமர்சனங்களை முன்வைத்தாலும் கூட, அவை தமிழ் இயக்கம்தான். அந்த வகையில் பார்த்தால், ஈழத் தமிழர்கள் மீது நாம் வைத்திருக்கும் பற்று முதலியவைகளெல்லாம் தமிழியக்கத்தினுடைய கூறுகள்தான்.
தனித் தமிழ் இயக்கம் என்று சொல்லக்கூடியது முன்பு போல வீருடன் இல்லையென்றாலும் கூட அந்த இயக்கம் இன்றும் இருக்கிறது என்பது உண்மைதான். வட மொழிச் சொற்களை தமிழிலிருந்து நீக்க வேண்டும் என்பதைப் போலவே ஆங்கிலச் சொற்களையும் நீக்க வேண்டும் என்கிற ஒரு உணர்வும் தமிழறிஞர்கள் மத்தியில் இருப்பது என்பது இதனுடைய தொடர்ச்சிதான்.
தமிழ் இயக்கம் என்று சொல்லும் போது ம.பொ.சி.யை சொல்லியிருந்தேன், ஆதித்தனாரைச் சொல்லியிருந்தேன். இவர்களுடைய இயக்கங்கள் கூட இன்றைக்கு பெரிய அளவில் செயல்படவில்லை என்பது உண்மைதான். அப்பொழுது, தமிழியக்கம் என்று சொல்லக்கூடியது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வீரோடு, ஆற்றலோடு இன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழ் உணர்வு இருக்கின்றது, தமிழ் அமைப்புகள் என்று சொல்லக்கூடியவை இருக்கின்றன. இவற்றிற்கிடையில் ஒருங்கிணைவு இல்லை என்பது உண்மை என்றாலும் கூட தமிழை மேம்படுத்தி ஆக வேண்டும் என்கின்ற உணர்வு பொதுவாக இருக்கின்றது.
உண்மையில் தமிழ் இயக்கம் என்பதில் தமிழ்த் துறையில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள், பள்ளிகளில் பணியாற்றக்கூடிய தமிழாசிரியர்கள் முன்பு போல - முன்பெல்லாம் அத்தனை பெரிய ஈடுபாட்டுடன் இருந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கு எந்தவகையான ஈடுபாடு இல்லை - மறைமலை அடிகளோ, பாவணரோ எவ்வளவு ஆற்றலோரு தமிழியக்கத்தில் இருந்தார்களோ, ம.பொ.சி., ஆதித்தனார் போன்றோர் எவ்வளவு தூரம் தமிழியக்கத்தை வளர்ப்பதில் ஆற்றலோடு செயல்பட்டார்களோ அந்த ஆற்றலோடு செயல்படக்கூடிய தமிழறிஞர்களையோ, தமிழியக்கத்தையோ இன்று குறிப்பிடும்படி இல்லை. ஒரு சிலர் இருக்கலாம். இவர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதைத் தவிர இதைப்பற்றி வேறு சிறப்பாகச் சொல்வதற்கு எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.