அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஃப்ரிமாண்ட்டில் வாசம் செய்யும் குமார் குமரப்பன் அவர்களின் காணல் இடம்பெறுகிறது.
நம் தமிழ் மொழியை அயல் மண்ணாம் அமெரிக்க மண்ணில் அறிவுசார் பல்கலைக்கழகம் ஒன்று கற்றுக்கொடுக்கிறது! அந்தப்பல்கலைக்கழகம் பெர்க்கிலி பல்கலைக்கழகம்!
கலிஃபோர்னியாவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்க முன்னின்று முயற்சி கண்டவர்களுள் கலிபோர்னியாவைச் சேர்ந்த நா.குமார் குமரப்பன் அவர்களும் ஒருவர்!
தமிழகத்தில் B.E.(Electronics & Commn); USல் M.S.(Electrical) படித்தவர். 25 ஆண்டுகளுக்கு மேலாக கலிபோர்னியாவை (சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி) இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருபவர். ரிக்கோ நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார். (Ricoh Corporationல், Director of Engineering)
எந்த ஒரு சூழலிலும் மனித நேயத்துடனும், ஆகாயத்தைப் பார்த்து அற வாழ்விற்கு தடம் போட முயலாமல் அக்கம் பக்கத்தின் சமூகப் பிரச்சனைகளில் அக்கரை கொள்கிறவராகத் திகழ்கிறார். இதனால் பொதுநலப் பொறுப்புகள் பல இவரைத் தேடி வந்து சேர்ந்துகொண்டது!
இவரின் தமிழ் வளர்ப்பு முயற்சிகள்:- 1980 - சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவிய குழுவில் ஒருவர். 1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவிய நிதி திரட்டும் குழுவிற்குத் தலைவர்.
2002 - உத்தமம் (INFITT) சார்பாக, சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த தமிழ் இணைய மாநாட்டிற்குத் (TI 2002) துணைத் தலைவர். உத்தமத்தின் (INFITT) தற்சமய பொருளாளர்.
கலிபோர்னியா தமிழ் கழகத்தின் (CTA - California Tamil Academy)துணைத் தலைவர் - இது கலிபோர்னியா தமிழ் அமெரிக்கர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் முயற்சி - தற்சமயம் கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் இங்கு தமிழ் கற்கின்றார்கள்.
ஈழத் தமிழர்களின் துயரில் பங்கு கொண்டு, இங்குள்ள TNC (Tamils of Northern California) அமைப்பின் மூலம் சிறு சிறு முயற்சிகள் மூலம் உதவ முயலும் மனித நேயம் என்ற இவரின் தொண்டு கரைகாணா கடலாய்த் தொடர்கிறது.
தமிழர்களே தமிழர்களோடு தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் உரையாடுது குறித்துத் தங்கள் கருத்து என்ன? குமார் குமரப்பன் : இதற்குரிய பதில் சற்று சிக்கலானது . ஆங்கில அறிவு இன்றைய நடைமுறைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது என்பது உண்மை. இருப்பினும் தமிழகத்திலேயே வாழும், ஆங்கிலம் அவ்வளவு தேவையில்லாத , சராசரி தமிழன் கூட தம் ஆங்கில அறிவை வெகுவாக வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு ஆங்கிலத்திலேயே பேச முயற்சிக்கின்றான்.
இங்குள்ளவர்களுக்கு வேலையிலும் மற்ற பல சூழல்களிலும் தமிழ் இல்லாததால், சிலருக்கு பல வருடங்களில், தமிழிலேயே பேசுவது கடினமாகிப் போகின்றது. மற்றும் பலருக்கோ ஆங்கிலத்தில் உரையாடுவது ஒரு வரட்டு கௌரவமாகிவிட்டது. ஆக மொத்தம் பல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் வேற்று மொழிச் சொற்கள் உபயோகிப்பது இயல்பாகிக்கொண்டிருப்பது நிதர்சனம்.
இந்த சாபக்கேடு தமிழ் மொழிக்கு மட்டுமே என்று கூற முடியாது. இருப்பினும் நம் சமூகத்தில் இது சற்று அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது . இந்த போக்கை மாற்ற நம் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களுக்கும் , நம் வெகுசன ஊடகங்களுக்கும் , இங்கே ஒரு பொறுப்பு உண்டு . ஆனால் அவர்களோ 'பொல்லாத சில பேர்க்கு இது நாகரீகம், புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்' என்ற கவிஞனின் வாக்கை மெய்பிப்பதுபோல், தம் நடைமுறைகளை மேற்கொள்கின்றார்கள். அதாவது தமக்கே உரித்தான செல்வாக்கை பயன்படுத்தி இந்தச் சாய்வினை நிறுத்த /மாற்ற முயற்சிக்காமல் அதை வலுப்படுத்தவே முனைகின்றார்கள். இந்த வலையில் விழாமல், தமிழனின் மனப்போக்கு மாற வேண்டுமென்றால் தமிழன் பொருளாதரத்தில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும். தனது மொழி மீதும் இனத்தின் மீதும் நியாயமான பற்றுக் கொண்டு பெருமிதத்தோடு வாழ நம் மொத்த சமூகத்தின் பொருளாதர மேன்மை பெரிதும் உதவும் என்றே நம்புகின்றேன்.
சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நீங்கள் தமிழ் சங்கம் அமைக்க எது தூண்டுதலாயிருந்தது?
குமார் குமரப்பன் : மொழி, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே உண்டாக்கப்பட்ட ஒரு கருவி அல்ல. நம் கலாச்சாரமும், வரலாறும், தற்சமய வாழ்க்கை முறைகளும், நம் மொழியில் அது தரும் அறிவில் புதைந்து கிடக்கின்றன. நம் மொழியைச் சுற்றியுள்ள ஒரு சூழல்தான் எனக்கு இயல்பானதாகத் தெரிகின்றது, இதமான ஒரு நிறைவைத் தருகின்றது. அடிப்படைத் தேவைகளுக்குப் பிறகு என் மனம் தேடியது இந்த சூழலைத்தான். புலம் பெயர்ந்து வாழ வந்த இந்தப் பகுதியிலும் இந்தச் சூழலை உண்டாக்கத் தேவையான முக்கியமான தளமாக நான் கருதியது ஒரு உள்ளூர் தமிழ்ச் சங்கத்தைத்தான். மேலும் தமிழனுக்கு ஆண்டாண்டு காலமாகத் தமிழ்ச் சங்கம் தொடங்கும் பாரம்பரியமுண்டு. வளமான நம் மொழியும், கலாச்சாரமும் தொலைந்து விடாமலிருக்க, அது பெருக, பழந்தமிழன் இந்த 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளத்தை பேணி வளர்த்து, பாதுகாத்து போற்றியிருக்கின்றான். இந்த தாக்கமும் என்னிடம் இயல்பாக இருந்திருக்க வேண்டும்.
நம் முப்பாட்டனும், பாட்டனும் வளர்த்து பராமரித்து நம்மிடம் ஒப்படைத்து விட்டுப் போன நம் மொழியை, கலாச்சாரத்தை நாமும் நம் சந்ததியரிடம் முறையே சேர்க்கவேண்டு என்ற பொறுப்புணர்வும் உண்டு. இதற்கெல்லாம் ஒரு வடிவம் கொடுப்பதுதான் 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளங்கள். இந்த தாக்கங்களுடன்தான், ஒத்த கருத்துடைய சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து 1980ல் 'சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ' என்ற தமிழ் மன்றத்தைத் தொடங்கினோம். இத்தமிழ் மன்றத்தின் இன்றைய இணையத் தளத்தை இங்கு காணலாம்: <http://www.bayareatamilmanram.org/>
குமார் குமரப்பன் : நான் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் முதல் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்தேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொடங்கும் தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைத்து நடத்தும் வாடிக்கையான நிகழ்ச்சிகளை எங்கள் தமிழ் மன்றமும் நடத்தியது. அத்துடன் நின்றுவிடாமல் ஓரிரு வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
தமிழர்கள் கூடிட ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது, தமிழர் பண்டிகைகள் கொண்டாடுவது, தமிழ்த் திரைப்படங்கள் திரையிடுவது என்பன சில முயற்சிகள். இம்முயற்சிகள் தமிழ் மன்றங்களின் வாடிக்கையான செயல்களே. இது தவிர சில வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம். இதற்கு அதிக உந்துதலும், நேரமும், முயல்வும் தேவையாகயிருந்தது. இந்த வேறுபட்ட முயற்சிகள் வருமாறு:
அ) இலக்கிய கூட்டங்கள் - இதைக் கலந்துரையாடல் என்றே சொல்லவேண்டும். எங்கள் மத்தியில் யாரும் பேராசிரியகளோ , இலக்கிய வல்லுனர்களோ இல்லை. இருந்தும் ஆர்வலர்கள் சிலர், தமக்குப் பிடித்த தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டு, அதை விரித்துக் கூறி, கூடியிருந்தவர்களுக்கு அவ்விலக்கிய நூலில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த முயல்வது.
ஆ) எங்களில் சிலரிடம் தமிழ் நூல்கள் ஓர் அளவிற்கு சேர்ந்திருந்தன. இதையெல்லாம் ஒன்று திரட்டி, சிறிய நடமாடும் நூலகம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழ் நூல்கள் கொடுத்து வாங்க ஏதுவாக இருக்க வழி செய்தோம். சிலருக்கு தமிழ் நூல்களில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் முயன்றோம்.
webdunia photo
WD
இ) சிறுவர்கள் தமிழ் கற்க தமிழ் வகுப்புகள் வடிவமைத்து நடத்தி வந்தோம் .
ஈ) கணினியில் தமிழ் தட்டச்சடிக்க வசதிகள் இல்லாத காலம். தமிழிலேயே அறிக்கைகள் வெளியிட, ஆவணங்கள் உருவாக்க, தமிழகத்திலிருந்து தமிழ் தட்டச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி இங்கு வரவழைத்தோம்.
குமார் குமரப்பன் : சமூக அக்கறையினால் அதன் பிரச்சனைகளில் ஈடுபாடு கொண்டு, அதை எதிர்த்து வன்மையாகப் போராடி, அதற்கு ஒரு தீர்வு கண்டு , அதில் மன நிறைவு கொண்ட அனுபவங்கள் எனக்கு உண்டு என்று கூற முடியாது. நம் சமூகத்தின் பல பிரச்சனைகள் இன்றும் தொடரும் பிரச்சனைகள்தான்.
தமிழகத்தில் காணும் ஏழ்மை, அதனால் ஏற்படும் கொடுமைகள், இதனால் அடிபட்டுப் போகும் மனித நேயம் , இவை யாவும் சமூக அக்கறை கொண்ட எவரையும் உறுத்தத்தான் செய்யும். நம்மால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு உதவிகளைத்தான் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனங்களின் மூலம் செய்ய முடிகின்றது. குறிப்பாக அனாதை/ஏழைக் குழந்தைகளின் அவலங்கள் ஒரு பெருங்குறையே . இதில் அடங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் இருக்க, எங்களால் முடிந்த ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் தத்தெடுத்து எங்கள் மகளாக இங்கு வளர்க்கின்றோம் . இது பெரும் மன நிறைவைத் தருகின்றது. அதற்கும் மேலும் எங்கள் மகளின் செய்கைகள் தரும் இன்பங்கள் எங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை.
மூட நம்பிக்கைளில் ஊறிப் போனது நம் சமூகம். ஆழமான ஆன்மீகத்திற்கும் ஆடம்பரமான சடங்குகளுக்கும் வேறுபாடு தெரியாமல் வெத்துக் கூத்துகளில் மூழ்கியிருப்போர் அநேகர். இவர்களை மாற்ற பல தலைமுறைகள் தேவை என்றே தோன்றுகின்றது. நான் முயற்சிப்பதோ என்னை சுற்றியுள்ள நண்பர்களும் சொந்தங்களும் இந்த வலையில் சிக்காமல் இருக்கத் தேவையான ஈடுபாடே. இதுவே எனக்கு ஒரு சவால்தான் .
நியாயமான மொழிப் பற்றும் இனப் பற்றும் அற்று நம் பாரம்பரியத்தையும் , கலாச்சாரத்தையும் தொலைத்துக் கொண்டு வருபவர்கள் பெரும்பான்மையானோர். இதுவும் என் கண்ணோட்டத்தில் நம் சமூகப் பிரச்சனையே . ஆயினும் என்னால் முடிந்தது என்னைச் சுற்றியுள்ள , குறுகிய சிலரிடம் மட்டுமே ஒரு விழிப்புணர்வை, மாற்றத்தை உண்டு பண்ண முடிகின்றது.
ஆக இது போல் பலவும் தொடரும் பிரச்சனைகளே.
நாம் முனைப்போடு நம் தகுதிக்கேற்ப முயன்றாலும், தீர்வுகள் அவ்வளவு எளிதாகத் தென்படுவதில்லை. நாமும் நம் முயற்சிகளில் குறை வைப்பதில்லை . நம் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் என்ற தெளிவு உண்டு.
தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது அதைச் செயல்படுத்த எண்ணிய உங்களுக்கு ஏற்பட்ட ஆதரவின்மை, தோள்கொடுத்த சக நண்பர்கள் என்ற இருவேறு நிலைகளில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
குமார் குமரப்பன் : முதல் முதலாகத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதை செயல்படுத்த முற்பட்டது, 1980களில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் மூலமே. தமிழ் கற்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே முக்கியமான சில கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன.
இந்த கருத்து வேறுபாடுகள் தமிழ் மன்றத்தின் புது உறுப்பினர்களிடமிருந்து வர ஆரம்பித்தது . தமிழ் மட்டும் கற்றுத் தருவது போதாது, நம் கலாச்சாரத்தையும் நம் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டும் . நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சம் தெய்வ வழிபாடு . அதற்கு உகந்த சம்ஸ்கிருத சுலோகங்களும் சொல்லித் தர வேண்டும் என்று ஒரு சாரர் பிடிவாதம் பிடிக்க, அது போக தமிழ் பயில வருபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பெரிய அளவில் இல்லாததால் , தமிழ் கற்பிக்கும் முயற்சிகள் 80களில் பிசுபிசுத்ப் போய், பிறகு தமிழ் மன்றத்தின் மூலம் தமிழ் கற்பிக்கும் முயற்சி காணாமலே போய்விட்டது . இது வருத்தத்திற்கு உரிய ஒரு விடயம்தான். பல ஆண்டுகள் கழித்து , தமிழ் மன்றம் மூலம் இல்லாமல், தனியார் முயற்சிகளால், மீண்டும் தமிழ் கற்பிக்கும் படலம் துளிர் விட ஆரம்பித்தது.
பெர்க்கிலி பல்கலை தமிழ் இருக்கையில் தங்கள் பங்களிப்பில் மன நிறைவு அடைந்த நிகழ்வு குறித்து...?
குமார் குமரப்பன் : பெர்க்கிலி பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை சராசரி அமெரிக்கத் தமிழர்களின் முயற்சியால் சாத்தியமானது. 1991ல் ஆரம்பமான இம்முயற்சி 1997ல் தமிழ் இருக்கையை நிறுவிய பின்னரே நிறைவு பெற்றது. இந்த இருக்கை அமைக்கத் தேவையான நிதி திரட்டும் குழுவிற்கு நான் தலைமை தாங்கினேன். இந்தத்தமிழ் இருக்கை இன்று பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது . பல தமிழ் அமெரிக்கர்களின் பிள்ளைகள் பெர்க்கிலியில் தமிழ் கற்க உதவியாக உள்ளது. மேலும் , வட அமெரிக்காவில் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்வோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பைத் தருகின்றது . "Tamil is one of the best kept secrets. தமிழ் ஆராய்ச்சிகளை தமிழர்களே தமிழில் செய்து வருவாதால்தான் தமிழின் பெருமை உலகத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை", என்ற கருத்து தமிழ் இருக்கையின் தலைவரான பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பகிர்ந்து கொண்ட ஒன்று.
அதை நிவர்த்தி செய்வது போல், நாம் மேற்கத்தியர்களிடமும் உலக அறிஞர்களிடமும் நாம் தமிழைக் கொண்டு செல்ல , பெர்க்கிலி தமிழ் இருக்கை ஒரு நல்ல அடித்தளம் . பெர்க்கிலி தமிழ் இருக்கையில் ஆராய்ச்சி மாணவர்களாக இருந்த சிலரே இன்று மற்ற அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் தெற்கு ஆசிய மையங்களில் ஆராய்ச்சி/ஆசிரியர்களாக இருப்பதே இதற்கு நல்ல சான்று. இதுவே நம் உழைப்பின் பயன். மற்றும் தமிழ் இருக்கை இங்கு பெர்க்கிலிக்குத் தமிழ்ப் பேராசிரியர்களையும் அறிஞர்களையும் அழைத்து வந்த பொழுது , சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் 'Fireside Chats' என்ற தொடரின் மூலம் தமிழ் சார்ந்த தலைப்புகளில் அவர்கள் சுவையான கலந்துரையாடலில் பங்கு கொண்டது அறிவு சார்ந்த மனதை விரிவாக்கும் அனுபவம்.
உத்தமம் குறித்தும் அதில் உங்கள் ஈடுபாடு குறித்தும் உத்தமத்தின் சாதனையாக நீங்கள் கருதுவது குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
தமிழ், இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அறிவு சார்ந்த துறைகளிலும் , தற்கால ஊடகங்களிலும், கணினியிலும், இணையத் தளங்களிலும், சிக்கலின்றி வளம் பெற்று பெருகுவதற்கான தடத்தை, தளத்தை, தமிழர்களாகிய நாம் தமிழுக்கு அமைக்க வேண்டும். அந்தப் பின்னனியில் உருவானதே உத்தமம். உத்தமம் (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம். INFITT - INternational Forum for Information T echnology in Tamil) என்பது தமிழில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெருக்க, தமிழ் தொழில்நுட்ப அறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அலச ஏற்பட்ட ஒரு அமைப்பு. உத்தமம், இங்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக/இலாப நோக்கு இல்லாத ஒரு அமைப்பு . தற்சமயம் இவ்வமைப்பிற்கு நான் பொருளாளராக உள்ளேன்.
உத்தமம் பற்றி அறிந்து, அதன் உள்நடைமுறைகளை அறியாதவர்கள், இந்த அமைப்பிடம் அநேக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்ததால் உத்தமம் தமிழ் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஒன்றையும் வழிநடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடும். ஒரு கோணத்தின் பார்வையில் அதில் உண்மையிருக்கலாம். ஆயினும், உத்தமம், எதையும் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு அல்ல . மேலும் எழுத்துருவிற்கான தரவு போன்ற விவாதங்களில், பல தரப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த, மாற்றுக் கருத்துக்களுக