அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு : போராட்டம் முடிவுக்கு வந்ததா?

திங்கள், 23 ஜனவரி 2017 (11:00 IST)
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிற பிப்ரவரி 1ம் தேதி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என அந்த ஊர்கமிட்டி மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர்.


 

 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில், தமிழக அரசு கடந்த சனிக்கிழமை, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், நிரந்தர சட்டத்தை இயற்றும் வரை போராட்டம் நீடிக்கும் என போராட்டக்காரர்கள் அறிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில், இன்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். கோவையில் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
 
சென்னை மெரினா கடற்கரையில், போராட்டத்தை கைவிட மறுத்த இளைஞர்கள் தொடர்ந்து கடலின் அருகில் சென்று மனித சங்கிலி அமைத்து போராடி வருகின்றனர். அவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூகமான முடிவு ஏற்பட்டதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிற பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அந்த ஊர்கமிட்டி அறிவித்துள்ளது. 
 
தங்களுக்காக போராடிய மாணவர்களுக்கு நன்றி தெரிவித்த ஊர்கமிட்டி, அலங்காநல்லூருக்கு வந்து ஜல்லிக்கட்டை கண்டுகளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்ததோடு, அவர்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்க அவர்களுக்கென தனி கேளரி அமைக்கப்படும்  எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
ஊர்க்கமிட்டி முடிவெடுத்தாலும், போராட்டக்காரர்கள் இன்னும் போராட்டக்களத்தில் இருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். போலீசார் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்