மதுரையில் நாளை காலை ஜல்லிக்கட்டு - ஓ.பி.எஸ் தொடங்கி வைக்கிறார்

சனி, 21 ஜனவரி 2017 (16:33 IST)
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


 

 
ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வேண்டும் மற்றும் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகமெங்கும் இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தும் அவர்கள் அதை நிராகரித்துவிட்டனர்.  ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கை விட மாட்டோம் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்னும் சிறிது நேரத்தில் பிறப்பிக்கவுள்ளார். எனவே ஜல்லிக்கட்டிற்கான தடை நீங்கி விடும். மேலும், நாளை மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இதை தொடங்கி வைப்பதற்காக இன்று இரவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வார் எனத் தெரிகிறது. இதற்காக வாடி வாசலை தூய்மை படுத்தும் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், இந்த அவசர சட்டம் 6 மாதத்திற்கு மட்டுமே செல்லும். எனவே இந்த அறிவிப்பை போராட்டக்காரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்