ரூ. 251க்கு ஸ்மார்ட்போனா! இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் ஏமாற்றம்

வியாழன், 18 பிப்ரவரி 2016 (14:09 IST)
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, 251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 




 
 





ப்ரீடம் 251 (FREEDOM 251) என்ற பெயரில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட் போனை நேற்று டெல்லியில் அறிமுகம் செய்தது. இன்று காலை 6 மணிக்கு இந்த ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஸ்மார்ட்போன், நான்கு இன்ஞ் திரை, 1.3GHz Quad-core பிராஸசர், 1 ஜிபி ரேம், 8 ஜி.பி. உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ள முடியும்), 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் கேமரா, லாலீபாப் 5.1 இயங்குதளம் மற்றும் ஒரு 1450mAh பேட்டரி கொண்டது.

இது ஒரு ஆண்டு வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் 650 இடங்களில் சர்வீஸ் சென்டர்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
 
இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போனை வாங்க ஓரே நேரத்தில் www.freedom251.com என்ற இணையதள முகவரியில் லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்ய வந்திருந்ததால், அந்த இணையதளம் திடீரென முடங்கியது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.  
 
இந்நிலையில், ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்களுக்கு ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், தங்களுடைய வலைதளத்திலேயே ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 



 
 
அந்த அறிவிப்பில், "நண்பர்களே உங்களின் அளவு கடந்த வரவேற்புக்கு நன்றி! நொடிக்கு சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் வருவதால் எங்களின் வலைதள சர்வரால் இயங்க முடியவில்லை.

நாங்கள் இதனை சரி செய்து கொண்டிருக்கிறோம். அடுத்த 24மணி நேரத்திற்குள், இப்பிரச்சனையை முடித்து மீண்டும் வருவோம். வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும், வரவேற்பிற்கும் எங்களின் மதிப்புக்குரிய நன்றிகள்" என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்