இந்திய மொழிகளில் விளம்பரம்: வெப்துனியாவிற்கு ஐடிஎம்ஏ விருது
சனி, 13 மார்ச் 2010 (10:51 IST)
இணையத் தளங்களில் இந்திய மொழிகளில் சிறப்பாக விளம்பரங்களை அளித்தமைக்காக 2010ஆம் ஆண்டிற்கான இந்தியன் டிஜிட்டல் மீடியா விருது எமது வெப்துனியா.காம் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இந்திய ஊடகங்களில் ஆங்கில மொழியிலேயே பெரும்பான்மையான விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால், இந்திய மொழிகளில் அந்த விளம்பரங்களை பல ஆண்டுக்காலமாக தொடர்ந்து அளித்து வருகிறது வெப்துனியா.காம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, வங்காளி ஆகிய 9 இந்திய மொழிகளில் இணையத் தளங்களை நடத்திவரும் வெப்துனியா.காம், இந்த மொழிகளிலேயே எல்லா விளம்பரங்களையும் மாற்றித் தருகிறது. இது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதன் காரணமாக, விளம்பரப்படுத்தப்படும் பொருட்களுக்கும் வரவேற்பு கூடியுள்ளது.
WD
வெப்துனியா.காமின் இந்த சீரிய முயற்சி இந்த ஆண்டின் ஐஎம்டிஏ விருதை அதற்குப் பெற்றுத்தந்துள்ளது. கடந்த 11ஆம் தேதி மும்பையிலுள்ள தாஜ் விடுதியில் நடந்த விழாவில் வெப்துனியாவிற்கு அளிக்கப்பட்ட விருதை எமது நிறுவனத்தின் விற்பனைத் துறை தலைமை அலுவலர் அர்பன் சாட்டர்ஜி பெற்றுக் கொண்டார்.
“எங்களுடைய முயற்சியை டிஜிட்டல் விளம்பர சமூகம் அங்கீகரித்துள்ளது பெருமையளிக்கிறது” என்று கூறியுள்ள எமது நிறுவனத்தின் முதன்மை இயக்க அலுவலர் பங்கஜ் ஜெயின், “டிஜிட்டல் விளம்பரங்களில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் காரணமாக, தங்களுடைய பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல மொழி ஊடகங்களை நோக்கி விளம்பரதாரர்கள் திரும்பியுள்ளனர். இதனை நன்குணர்ந்த வெப்துனியா, உலகளாவிய அளவில் அளிக்கப்படும் விளம்பரங்களைக் கூட இந்திய மொழிகளில் அளிப்பதால், விளம்பரப்படுத்தப்படும் பொருட்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்குப் பரிச்சயமான மொழிகளில் மிக எளிதாக அதனைப் புரிந்துகொள்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
“இந்திய மொழிகளில் விளம்பரங்களை அளிக்க வேண்டும் என்று விளம்பர முகவர்கள் விரும்புவதால், ஆங்கில மொழியிலுள்ள விளம்பரங்களை இந்திய மொழிகளில் மாற்ற வெப்துனியாவை நாடுகின்றனர்” என்று கூறியுள்ள அர்பன் சாட்டர்ஜி, “இந்திய மொழிகளில் விளம்பரங்களை உருவாக்கும் எங்கள் நிறுவனத்தின் படைபாளிகளால், மொழிகளில் விளம்பரங்களைத் தந்து அதன்மூலம் மிக அதிகமான பார்வையாளர்களை (ஆங்கிலத்தை விட 3 மடங்கு) விளம்பரங்கள் பெறுகின்றன” என்று கூறியுள்ளார்.
WD
“தங்கள் வணிக அடையாளங்களை விளம்பரப்படுத்தும் உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், டிபிஇசட், எஸ்பிஐ, ஐடிபிஐ, பாரத் மேட்ரிமோனி போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களை இந்திய மொழிகளில் பெறுவது மிகப் பெரிய சவாலாகும்” என்று கூறியுள்ள பங்கஜ் ஜெயின், “விளம்பரக் கருத்துக்களை, புதிய உருவாக்கத்துடனும், புதுமையுடனும் ஒன்றிணைத்து, அதனை உள்ளூர் வாசத்துடன் அளிக்கும் எங்களின் வெற்றித் திட்டமே பெரும் நிறுவனங்களையும் எங்களை நோக்கி ஈர்க்கிறது” என்று கூறியுள்ளார்.