ஆந்திராவில் டெலி மெடிசன் சேவை துவக்கம்

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (17:22 IST)
ஆந்திர மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அம்மாநில அரசு புரட்சிகரமான நடவடிக்கையாக `104 ஃபிக்சடு டே ஹெல்த் சர்வீசஸ்' (FDHS) வசதியைத் தொடங்கியுள்ளது.

ராஜீவ் ஆரோக்யஸ்ரீ சுகாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கான இந்த தொலைதூர மருத்துவ சேவை வசதியை முதல் அமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தொடங்கி வைத்தார்.

பொது சுகாதார மையங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டு வாழும் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும், சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சுகாதாரா மேலாண்மை முறையில் இந்த சேவை வழங்கப்படுவதாக முதல்வர் கூறினார். இந்த டெலி மெடிசன் வசதியை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உருவாக்கியுள்ளது.

இந்த சேவையின் கீழ் மருத்துவ சேவை வழங்கப்படும் மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவச மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஆந்திராவின் மெஹபூப் நகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, ஸ்ரீகாகுளம், அடிலாபாத், கடப்பா ஆகிய மாவட்டங்களில் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவித்த ராஜசேகர ரெட்டி, மாநிலம் முழுவதும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் டெலி மெடிசன் சேவை அளிக்கப்பட்டு விடும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்