கூகுள், ஏர்டெல் இணைந்து மொபைலில் இலவச இன்டெர்நெட்

வியாழன், 27 ஜூன் 2013 (14:56 IST)
செல்போன் மூலமாக இணையதளத்தைப் பயன்படுத்தும் வசதியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க ஏர்டெல் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளன.

இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூகுள் (Google), ஜிமெயில் (gmail), கூகுள்+ (Google+) ஆகிய சேவைகளை எந்தவித டேட்டா கட்டணமும் இன்றி பெற முடியும். இணையதளங்களின் முதல் பக்கத்தை இலவசமாக பார்க்க முடியும். எனினும் இச்சேவையில் தரவிறக்கம் (Downloads) உள்ளிட்ட கூடுதல் வசதிகளை பெற கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஃப்ரீ ஃஜோன் (Free zone) என்ற பெயர் கொண்ட இச்சேவை மூலம் செல்போன் இணையதளத்தின் வசதியை பல கோடி மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் என ஏர்டெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தகவல் தேடுதல், இமெயில் வசதி, சமூக தளங்கள் பயன்பாடு ஆகியவற்றை இலவசமாக பெறலாம் என்றும், பார்த்தி ஏர்டெல் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ராஜாராம் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் மூலமாக இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், தங்களின் சேவை இணையதள பயன்பாட்டை இன்னும் ஊக்குவிக்கும் என கூகுள் இந்தியா துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்