ஆறரை லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி : இண்டல் ஒப்பந்தம்!

Webdunia

புதன், 25 ஜூலை 2007 (13:49 IST)
நமது நாட்டின் 6 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய வசதியுடன் கூடிய கணினி மையத்தை ஏற்படுத்தும் மாபெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இண்டல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது!

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சமூக சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு கடன் மற்றும் நிதி சேவை நிறுவனத்துடன் இண்டல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் இடைவெளியை நிரப்பும் இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையத்துடன் கூடிய கணினி வசதியை ஏற்படுத்தி அதன்மூலம் அனைத்து தகவல்களையும் கிராமத்தினர் பெற வழிவகுப்பது மட்டுமின்றி, கணினிக் கல்வியையும் அறிமுகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி செய்கிறது.

உலக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததை செய்துகொண்டுள்ளதாகக் கூறிய இண்டல் நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் ஜான் மெக்ரூ, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்தியாவின் கிராமங்கள் அனைத்திற்கும் கணினி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் மகராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், பீகார், கர்நாடகா, ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 5,000 சமூக சேவை மையங்கள் அடுத்த 12 மாதங்களில் உருவாக்கப்படும். (ஏ.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்