அரையிறுதிக்கு முன்னேறுமா சென்னை? இன்று டேர் டெவில்சுடன் மோதல்

வியாழன், 15 ஏப்ரல் 2010 (16:15 IST)
சென்னை, எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று முக்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றுள்ள டெல்லி அணிக்கு இது அரையிறுதிக்கு முன்னேற கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி டேர் டெவில்ஸ் பேட்ஸ்மென்கள், குறிப்பாக சேவாக், கம்பீர் ஆகியோர் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வருகின்றனர். இதனால் அந்த அணிக்கு கடந்த 3 போட்டிகளில் பின்னடைவு ஏற்பட்டது.

துவக்கத்தில் அபாரமாக வீசி வந்த அமித் மிஷ்ரா கடந்த 3 போட்டிகளில் 11 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி 86 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.

டேவிட் வார்னர், காலிங்வுட் ஆகியோரின் ஆட்டமும் கேள்விக்குறியாக உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூரிடம் தோல்வி அடைந்ததால் டெல்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று வென்றாக வேண்டும், அல்லது இன்று தோல்வி தழுவினால், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நல்ல முறையில் வெற்றி பெறவேண்டும்.

டெல்லி அணி அட்டவணையில் 3-வது இடத்திற்கு வந்தால், அந்த அணி வெற்றிகளை குவித்து வரும் மும்பை இந்தியன் அணியை அரையிறுதியில் சந்திக்கவேண்டியிருக்காது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ்.தோனி, தமிழக ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை வின்னிங் ஃபார்முலாவாக மாற்றியுள்ளார். சிக்கனமாக வீசுவதோடு அவர் துவக்கத்தில் விக்கெட்டுகளைச் சாய்த்து எதிரணியினரை எழும்ப விடாமல் செய்துள்ளார்.

புள்ளிகள் அளவில் இரு அணிகளும் ஒரே நிலையில் இருந்தாலும் நிகர ரன் விகிதம், தன்னம்பிக்கை ஆகிய விதங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்