இலவச கல்விப்பணி மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது லட்சியம்!
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்கிறார் வள்ளுவர்.
அன்னச் சத்திரங்கள் ஆயிரம் கட்டி பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பதை விட ஓர் ஏழைக்கு கல்வி அளிப்பது தான் தானத்திலேயே மிக உயர்ந்த தானம் என்கிறது தமிழ் மூதுரை.
ஆனால், வணிக யுகமாகிப் போன இந்த காலக் கட்டத்தில், கல்வியை இலவசமாக கற்றுத்தர எவரும் முன்வருவதில்லை. அதனால், 2009ஆம் ஆண்டான இந்த காலத்தில் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு உயர் கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அவர்களுக்கு நாட்டின் முக உயரிய பணிகளாக கருதப்படும் இந்திய ஆட்சிப் பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளும் பகல் நேர கனவாகத்தான் உள்ளது.
webdunia photo
WD
இதையெல்லாம் உணர்ந்து தான், ஏழை மாணவ, மாணவிகள் பயன் பெறுவதற்காகவே தனது மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எ.ஸ். பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார் தமிழக முன்னாள் சட்டசபை உறுப்பினரும், மனித நேயமிக்க சமூக சேவகருமான சைதை. துரைசாமி.
தமிழகம் முழுவதிலுமிருந்து ஏழை மாணவர்களை தேர்வு செய்து, சிறப்பான முறையில் இலவசப் பயிற்சி அளித்து, அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், தங்குமிடம், உணவு ஆகியவற்றையும் இலவசமாகவே அளித்து வருகிறது மனிதநேய அறக்கட்டளை.
இந்த ஆண்டு இந்திய அரசுப் பணித் தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வு எழுதியவர்களில் 791 பேர் இந்திய அரசுப் பணிகளான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவற்பணி (ஐபிஎஸ்), இந்திய அயலுறவுப் பணி (ஐஈஎஸ்) ஆகியவற்றிற்குத் தேர்வாகியுள்ளனர். இவர்களின் 96 பேர் தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றுள்ளனர். இதில் 25 பேர் மனிதநேய அறக்கட்டளை இலவசமாக நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் பயின்று தேர்வு பெற்றவர்கள். இந்த மையத்திலிருந்து இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 65 பேர் நேர்காணலிற்குத் தகுதி பெற்றனர். அவர்களி்ல் 25 பேர் இந்திய அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். கடந்த ஆண்டு இம்மையத்தில் பயிற்சி பெற்று தேர்வெழுதியவர்களில் 12 பேர் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைஅறிந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது மனித நேய அறக்கட்டளையின் தலைவர் சைதை. துரைசாமிக்கு. பாராட்டு மழையில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த அவரை தமிழ்.வெப்துனியா.காம் இணையத்தளத்துக்காக நேர்காணல் செய்தோம்.
ஏழை மாணவ, மாணவியரை வருங்கால மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளாக மாற்ற முயற்சிப்பது ஏன்? என்பது குறித்தும், தனது எதிர்கால சேவைத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார் சைதை.துரைசாமி.
தமிழ்.வெப்துனியா: மனிதநேய அறக்கட்டளை சார்பில் தாங்கள் நடத்திவரும் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ, மாணவியர்கள் 25 பேர் இந்த ஆண்டுக்கான இந்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இதற்கு எங்களது தமிழ்.வெப்துனியா.காம் இணையதளம் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் தனியொரு நிறுவனமாக எந்த பயிற்சி நிறுவனமும் இந்த அளவுக்கு ஒரே தேர்வில், இத்தனை மாணவ, மாணவிகளை தேர்ச்சி பெறச் செய்ததில்லை. அந்த சாதனையை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இந்த சாதனைக்கு எதை முக்கிய காரணமாக கூறுகிறீர்கள்?
சைதை துரைசாமி: நமது மையத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாணவ, மாணவிகள் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் அல்லது ஓரு ஜாதியை சார்ந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் நாங்கள் பார்ப்பதில்லை. தகுதியும் திறமையும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளை தேடி கண்டுபிடித்து தகுதி இருப்பவர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டுகின்ற ஒரு தன்மையை இந்த மையம் கொண்டுள்ளது.
பல பேருக்கு ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் இருகிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. அப்படிப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முறையாக வழிகாட்டும் மையமாக இது திகழ்ந்துகிறது. அதற்காக பல நிபுணர்களை, சிறந்த பயிற்சியாளர்களை தேடிகண்டுபிடித்து கொண்டுவந்து சிறந்த பொது அறிவுத்திறன் பயிற்சி அளிக்கிறோம்.
நேர்முகத் தேர்வுக்கு போகும்போது, தேர்வு நடத்துகின்றவர்கள் எந்த அடிப்படையில் கேள்வி கேட்கின்றனர். எந்த மாதிரியான கேள்விகளை கேட்கின்றனர் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து அதை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். இப்படி ஒவ்வொரு கோணத்திலும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் வெற்றிபெற அவர்களின் பெற்றோர்கள் எப்படி முயற்சி செய்வார்களோ, அதேபோன்று, ஏன் அதை விட பல மடங்கு கூடுதலாகவே அக்கறை செலுத்தி, தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம். அதனால்தான் இந்த அளவுக்கு எங்களால் மாணவ, மாணவிகளை வெற்றிப்பெற வைக்க முடிந்தது.
தமிழ்.வெப்துனியா: முன்பெல்லாம் டெல்லிக்கு போய் படித்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுதினால் சுலபமாக வெற்றிபெற முடியும் என்ற கருத்து நிலவியது. ஆனால், இன்று உங்களது பயிற்சி மையம் வந்த பிறகு, இங்கிருந்தே படித்து வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2006இல் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம், மிக குறுகியக் காலத்தில் அதிகளவு மாணவ, மாணவிகளை இந்திய ஆட்சிப் பணிக்கு அனுப்பி சாதனை செய்ததும், இப்படிப்பட்ட ஓர் நம்பிக்கையை மாணவ, மாணவிகள் மனதில் ஏற்படுத்தியதும் எப்படி?
webdunia photo
WD
சைதை துரைசாமி: முழுக்கவனம் செலுத்தி படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில்கூட வெற்றிப்பெற முடியும். எவ்வளவுதான் படித்து வெற்றிப் பெற்றாலும், நேர்முகத் தேர்வு என்பது ஓர் ஆளுமைத் திறனுக்கான அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை கொடுப்பதற்கான தகுதி, அந்த மாணாக்கருக்கு இருக்கிறதா என்பதை முதலில் பார்க்கிறார்கள். முதன்மைத் தேர்வின் மூலம் வெற்றிப் பெற்ற பல மாணவர்கள், நாங்கள் கொடுத்த சிறந்த பயிற்சியின் காரணமாக நேர்முகத் தேர்விலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
நேர்முகத் தேர்வின் போது, தேர்வு செய்பவர்களை தைரியமாக, தயக்கமில்லாமல், பதற்றமில்லாமல் எந்த மாணவர் எதிர்கொள்கிறாரோ, அந்த மாணவரே தேர்வு செய்யப்படுகிறார். இதனால் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு போன்ற அனைத்திலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
முதல் நிலை தேர்வில் அவர்கள் சில பட்டியலை தருகிறார்கள். அதன்படி நாங்கள் பயிற்சி அளிப்பது மட்டுமல்ல, அதை எவ்வாறு படிக்க வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பது உட்பட கூடுதலாக பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கிறோம். இதனால்தான், ஆண்டுதோறும் வெற்றிப் பெற்றோரின் பட்டியல் உயர்ந்துகொண்டே போகிறது.
அடுத்ததாக, முதன்மை தேர்வுக்காக கொடுக்கப்படும் மாநில மற்றும் மத்திய அளவிலான பாடத் திட்டங்களை கொண்ட என்.சி.இ.ஆர்.டி. புத்தகத்தை பாடங்களையும் நன்றாக படித்து, தேர்வு எழுதினால் நாம் நிச்சயமாக ஐ.ஏ.எஸ். ஆக முடியும். அதோடு, நாள்தோறும் தவறாமல் செய்தித்தாள்கள் படிப்பது, தொலைக்காட்சி போன்ற ஊடகச் செய்திகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவது போன்றவற்றையும் நாம் பின்பற்ற வேண்டும்.
அனைத்து தேர்வு முறைகளிலும் நாங்கள் பலதரப்பட்ட நிபுணர்களை, அனுபவம் முக்க சான்றோர்களை, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்களை எல்லாம் அழைத்துவந்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, திறமைகளை ஊக்குவித்துக் கொண்டிருகிறோம். உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஊக்குவித்தலும், விடாமுயற்சியும்தான் மாணவர்களுக்கு வெற்றியை தேடி தந்துக்கொண்டிருக்கிறது. எங்களது மையத்தில் படித்த வந்த ஸ்ரீதர் என்ற ஓர் மாணவர், 11 முறையாக போராடி தற்போது வெற்றிப் பெற்றுள்ளார்.
தற்போது, பணிபுரிபவர்களும் பணியில் இருந்துகொண்டே, ஐஏஎஸ்., ஐபிஎஸ் தேர்வு எழுதும் வகையில் ஓர் புதிய முறையை உருவாக்கியுள்ளோம். இதற்காக 'நெட் ஸ்கூல்' என்ற புதிய இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த தளத்திற்குள் நீங்கள் சென்றால் ஐஏஎஸ் தேர்வுக்காக நீங்கள் எதை படிப்பது, எப்படி படிப்பது போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும். மாணாக்கர்களின் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் அதில் தீர்வு காண முடியும். அனைத்துவிதமான பாடத்திட்டங்களையும் அதில் அறியலாம். தங்களது கேள்விகளுக்கு இணையதளம் மூலமே பயிற்சியாளர்களிடம் பதில் பெறும் வசதியும் அதில் உள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தமிழக மாணவ, மாணவியர்தான் அதிகளவில் தேர்ச்சி பெறும் நிலைமை ஏற்படும். தமிழகத்தில் இருந்து மட்டுமே 40, 50 அல்லது 60 சதவீத வெற்றி விகிதங்கள் கிடைக்கும். அநத லட்சியத்தை நோக்கிதான் எங்களது மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையம் சென்றுக்கொண்டிருக்கிறது.
தமிழ்.வெப்துனியா: தங்களது பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்கள், அதில் வெற்றிப் பெற்றவர்கள் எத்தனை? இந்த ஆண்டு தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்கள் எத்தனை?
சைதை துரைசாமி: கடந்த ஆண்டு மொத்தம் 76 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி, அதில் 12 பேர் இந்திய ஆட்சிப் பணிகளுக்கு தேர்வு பெற்றனர். இந்த ஆண்டு மொத்தம் நமது பயிற்சி மையம் சார்பில் 65 பேர் தேர்வு எழுதி, அதில் 25 பேர் இந்திய ஆட்சிப் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். அந்த வகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
தமிழ்.வெப்துனியா: இந்த மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உறைவிடம், பாடப்புத்தகங்கள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை தேர்ச்சி பெற செய்வதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும்?
சைதை துரைசாமி: மாணவ, மாணவியருக்காக செலவு செய்வதை நாங்கள் விளம்பரம் செய்ய விரும்பவில்லை. அதனால் அதைப்பற்றி சொல்லவும் விரும்பவில்லை. இந்த கல்விப் பணிக்காக நாங்கள் யாரிடமும் நன்கொடையும் பெறுவதில்லை. என்னுடைய வருமானம் மற்றும் சொத்தில் இருந்து மட்டுமே இந்த கல்விப் பணிக்காக செலவு செய்யப்படுகிறது. எங்களது பல்வேறு சமூக நலப்பணிகளை பார்த்து, நன்கொடை வழங்க பலரும் தயாராக இருக்கிறார்கள் என்றாலும், மனிதநேய அறக்கட்டளை சார்பில் யாரிடமும் நிதியுதவி பெறக்கூடாது என்பதை அறக்கட்டளையின் ஓர் விதியாகவே வைத்துள்ளேன். காரணம், எனக்கு பிறகு எனது தலைமுறையை சேர்ந்தவர்கள் கூட, இந்த அறக்கட்டளைக்காக யாரிடமும் நன்கொடை வாங்கிவிடக்கூடாது. அதனால்தான் எனது சொத்துக்களை விற்று, அதை வைப்புத்தொகையாக வைத்து, அதில் வருகின்ற பணத்தை வைத்து இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். இந்த உலகம் இருக்கும் வரை இந்த அறக்கட்டளையும் இயங்க வேண்டும் என்ற வகையில் இதை செயல்படுத்தி வருகிறேன்.
லண்டனை சேர்ந்த ஒரு பொதுசேவை நிறுவனம், எங்களது அறக்கட்டளையின் சேவைகளைப் பார்த்து, லட்சம் பவுண்டுகளுக்கு மேல் நன்கொடை தர முன்வந்தது. ஆனால், அதை நாங்கள் வாங்க மறுத்துவிட்டோம். எனினும், அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, நீங்கள் அந்த பணத்தை தந்தாலும் அதை வாங்குவதற்கு எங்களது அறக்கட்டளையின் விதிமுறையில் இடம் இல்லை என்று தெரிவித்துள்ளோம்.
தமிழ்.வெப்துனியா: பொதுவாக, கல்விப் பணியில் ஈடுபடுபவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டுவார்கள். ஆனால், நீங்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். இலவச பயிற்சி நிறுவனம் நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு எந்த மாதிரியான சேவை செய்வதாக நினைக்கின்றீர்கள்?
webdunia photo
WD
சைதை துரைசாமி: நான் ஒரு உறுதிமொழி பத்திரம் எடுத்துள்ளேன். அதுதான் எனது சமூக நோக்கம். அதன்படி, சமூகம் மாற வேண்டும் என்று நினைப்பவன், தான் முதலில் மாற வேண்டும். நான் மாற்றத்தை விரும்புகிறவன். எனவே, முதலில் நான் மாறி, அதன் பிறகு இந்த சமூகத்தை மாற்ற முயற்சிக்கிறேன்.
நான் சட்டசபை உறுப்பினராக இருந்த போதே, ஓர் ஆட்சிப் பணி அலுவலர் என்றால் எப்படி இருக்க வேண்டும். ஒரு அரசியல்வாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை தாக்கத்தின் விளைவுதான் இது. கல்வி, வியாபாரமாகிவிட்ட இந்த காலத்தில் நான் நினைத்திருந்தால் ஓர் பல்கலைக்கழகத்தையே உருவாக்கி இருக்க முடியும். ஆனால், கல்வியை வியாபாரமாக்கி, விற்பனை செய்வது ஓர் கயமைத்தனம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அதனால்தான் நான் கல்வியை வியாபாரமாக்கவில்லை. எனது கடின உழைப்பால், முயற்சியால் நான் ஈட்டிய வருமானத்தை செலவு செய்து, இன்று அறக்கட்டளைக்காக செலவு செய்துக்கொண்டிருக்கிறேன்.
எனது வருமானத்தை எப்படி செலவு செய்யலாம் என்று நான் யோசித்தபோது, அது மக்களுக்கு பயன் தருவதாகவும் இருக்க வேண்டும். நமக்கு மரியாதை தருவதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அந்த தொலைநோக்கு பார்வையில் உதித்தது தான், இந்த இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையம். இதன் நோக்கம், சமூக மாற்றம் வேண்டும் என்பதுதான். இன்னும், 5 ஆண்டுகள் போனால் தான் எனது நோக்கம் என்ன, அதன் பலன் என்ன என்பது மக்களுக்கு தெரிய வரும்.
ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் சிறப்பாக செயல் பட்டால் அந்த நாடு முன்னேற்றம் அடையும். ஆனால், இன்றைய நமது சட்டத் திட்டங்கள் வேலியே பயிரை மேய்கின்ற கதையாகத்தான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், இப்படி இலவசக் கல்வி கொடுத்து இலவச உதவிகளை செய்து, நல்லவர்களை உயர் பதவியில் அமரவைத்து, தான் பட்ட சிரமங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்று உணர்த்த வேண்டும். அதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பயிற்சி மையத்தை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருகிறோம்.
தமிழ்.வெப்துனியா: உங்கள் முயற்சிக்கு தமிழ்.வெப்துனியா.காம் சார்பில் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.