இருந்த பாதுகாப்பையும் இந்தியா இழந்துவிட்டது

புதன், 10 ஜூன் 2009 (13:26 IST)
இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா.வில் விவாதத்திற்கு வருவதற்கு முன்பே அது பற்றிய தகவல்களை உலக நாடுகள் அறியச் செய்யும் நடவடிக்கையில் நீங்கள் (மக்கள் சமூக உரிமைக் கழகம்) ஈடுபட்டீர்கள் என்று கூறப்படுகிறதே?

webdunia photoWD
ஆம் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டோம். ஆனால் உலக அளவில் என்று பார்க்கும்போது எங்களது தொடர்பு குறைவுதானே. ஒரு சில நாடுகளை மட்டுமே எங்களால் தொடர்பு கொள்ளப்பட்டு நிலைமையை விளக்க முடிந்தது.

இப்போதும் ஒன்றும் முடிந்துவிடவில்லை, காலம் இருக்கிறது. இன்னும் அதிகமான பொறுப்புகள் உள்ளன. தமிழ்.வெப்துனியா.காம் வாயிலாக உலக அமைப்புகளுக்கு நான் கோரிக் கொள்வது ஒன்றுதான், நமது வேலை இன்னும் அதிகமாகியுள்ளது,

இந்தியாவில் ராணுவ ஆட்சி (அவசர நிலை) 2 ஆண்டுகள் மட்டுமே இருந்தது. பயங்கரமான கொடுமைகள் நடந்தன. மதுரையில் நீதிபதி தார்குண்டே மீது கூட தாக்குதல் நடந்தது. முன்னாள் நீதிபதி, தேசியத் தலைவர் போன்றவரையே காவலர்கள் அடித்துவிட்டனர். ஆகையால் முன்னாள் நீதிபதி என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் நம்மூர் காவலர்கள். பாரபட்சம் பார்க்காமல் அடிக்கிறார்கள்.

அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதனை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் அரசியலில் இது மறைக்கப்பட்டுவிட்டது. இன்றைய தலைமுறைக்கு அதுபற்றி (அவசர கால கொடுமைகள் குறித்து) எதுவுமே தெரியாது. பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகத்தில் இதைப் பற்றி எங்காவது வந்துள்ளதா? யாராவது அறிந்து கொண்டுள்ளார்களா? எதுவும் இல்லை.

ஒரு கூட்டத்தில் ராணுவ ஆட்சியைப் பற்றி நான் பேசியதைக் கேட்டு, எனது மகள் கேட்கிறாள், அது என்னப்பா ராணுவ ஆட்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்கள் பாடப்புத்தகத்தில் எல்லாம் அப்படி ஒன்றும் இல்லை, இந்திரா காந்தி நல்ல தலைவர், நல்ல நிர்வாகி என்றெல்லாம் மட்டும் இருக்கிறது. இது பற்றி போடவில்லையே என்கிறாள். இதற்குக் காரணம், அந்த வரலாறு மூடிமறைக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இதுபோன்று இலங்கை இனப் படுகொலை வரலாறும் மூடி மறைக்கப்பட்டுவிடக் கூடாது. இறந்தவர்களின் உயிர்கள் பயனில்லாமல் போய்விடக் கூடாது. இதனை உலக சமுதாயத்தின் முன் கொண்டு வர வேண்டும். வரலாறுகளில் இடம்பெற வேண்டும். இந்த நேர்காணலைப் படிக்கும் அனைவருக்கும் அந்த பொறுப்பு உரித்தாக்குகிறேன்.

இலங்கையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று ஓரளவிற்குத்தான் தெரியவருகிறது. ஐ.நா.வில் இருந்து வெளியான தகவல்களும், சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை. இப்படி இருக்க, இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை எப்படித்தான் அறிவது? எங்கிருந்து ஆதாரத்தை திரட்டுவது?

webdunia photoWD
அதுதான் மிகப் பெரிய கடினம். யாருமே அங்கு உள்ளே நுழைய முடியாது. எத்தனை பேர் முகாமுக்கு வந்தனர், எங்கிருந்து வந்தனர் என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. அங்கிருந்த 3 தமிழ் மருத்துவர்கள் காணாமல் போயுள்ளனர். அதில் ஒருவர்தான் நேரடி சாட்சியாவார். எத்தனை பேர் இறந்தனர், எத்தனை குண்டுகள் மருத்துவமனை மீது விழுந்து வெடித்தன என்பதை அறிந்தவர்.

ஒருவர் சத்திய மூர்த்தி, வரதராஜா, மற்றொருவரும் உள்ளார். ஒருவர் படுகாயங்களுடன் மோசமான நிலையில் வெளிவந்துள்ளார். அவரைப் பாதுகாக்க நாங்கள் சுமார் 4,000 மருத்துவர்களுக்கு கடிதம் அனுப்பினோம். அவர்களும், மருத்துவர்களின் உயிரைக் காப்பாற்றக் கோரி குரல் கொடுத்துள்ளனர்.

அதேபோல அங்கிருந்த அரசு ஏஜென்ட் பார்த்திபனும் காணாமல் போயுள்ளார். இப்பவும் அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை.

அவர்தான் கடைசியாக 83,000 குடும்பங்களைச் சேர்ந்த 3,30,000 பேர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறார்கள் என்று கூறினார். உணவுத் தேவைக்காக அவர் இந்த கணக்கை அளித்தார்.

ஐ.நா.வுடன் சேர்ந்து கொண்டு இலங்கை அரசு ஒரு கணக்கை அளித்துள்ளது. அதாவது 2,78,000 பேர் என்று....

அதனால்தான் உடனடியாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்கள் மன அழுத்தத்திற்குள்ளாகி, பீதியில் மன நிலை பாதிக்கப்படுவதற்குள், அவர்களுக்கு மன நல நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் உதவி செய்வது போல கூடவே இந்த கணக்கையும் எடுக்க வேண்டும்.

ஒவ்வொருவரையும், அவர்களது குடும்பத்தார், அவர்களது உறவினர்களைப் பற்றிய கணக்கை கேட்டு எடுக்க வேண்டும்.

இது பயங்கரமான வெயில் காலம். மே 20ஆம் தேதியில் இருந்து கடந்த 15 நாட்களில் பயங்கரமான வெயில். இந்த நிலையில் இறந்த உடல்கள் எங்கே இருக்கப் போகிறன். அந்த கணக்கை எல்லாம் அறியும் காலம் போய்விட்டது. அப்படி ஆக வேண்டும் என்பதால்தான் இத்தனை நாட்களாக வெளி ஆட்களை உள்ளே அனுமதிக்கவில்லை இலங்கை அரசு.


மேலும், கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அதிகப்படியான ஆட்கள் இறந்திருப்பதும், உடல்களை மறைப்பதற்காக, சிங்கள ராணுவத்தினர் உடல்களை ஹெலிக்காப்டர் மூலம் தூக்கிச் சென்று கடலில் வீசியுள்ள தகவலும் கிடைத்துள்ளது.

webdunia photoWD


எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டு மட்டுமே உண்மையான பலி எண்ணிக்கையை அறிய முடியும், நிச்சயம் முடியும். ஏனெனில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் 3 லட்சம் பேர். அவர்களிடம் கேட்டு எல்லா உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

நாளை ஐ.நா.வில், இலங்கைக்குச் சென்று வந்த பான் கீ மூன் இது பற்றி பேச உள்ளார். அப்பொழுது இலங்கையில் நடந்தது என்ன என்பது குறித்த உண்மை வெளி உலகத்திற்கு தெரிய வர வழி உள்ளதா?

இனிமேல் இருக்கக் கூடிய காலகட்டத்தில், ஐ.நா.வின் நடுநிலைமை மீதே சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, பான் கீ மூனின் அரசியல் ஆலோசகர் விஜய் நம்பியாரின் தம்பி சத்திஷ் நம்பியார்தான் இலங்கையின் ராணுவ ஆலோசகராக உள்ளார். விஜய் நம்பியார் எப்போது இலங்கை வந்தாலும், தனது தம்பியை பார்க்காமல் போக மாட்டார். எனவே, பெரிய அளவில் பணம் பெற்றுக் கொண்டு ஒரு வேலையை நாம் செய்யும்போது நாம் யாருக்கு உண்மையாக இருப்போம், பணம் கொடுப்பவருக்குத்தானே? அப்படி இருக்கும்போது, அவர் இதனை எந்த வகையில் எடுத்துக் கொண்டிருப்பார் என்பது கேள்விக்குறியதாகிவிடுகிது. இதுவரை அவர் மீது எந்த சந்தேகமும் இல்லை, அவர் நேர்மையானவர் என்பதெல்லாம் வேறு. இவரது பணியே சந்தேகத்திற்குரியதுதான்.

webdunia photoWD
அப்படி இருக்கும்போது இலங்கையில் 20,000 பேர் வேண்டாம் 5,000 பேர் இறந்திருப்பார்கள் என்று வைத்துக் கொண்டாலே, பான் கீ மூனின் நிலைப்பாடு என்ன? அவர் விஜய் நம்பியாரை ஆலோசகராக வைத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு. எனவே பான் கீ மூன் செய்தது சரியா தவறா? நியாமுள்ளதா? நியாயமற்றதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலைக்கு நாம் வந்துள்ளோம். எனவே பான் கீ மூனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளார்.

ஏனெனில், இலங்கையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள், ஐ.நா.வைத்தான் பெரிதும் நம்பியிருந்தார்கள். செய்கிறோம், செய்கிறோம் என்று காலதாமதப்படுத்தியதால்தான் இநத அளவிற்கு நிலைமை மோசமானது. இலங்கை ராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்குள் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலிவாங்கப்பட்டுவிட்டன. ஐ.நா.வின் சந்தேகம் வீணான சந்தேகமே.

மக்கள் இன்று விஜய் நம்பியார் மீது கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். அதேக் கேள்வி பான் கீ மூன் மேலும் எழும். எழுப்ப வேண்டும். அதேக் கேள்வியை இந்தியாவின் அயலுறவு அமைச்சர் மீதும் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இவர்கள் தப்பித்துவிடுவார்கள். தேர்தல் நடக்கும்போது நாங்கள் இல்லை என்று கூறி தப்பித்துவிடுவார்கள். ஆனால் அப்போதிருந்த உள்துறை அமைச்சர்தான் இப்போதும் இருக்கிறார். இதே உள்துறை அமைச்சருக்கு இலங்கையில் இதுபோன்ற ஒரு இனப் படுகொலை நடக்க வாய்ப்பிருக்கிறது என்று நாங்கள் ஒரு அறிக்கை அளித்துள்ளோம். மீண்டும், இந்திய உள்துறை அமைச்சருக்கு, பிரதமருக்கு இதுபோன்ற இனப் படுகொலை நடத்தப்படும் என்று ஏப்ரலிலும் தகவல் அனுப்பினோம்.

நாங்கள் ஒரு பொது அமைப்பு என்ற முறையில் இதனைச் செய்தோம். எனவே எங்களுக்குத் தெரியாது என்று யாரும் நழுவ முடியாது.

வெறும் சில ஆள் பலங்களையும், குறுகிய தொடர்புகளையும் வைத்துக் கொண்டுள்ள எங்கள் அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றை நமது மத்திய அரசாலோ அல்லது ஐ.நா.வாலோ கண்டுபிடிக்க முடியாது என்பது கேலிக்குறியது. கண்டிப்பாக கிடைத்திருக்கும். கிடைக்காத மாதிரி நடிக்கிறார்கள்.

இங்கிருக்கும் ஒருவர், இலங்கை போருக்கு துணையாகவும், இணையாகவும் நின்றுள்ளார். அவர் மீதும் இந்த பொறுப்பு வருகிறது. இதுதான் நிலைமை.


நாளைக்கு ஐ.நா.வில் விவாதத்திற்கு வரும்போது, இது கேள்வி எழுப்பப்பட வேண்டிய விஷயமாகும்.

webdunia photoWD
மேலும், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் திட்டவட்டமாக இருக்கிறார்கள். இலங்கைப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கேட்க வேண்டும் என்பதில்.

சர்வதேச மானிட்டரி பண்ட் (சர்வதேச நிதிய‌ம்) அமைப்பிடம் 1.9 பில்லியன் டாலரை இலங்கை கேட்டுள்ளது. எல்லாவற்றையும் மூடி மறைக்கவே இந்த தொகை செலவிடப்படும். ஏற்கனவே செலவு செய்துள்ளவற்றையும் ஈடுகட்ட வேண்டுமே, மேற்குறிப்பிட்ட நாடுகள் இந்த நிதியை அளிக்கக் கூடாது என்று கூறியிருக்கின்றன. ஆனால் ஜப்பான் போன்ற நாடுகள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளன.

ஜப்பான் எடுத்த நிலைப்பாடு தவறானது என்பதால் 3 நாட்களுக்கு முன்பு நிறைய கேள்விகள் எழுந்துள்ளது ஜப்பானின் நிலைப்பாடு பற்றி.

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது 30, 40 வருடப் பிரச்சினை. இந்த 2 ஆண்டுகளிலேயே சுமார் 2 ல‌ட்ச‌ம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாக ஐ.நா. ஏன் அறிவிக்கவில்லை? ஐ.நா. சொல்லாததற்கு அடிப்படை என்ன?

இந்த போரில் 2 லட்சம் பேர் வரை சாகவில்லை. அதுவரை ஒட்டுமொத்தமாகவே 80,000 முதல் 1 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பார்கள்.

அதாவது உணவுத் தேவைக்காக ராஜபக்சே அரசு கூறும்போது வெறும் 50,000 பேர்தான் முகாமில் உள்ளனர் என்று கூறியது. அதே நிலையில், அரசு ஏஜெண்ட் 83,000 குடும்பங்களைச் சேர்ந்த 3,30,000 பேர் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

ஒரு வாரத்திற்கு அவர்களுக்குத் தேவை 3,600 டன் உணவுப் பொருட்கள் தேவை என்று கேட்டிருந்தார், ஆனால் ராஜபக்சே அரசு 900 டன் மட்டுமே தேவை என்று கூறியிருந்தது.

எனவே, முகாம்களில் வந்து சேர்ந்துவிட்டப் பின் நடந்த தாக்குதல்களில் இறந்தவர்கள் எத்தனைப் பேர் என்பதுதான் கேள்விக்குறி. தற்போது 2,70,000 பேர் உள்ளனர் என்கிறது சில தகவல்கள்.

எண்ணிக்கை அல்ல இப்போதைய பிரச்சினை, லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணிக்கையை மட்டுமே நாம் கருத்தில் கொண்டிருந்தால் தீர்வை எட்ட முடியாது. இதை வைத்து பிரச்சினையை திசை திருப்பி விடுவார்கள்.

webdunia photoWD
30 வருடமாக இருக்கும் இந்த பிரச்சினையை, தற்போது மீண்டும் முதல் அத்தியாயத்தில் இருந்து துவங்க வேண்டும், அதுதான் கொடுமை, இந்த 30 வருடங்களாக போராடிய போராட்டங்கள், இறந்த உயிர்கள், வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்கள் நாடுகளுக்கு வர முடியாத நிலைமை, இவை எல்லாம் சாதித்தது என்ன? 30 வருட போராட்டத்தினால் அவர்களுக்குக் கிடைத்தது என்ன? ஒன்றுமேயில்லை. இதுதான் மிகவும் வருந்துவதற்குரிய விஷயம்.

இந்த நிலைமையை எப்படி மாற்றுவது, அவர்களை குறைந்தபட்சம் எப்படி மீட்பது, இந்த இழப்புகளுக்கு பதில் என்ன? இதுதான் சவால்.

தற்போது, உலக நாடுகளையும், பத்திரிக்கைகளையும், இளைஞர்களையும், அரசியல்வாதிகளையும் அணுகி, இந்த பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது, எப்படி தீர்வு காண்பது போன்றவற்றை ஆராய வேண்டும்.

இன்னும் 5 மாத காலத்திற்குள் ஐ.நா.வை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது ஆள்பலமோ குறைவு. இருக்கும் ஆள் பலத்தை வைத்து இதனை செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.


இனி நடக்கும் போராட்டங்களோ, முன்னெடுப்பு நடவடிக்கைகளோ எதை நோக்கியதாக இருக்க வேண்டும்?

webdunia photoWD
மூன்று கட்டங்களாக இருக்க வேண்டும். ஒன்று தமிழர்களின் உரிமை, சுயாட்சி போன்றவை. இதனை வைத்துக் கொண்டு அவர்கள் முன்பு இருக்கக் கூடிய அரசியல் கோரிக்கைகள் அதை வற்புறுத்தி வைக்கக் கூடிய ஒரு நிலையில் இருக்க வேண்டும். குறைந்த பட்ச தேவையில் இருந்து அதிகபட்ச தேவை. அதிகபட்ச தேவை என்பது தனி நாடு. அதற்கு சாத்தியமில்லை.

மேலும், இந்த வரலாற்றை மூடி மறைத்துவிடுவார்கள். அதற்கு அத்தாட்சியாக, ராஜபக்சேயின் உரையில், இலங்கையில் சிறுபான்மையினரே இல்லை என்று கூறுகிறார். ஆனால், ராணுவ அதிகாரியான பொன்சேகா, இலங்கையில் 80 விழுக்காட்டினர் சிங்களவர். மீதமிருப்பவர்கள் அனைவரும் எங்களது தயவில்தான் வாழ்கின்றீர்கள் என்று கூறுகிறார்.

எனவே, தமிழர்கள் எத்தனை பேர் உயிரிழந்தார்கள், போராடியவர்கள் என்பது போன்ற வரலாற்றை மூடிமறைத்து விடக் கூடாது. அதுபற்றி எழுத வேண்டியது மிகவும் முக்கியமான பணி.

இரண்டாவது, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று, உலக நாடுகளுக்கு வற்புறுத்தி, அழுத்தம் கொடுத்து, தமிழர்களுக்குத் தேவையான குறைந்த பட்சத் தேவைகளை அளிக்க வேண்டும் என்பதுதான்.

மூன்றாவதாக, அங்குள்ள ஜனநாயக இயந்திரங்கள் செயல்பட வேண்டும். ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும், ஜனநாயகம் செயல்பட வேண்டும். இப்போதிருக்கக் கூடிய ஆட்சி, ஜனநாயகத்திற்கு சம்பந்தமில்லாத ஆட்சி. தேர்தல் வைத்துத்தான் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களது ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இல்லை. ஆகையால், இப்போதிருக்கக் கூடிய காலத்தில், இலங்கையின் நாடகத்தை நாம் முறியடிக்க வேண்டும். அது எப்படி செய்யப்போகிறோம் என்பதுதான் பிரச்சினை.

பெரிய பிரச்சினை, முட்டுக்கட்டை இந்திய அரசாங்கம்தான். இந்தியா முழுக்க முழுக்க இலங்கையுடன் சேர்ந்துள்ளது. அவர்களது இரட்டை வேடத்தை உடைக்க வேண்டும். இந்தியக் குடிமகன் என்ற அடிப்படையில்தான் இதனை வேதனையுடன் கூறுகிறேன்.

தமிழன் என்றில்லாமல், தெற்கு ஆசியாவில் இருக்கும் குடிமகன் என்ற அடிப்படையில்தான் கசப்பான உண்மையைக் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதை செய்யாமல், மற்ற எதுவும் சாத்தியமில்லை.

தற்போது ஒரு தகவல் கிடைத்தது, முகாமில் இருக்கும் தனது உறவினரை தொடர்பு கொண்டதற்கு, முகாமில் இருப்பவர், உடனடியாக இலங்கைக்கு திரும்பி வா, நாம் வாழ்ந்த பகுதிகள் எல்லாவற்றையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துவிட்டனர். மீதமிருக்கும் பகுதியையாவது மீட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஒருவர் தனது நிலத்தை கண்டுபிடிக்கும் அடையாளங்களையே சிறிலங்க ராணுவத்தினர் அகற்றிவிட்டனர். புல்டோசர்களைக் கொண்டு எல்லாவற்றையும் தரைமட்டமாக்கிவிட்டனர். இப்போது வரம்பு ஏதுமில்லை. மீண்டும் ஒருவர் அங்கே சென்றால், எதை நமது நிலம் என்று சொல்ல முடியும்?

மேலும், தமிழர்களின் நிலங்களை, ராணுவப் போரில் இழந்த சிங்கள வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு கொடுக்கப் போகிறது. ஒரு 4 மாதங்களுக்கு சர்வதேச அமைப்புகளின் பார்வை இருக்கும்வரை சும்மா இருப்பார்கள். அதன்பிறகு அவர்களது வேலையை ஆரம்பித்துவிடுவார்கள்.

எனவே, இப்போது சுதந்திரமாகச் செயல்படக் கூடிய ஆட்கள் இலங்கைக்குச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. அந்த அவசியத்தை உணர்ந்துதான் இலங்கை அரசு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

பொருளாதார தடையை இலங்கை மீது கொண்டு வர வேண்டும், சர்வதேச மானிட்டரி பண்ட் கிடைக்கக் கூடாது. அதே சமயம், இந்தியாவும், இங்கிருந்து உதவக் கூடாது என்பதை நாம் இங்கிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைகள் எல்லாம் ஐ.நா.வில் இருந்து வரக்கூடிய சாத்தியம் உண்டா?

webdunia photoWD
போகிற போக்கைப் பார்த்தால் கடினம்தான். ஏனெனில் ஐ.நா.வே இரண்டு பிளவாக உள்ளது. சீனாவும், ரஷ்யாவும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. இந்தியாவிற்கு ரயில் தண்டவாளங்கள் கொடுக்கிறேன் என்று சிறிலங்கா கூறியுள்ளது, எலும்புத் துண்டைப் பார்ப்பது போன்று இந்தியாவும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மையான நிலை என்னவென்றால், எல்லாவற்றுக்கும் சீனாவிற்கு ஒரு அடிப்படைக் காரணத்தை வைத்துக் கொண்டுள்ளது.

தமிழர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்றால், ஹம்பன்தோட்டாவில் வாழும் முஸ்லிம் மக்களில் 200 பேர், பாகிஸ்தானுக்கு ஜிஹாத் பயிற்சிக்கு சென்றுள்ளதாகச் செய்தி. இதைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு எழுத்து மூலமாக தெரிவித்தோம். அவர் எங்களுக்குத் தெரியும் என்று கூறினார். அது எப்படி ஜிஹாத் பயிற்சிக்குப் போனவர்களை இதுவரை சும்மா விட்டுள்ளார்கள். அவர்கள் 3 மணி நேரத்தில் கல்பாக்கத்திற்கு வந்துவிடுவார்களே. ஒரு குண்டுபோட்டால் சென்னையே போய்விடும். இது மிகப்பெரிய பயங்கர நிலையாகும்.

இதுவரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் இல்லை. இனி அந்த நிலை மாறிவிடும். இதனை அரசியல்வாதிகள் இதுவரை கேட்கவில்லை. இது ஆபத்தான விஷயமாகும்.

தமிழர்களின் உரிமை நலம் சார்ந்த விஷயம், இலங்கைத் தமிழர்களின் நலனோடு சேர்ந்துள்ள விஷயமாகிறது...

இல்லை. இந்த போரின் மூலம் அது மாறிவிட்டது. ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதில்லை. இந்திய அரசின் கோட்பாட்டின் விளைவாக அந்த நிலை மாறிவிட்டது.

இந்திய அரசாங்கம், விடுதலைப் புலிகளை அடக்க வேண்டிய தீர்வை நோக்கிச் சென்றார்கள், இலங்கை அரசு தமிழர்களை அடக்க வேண்டிய நிலையை நோக்கிச் சென்றார்கள், இரண்டும் வேறு வேறு. இதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றொன்று, இலங்கையில் இருக்கும் தமிழர்களால் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு இருந்தது. அதனை இப்போது நாம் இழந்துவிட்டோம். இது கவலைக்குறியது. விடுதலைப் புலிகள் இருந்ததால் இந்தியாவிற்கு ஒரு பக்கம் பாதுகாப்பு இருந்தது. ஆனால் இப்போது நமக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? இதனை அரசியல் தலைவர்கள் கேட்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதை செய்வார்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
நன்றி
வணக்க‌ம்!

புகை‌ப்பட‌ங்க‌ள் : ஸ்ரீ‌நி.