உசைன் போல்ட்டை பின்னுக்குத் தள்ளினார் தோனி!

புதன், 21 ஆகஸ்ட் 2013 (14:53 IST)
FILE
உலகின் அதிவேக மனிதனை யாரும் பீட் செய்ய முடியாது. அது ஓட்டத்தில்தான்! ஆனால் விளையாட்டு வீரர்கள் பணம் சம்பாதிப்பதில் உசைன் போல்ட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார் நமது தோனி!

உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் போல்ட்டை முந்திச் சென்ற தோனி 16வது இடம்பிடித்துள்ளார் என்று போர்ப்ஸ் இதழின் வெளியீடு தெரிவித்துள்ளது.

உசைன் போல்ட் இதற்குப் பிறகு கூட கிரிக்கெட்டிற்கு வர முடியும்! அவருக்கு கிரிக்கெட் பிடித்தமான விளையாட்டு. ஆனால் தோனி இதற்கு மேல் உசைன் போல்ட் சாதனையை ஓட்டத்தில் முறியடிக்க முடியுமா?

2011- 12 போர்ப்ஸ் பட்டியலில் 31வது இடத்தில் இருந்த தோனி தற்போது 15 இடங்கள் முன்னேறி 16வது இடம்பிடித்துள்ளார்.

பார்முலா ஒன் வீரர் அலான்சோ, லீவிஸ் ஹாமில்டன், டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆகியோர் முறையே, 19, 26, 28 ஆகிய இடங்களில் உள்ளனர். நடாலுக்கு 30வது இடம். போல்ட் 40வது இடத்திலும் சச்சின் டெண்டுல்கர் 51வது இடத்திலும் உள்ளனர்.

இப்பட்டியலில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்(ரூ.497 கோடி), சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (ரூ.455 கோடி), அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட் (ரூ.394 கோடி) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

வீராங்கனைகளுக்கான பட்டியலில் ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா, (ரூ.184 கோடி) தொடர்ந்து 9வது ஆண்டாக முதலிடம் பிடித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்