விஸ்டன் கனவு அணியில் லாரா, பாண்டிங், காலிஸ் இல்லையாம், சச்சின் உண்டாம்!
வெள்ளி, 25 அக்டோபர் 2013 (12:55 IST)
FILE
கிரிக்கெட் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் அனைத்து கால சிறந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் அவர் களமிறங்கும் அதே 4ஆம் நிலையில் இடம்பெற்றுள்ளார். இந்த கனவு அணிக்கு கேப்டன் டான் பிராட்மேன்.
ஆசியர்களில் ஒன்று சச்சின் மற்றொன்று வாசிம் அக்ரம் ஆகியோர்களே உள்ளனர். சுனில் கவாஸ்கர் என்ற மேதைக்கு இடமில்லை. உலகின் அதிவேகப் பந்து வீச்சாளர்களை அவர் 1971 முதல் தான் ஓய்வு பெறும் 1987ஆம் ஆண்டு வரை புதிய பந்தில் எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஆசியாவின் தலை சிறந்த வீரர் ஆவார். ஆனால் அவருக்கு இடமில்லை.
தனிமனிதனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின்...
FILE
சரிவிலும் நின்று போராடி பல சிறந்த இன்னிங்ஸ்களை கொடுத்த லாரா இல்லை. சிறந்த லீடரும் ஆஸ்ட்ரேலியாவின் சிறந்த பேட்ஸ்மெனுமான பாண்டிங் இல்லை. ஆல்ரவுண்டராக சிறப்பான முறையில் ஆடி வரும் காலிஸ் இல்லை.
இது சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். ஆனால் யாருக்குமே தெரியாத டபிள்யூ.ஜி. கிரேஸ் என்பவரை அணியில் துவக்க வீர்ராக சேர்த்துள்ளனர். நிச்சயம் இவரை விடவும் கவாஸ்கருக்கே அதிக தகுதி உண்டு. தென் ஆப்பிரிக்காவின் பேரி ரிச்சர்ட்ஸ் இந்த அணியில் இல்லை.
பந்து வீச்சில் ஷேன் வார்ன் இருக்கிறார். ஆனால் முரளிதரன் இல்லை. இவர்களுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ளேயிற்கு இடமில்லை.
விக்கெட் கீப்பராக ஆலன் நாட் தேர்வு செய்யப்பட்டிருப்பது பொருத்தமான முடிவாகும். ரோட்னி மார்ஷ், ஜெஃப் டியூஜான், டெரிக் முர்ரே, வாசிம் பாரி என்று பலர் இருந்தாலும் ஆலன் நாட்டிற்கு ஈடு இணை கிடையாது என்பதை பல வீரர்களும் நிபுணர்களுமே ஒப்புக் கொண்டுள்ளனர். ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங்கிற்கு இடமில்லை என்பது ஒருபுறம் கண்டிக்கத்தக்கது என்றாலும் கிளென் மெக்ரா இல்லை மிகவும் முக்கியமாக டெனிஸ் லில்லி இல்லை.
நல்ல வேளையாக விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், மால்கம் மார்ஷல் இடம்பெற்றுள்ளனர்.