வெள்ளையரை வீரத்தால் விரட்டியடிக்க விரும்பிய சவார்க்கர்!

Webdunia

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:32 IST)
webdunia photoFILE
இந்தியாவை தனது வலுவான படைகளின் மூலம் அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரை, அவர்களது வழியிலேயே ஆயுதமேந்தி பதிலடி கொடுத்து, விடுதலை பெற முற்பட்ட வீரர்களில் முன்னிலையில் இருந்தவர் வீர சவார்க்கர்!

சத்ரபதி சிவாஜி, திலகர், கோகலபோன்ற மகத்தான மாமனிதர்கள் பிறந்த மஹாராஷ்டிர மாநிலம் தந்த மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களில் வீர சவார்க்கர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் விநாயக் தாமோதர சவார்க்கரும் ஒருவர்.

1883-ம் ஆண்டு மே 28-ம் தேதியில் நாசிக் அருகேயுள்ள பாகுரில் பிறந்த இவர், தனது பள்ளி வயதில் இருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1900-ம் ஆண்டில் 'நண்பர்கள் கழகம்' (அபினவபாரத்) என்ற அமைப்பைத் தொடங்கி, வெள்ளையர் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தந்திரமாக மேற்கொள்ள ஆரம்ப்பித்தார்.

சுதேச உணர்ச்சி!

20வதநூற்றாண்டிலதுவக்கத்தில் நாட்டில் சுதேச உணர்ச்சி பெருகத் தொடங்கியது. மஹாராஷ்டிராவில் இந்த உணர்ச்சி கொழுந்துவிட்ட எழக் காரணமாகத் திகழ்ந்தவர் சவார்க்கர். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து, பிரச்சாரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வெளிநாட்டு உடைகள் முதலிய பொருட்களைத் திரட்டி, அவற்றைப் பொது இடங்களில் வைத்து தீயிட்டு எரித்தார். இந்த நிகழ்வையும், சவார்க்கரின் செயலையும் வெகுவாகப் பாராட்டினார், அவரது குருவான திலகர்.

பெர்க்கூசன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர், சட்டம் படிப்பதற்கென லண்டன் பயணித்தார். கல்விக்காக மட்டுமின்றி, வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்று திரட்டி, அயல்நாட்டில் இருந்துகொண்டே தாயக விடுதலைக்குப் போராட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.

லண்டனில் இருந்தவண்ணம் வெள்ளையர் தூக்கத்தைக் கெடுத்தார்.

லண்டனில் இந்திய மாணவர்களுக்கான விடுதியில் தங்கியவர், 'ஹோம் ரூல்' இயக்கத்திலும் பங்கேற்றார். 'இந்திய விடுதலைச் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி, அதில் இந்திய மாணவர்கள் பலரையும் ஒன்று திரட்டினார்.

அப்போதுதான், இந்தியாவில் இருக்கும் வெள்ளையருக்கு எதிராக ஆயுதமேந்த தயாரான அந்த விடுதலைச் சங்கத்தினர், ஆயுதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தத் திட்டத்தில் சவார்க்கருடன் உறுதுணையாக இருந்தவர் லாலா ஹரிதயாள்.

அந்தத் திட்டப்படி, ஆயுதம் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தங்களது தாயகம் திரும்பினர். அவர்கள் தங்களது முதல் முயற்சியாக வங்காள உயர் வெள்ளையர் அதிகாரி கிம்ஸ்போர்டு மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், அந்த அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

அதேநேரத்தில், மற்றொரு வெடிகுண்டு முயற்சியில் உயர் அதிகாரிகளாக இருந்த கென்னடி தம்பதியர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்தச் சம்பத்தையடுத்து, வெள்ளையர் அதிகாரிகளிடையே கலக்கமும் பய உணர்வும் அதிகரித்தது.

அதன்பின், வெடிகுண்டு தாக்குதல்களில் போதிய வெற்றி கிடைக்காத நிலையில், சவார்க்கர் தனது எழுத்துக்கள் மூலமாக மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டினார். இதற்கிடையில், அவரிடம் ஆலோசனை பெற்ற அவரது நண்பர் மதன்லால் திங்காராவால், பிரிட்டிஷ் அரசில் பெரிய பதவியை வகித்து வந்த கர்ஸான் வில்லி மற்றும் டாக்டர் லால்காக்கா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு பிரிட்டிஷை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்தமான் சிறையில்...

சவார்க்காரின் நடவடிக்கைகளால் அச்சம் கொண்ட பிரிட்டிஷ் அரசு, அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்து. பாரிஸ் நகரில் எதிர்பாராத ஒரு தருணத்தில் கைது செய்யப்பட்ட அவர், பிரான்ஸ் வழியாக கடல் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டார். அந்தப் பயணத்தின்போது பிரான்ஸ் நாட்டில், சவார்க்கர் தப்பிச் செல்ல முயன்று பிடிபட்டார்.

பம்பாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வீர சவார்க்கருக்கு (டிசம்பர் 4, 1910) ஆயுள் தண்டனை (25 வருட சிறை) விதிக்கப்பட்டது. அதன்பின், ஜனவரி 30,1911-ல் அவருக்கு மற்றொரு 25 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தமான் சிறையில் தனது சிறை வாழ்க்கையில் துயருற்று கிடந்த சவார்க்கருக்கு ஆதரவாக இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அவரது விடுதலையைக் கோரி இந்திய தேசிய காங்கிரஸும் தீர்மானங்கள் நிறைவேற்றியது.

இதன் பலனாக, ஜனவர் 6, 1924-ல் ரத்னகிரி மாவட்டத்திற்கு வெளியே செல்லகூடாது என்பது போன்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட சவார்க்கர், 1937-ம் ஆண்டு மே 10-ல் முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

"எனது உடலிலே உயிர் உள்ளவரை என்னுடைய விடுதலைப் போராட்டம், எனது சக்திக்கேற்றபடி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்" என்று உறுதிபூண்ட வீர சவார்க்கர், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பாக்கியத்தைப் பெற்ற வீரர்களில் ஒருவராகவும் இருந்தார். (மறைவு : ஏப்ரல் 26, 1966)

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயரை விரட்டியடிப்பதற்காக ஆயுதங்கள் ஏந்தி, தனது வீரத்தால் விடுதலை பெற முற்பட்டதோடு, இத்தகைய எண்ணத்தை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனதில் விதைத்த பெருமைக்குரியவரே வீர சவார்க்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்