நாட்டின் 62-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலக வளாகங்களில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்கள். இதுவே நடைமுறையில் இருந்து வரும் மரபு.
பள்ளி, கல்லூரிகளைப் பொருத்தவரை, விடுதலை தினத்தன்று சிறப்பு விழாக்களுடன், மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளும், அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றும் நாட்டிய நடனங்களும் நடத்தப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
தொலைக்காட்சி ஊடகங்கள் பெருகி விட்ட தற்போதைய காலகட்டத்தில், அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு என்னவோ பஞ்சமில்லை.
webdunia photo
WD
இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, ``உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக... திரைக்கு வந்து சில மாதங்களே ஆன'' ``திரைக்கே வெளிவராத... (?!)'', (விநியோகஸ்தர்கள் வாங்காமல் முடங்கிய) என்ற அடைமொழியுடன் விளம்பரம் செய்யப்பட்டு புதிய திரைப்படத்தை ஒளிபரப்புவதை அனைத்து தமிழ் சேனல்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை, `வழங்குவோர் (ஸ்பான்சர்)' `திரைப்படத்தின் இப்பகுதியை இணைந்து வழங்குவோர்' என்று கூறி குறைந்தது ஒரு நூறு நிறுவனங்களின் விளம்பரங்களை இடைச்செருகல் விளம்பரமாகச் சேர்த்து 4 மணி நேரத்திற்கு இழுத்து விடுகின்றனர் முன்னணி சேனல் நிறுவனத்தார்.
மேலும், சுதந்திர தின சிறப்புப் பேட்டி என்ற பெயரில், `சுதந்திரமாக வெளியே திரிய முடியாத' நடிகர்-நடிகர்களின் கருத்து வேறு. அதிலும் உருப்படியாக எதுவும் கேட்காமல், நீங்கள் நடித்த படம்?, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் - எதிர்காலத் திட்டம்? திருமணம் எப்போது? என வழக்கமான அறுவைப் பேட்டியை பாகுபாடு இல்லாமல் அனைத்து தமிழ் சேனல்களுமே ஒளிபரப்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.
webdunia photo
WD
சுதந்திர தின சிறப்புப் பட்டி மன்றம் வேறு, ``அதிக சுதந்திரம் யாருக்கு உள்ளது, மாமியாருக்கா - மருமகளுக்கா? அல்லது யாருக்குச் சுதந்திரம் அதிகம், நடுத்தர குடும்பமா? மேல்தட்டு குடும்பமா?''என்பன போன்ற உபயோகமில்லா தலைப்புகளில் நக்கல், நையாண்டியுடன் கூடிய ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கு அரைமணி நேர ஸ்பான்சர் வேறு. சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதுபோன்ற ஒன்றுக்கும் பயன்படாத நிகழ்ச்சிகளையெல்லாம் முன்கூட்டியே பதிவு செய்து, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு ஓரிரு தினங்கள் முன்பாகவே வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு இடையே அறிவிப்பு வேறு செய்கிறார்கள்.
காலை முதல் மாலை வரை நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திய பின்னர், ``சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள். சுதந்திரத்தைப் போற்றுங்கள்(!?)'' என விளம்பரப்படுத்தி சுதந்திரத்தை தூற்றுவதையே சமீப காலமாக வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன தமிழ் சேனல்கள்.
சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்தவொரு நிகழ்ச்சியிலாவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த நிலை பற்றியோ அல்லது சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களைப் பற்றியோ அல்லது சுதந்திரப் போராட்டம் பற்றி தெரியாத குழந்தைகளுக்கு அதன் முக்கியத்துவம் குறித்த தகவல்களை சுவாரஸ்யமான வகையில் கூறும் வகையிலோ இருப்பதில்லை. இதுவரை எந்தவொரு சேனலும் அந்த முயற்சியை மேற்கொண்டதும் இல்லை. இனிமேலும் அதுமாதிரியான உருப்படியான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கப்போவதும் இல்லை.
இதே நிலைதான் மற்ற பண்டிகை நாட்களின் விடுமுறை தினத்தன்றும் என்றாகி விட்டது.
பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மாணவர்-மாணவிகளையும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று குறிப்பிட்ட நேரத்திற்கு வரவழைத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர்களோ அல்லது முதல்வரோ தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கலைநிகழ்ச்சிகள் முடிந்த பின் வீட்டிற்கு அனுப்புவார்கள். இதெல்லாம் அந்தக் காலம்.
தற்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மட்டுமே அன்றைய தினம் சென்று வருகிறார்கள். அரசு, தனியார் அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு சுதந்திர தினமா, அப்பாடா ஒருநாள் விடுமுறை. வீட்டில் ரிலாக்ஸ்டாக எழுந்து, டி.வியில் சேனல்களை மாற்றி, மாற்றி டுபாக்குராக வரும் ஏதாவதொன்றில் லயித்து பொழுதைக் கழிக்கலாம் என்ற மனோநிலையிலேயே அன்றைய தினத்தை கருதுகிறார்கள். (ஒரு சில தனியார் நிறுவனங்கள், சுதந்திர தினத்தன்றும் கடையை திறந்து வைத்து ஊழியர்களை வரவழைத்து வேலை வாங்குவது வேறு விஷயம்).
பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அவர்களுக்கு ஏற்றாற்போல் அவர்களுக்கென உரிய சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு ஒருநாள் விடுமுறையைக் கழிப்பதுதான் வாடிக்கையாகி விட்டது.
டி.வி. நிறுவனங்களைக் கேட்டால், உபயோகமான நிகழ்ச்சிகளை யார் பார்க்கிறார்கள்? எங்களுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் இருப்பதால், மக்கள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்து ரசிக்கிறார்களோ, அதன்படிதான் நாங்கள் நிகழ்ச்சிகளை முடிவு செய்து தயாரிக்கிறோம் என்று கூறி தப்பிக்கலாம்.
மக்களாகிய நாம் அதுபோன்ற சேனல்களின் கவர்ச்சி விளம்பரங்களைக் கண்டு மாக்களாகாமல், உபயோகமற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும். அந்தந்த ஊர்களில், தலைநகரம் என்றால், முதல்வர் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கோ அல்லது அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கொடியேற்று நிகழ்ச்சிகளுக்கோ குழந்தைகளை அழைத்துச் சென்று வித்தியாசமான அனுபவங்களை அவர்களுக்கு ஏற்படுத்தித் தரலாம்.
webdunia photo
WD
முடிந்தால், உங்கள் குழந்தைகளையும் தேசத் தலைவர்கள் போல் வேடமணியச் செய்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு நீங்கள் ஊக்குவிக்கலாம்.
சுதந்திர தினம், அதன் முக்கியத்துவம், சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களின் கதைகளை குழந்தைகளின் வயது - தன்மைக்கேற்ப கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ அவர்களுக்கு அளித்தோ அல்லது அவர்களை எழுதச் சொல்லியோ பழக்கப்படுத்தலாம்.
சுதந்திர தினத்தை நாம் எதற்காகக் கொண்டாடுகிறோம்? நாட்டின் தற்போதைய பிரதமர் யார்? மாநிலங்களின் முதல்வர்கள் யார்-யார்? என்பன போன்ற அறிவுப்பூர்வமான தகவல்களை பெரியவர்கள், குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவதுடன், நாட்டின் பாரம்பரிய பழக்க-வழக்கங்களையும் எடுத்துச் சொல்லலாம்.
குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் நோக்கில், நாமும் சில தெரியாத விஷயங்களை படித்து அறிந்து கொள்ள ஏதுவாகும்.
எனவே எதற்கும் பயன்படாத டி.வி. சிறப்பு நிகழ்ச்சிகளை புறக்கணியுங்கள். விளம்பரம் கிடைக்கிறது என்பதால், திரும்பப் திரும்ப ஒரே திரைப்படங்களைத் திரையிட்டு நம்மை முட்டாளாக்கப் பார்க்கும் சேனல்களின் உத்திகளை முறியடியுங்கள் என்பதே நமது சுதந்திர தின வேண்டுகோள்.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்திட, இப்படிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதும் ஒரு சிறந்த வழிதான்.