காந்தியின் இராட்டை: இன்றும் சாதிக்கிறது!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:13 IST)
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்தி கையில் எடுத்த ஆயுதம் சாதாரண நூல் நூற்கும் ராட்டை. துப்பாக்கிகள் சாதிக்க தவறியதை ராட்டை சாதித்தது. ஆம் பிரிட்டிசார் இந்தியாவை விட்டு வெளியேற ராட்டையும் காரணமாக இருந்தது.

காந்தியின் மற்றொரு குறிப்பிடத்தக்க போராட்டம் அந்நிய துணி பகிஷ்கரிப்பு.

இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சை, மிக குறைந்த விலைக்கு வாங்கி, பிரிட்டிசார் அவர்கள் நாட்டிற்கு கப்பல் மூலம் கொண்டு சென்றனர்.

இதை துணிகளாக தயாரித்து மிக அதிக விலைக்கு இந்திய மக்களிடம் விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடைந்தனர்.

அன்றைய நிலையில் காந்திஜியின் இராட்டை நூல் நூற்கும் போராட்டமும், வேள்வியும். அந்நிய துணி பகிஷ்கரிப்பு போராட்டம் பிரிட்டிசாரின் வர்த்தக நலன்களையும், அந்நாட்டு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தன.

பிரிட்டிசாருக்கு எதிரான மகாத்மா காந்தியின் இந்த பொருளாதார ரீதியான போரட்டங்கள், இன்றளவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் பிரிட்டிசார் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆயுத பலத்தால் அடக்கினர்.

(இந்த சரக்கு போக்குவரத்துக்காகவும், சுதந்திர தாகமெடுத்து போராடும் மக்களை அடக்க ராணுவத்தினரையும், காவல்துறையினரையும் விரைவாக கொண்டு செல்லதான் இந்தியாவில் இருப்பு பாதைகளை அமைத்தனர் என்ற கருத்தும் உண்டு)

ஆனால் அவர்களால் ராட்டையில் நூல் நூற்பதையோ, அந்த நூலை பயன்படுத்தி கதர் துணிகள் தயாரிப்பதையோ ஒடுக்க முடியவில்லை.

பிரிட்டிஷாரையே கலவரப்படுத்திய ராட்டை, இன்றளவும் அகிம்சை போராட்டத்தின் சின்னமாகவும், கிராமப்புற ஏழை மக்களுக்கு வருவாய் ஈட்டும் சாதனமாகவும் இருந்து வருகிறது.

இன்று ராட்டை நவீன வடிவம் எடுத்துள்ளது. இது மின் உற்பத்தி நிலையமாகவும் மாறியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம், சீன நிறுவன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நூல் நூற்கும் போதே மின்சாரம் தயாரிக்கும் வகையில் ராட்டையை மாற்றியமைத்துள்ளது. இ-ராட்டை என்று (E-Charkha) பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன ஆம்பர் ராட்டையில் ஒரே நேரத்தில் 8 நூல்களை நூற்கலாம். இதில் நூல் நூற்கும் போது, அதன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள டைனமோவில் மின்சாரம் உற்பத்தியாகும்.

இதில் இருந்து தாயரிக்கப்படும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வைத்து 6 முதல் 7 மணி நேரம் வரை பல்பு எரிக்க முடியம்.

இதை காதி கிராம தொழில்கள் வளர்ச்சி வாரியம் 21 இ-ராட்டைகளை ஜெய்ப்பூர் அருகில் உள்ள காதி கிராம வளர்ச்சி சங்கத்திற்கு சோதனை முயற்சியாக வழங்கியுள்ளது.

ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் 35 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமத்தில் ராட்டையை பயன்படுத்தி நூல் நூற்கும் மையத்தில் கடந்த சில மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இ-ராட்டை குறித்து காதி வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் லட்சுமி சந்த பந்தாரி கூறுகையில், இதன் ஆரம்ப கட்ட சோதனை முடிவுகள் சிறப்பாக உள்ளன. இதை பயன்படுத்துவாதல் நூல் நூற்கும் போது வருவாய் கிடைப்பதுடன், எவ்வித கூடுதல் செலவு இல்லாமல் மின்சாரமும் கிடைக்கிறது என்று மகிழ்ச்சியாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த இ-ராட்டையைப் பயன்படுத்தி நூல் நூற்கும் தனது அம்மாவுக்கு உதவியாக இருக்கும் இளம் பெண் சாரதா கூறுகையில், இப்போது நாங்களே சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றோம். இதை பயன்படுத்தி ரேடியோ கேட்கின்றோம் அல்லது விளக்கை எரிக்கிறோம் என்று கூறினார்.

இதே இ-ராட்டை நூல் நூற்கும் சாந்தி தேவி என்ற பெண்மணி கூறுகையில், இதில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சாரம், நீண்ட நேரம் சேமித்து வைக்க முடிவதில்லை என்று குறை கூறினார்.

இவரை போலவே மற்றவர்களும் மின்சாரத்தை நீண்
நேரம் சேமித்து வைக்க முடிவதில்லை என்று தெரிவித்தனர்.

இவர்களின் புகார் குறித்து பந்தாரி கருத்து தெரிவிக்கையில், இந்த குறை இருப்பதை ஒத்துக் கொண்டார். இது புதிய கண்டுபிடிப்பு. ஆகையால் சோதனை காலத்தில் தெரிய வரும் தவறுகளை, நிபுணர்களுடன் ஆலோசித்து நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

ராட்டையை பயன்படுத்தி நூல் நூற்பவர்கள் ஒரு ஸ்பின்னர் உள்ள ராட்டையையும் பயன்படுத்துகின்றனர். 8 ஸ்பின்னர்கள் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எட்டு இழை நூல்களை நூற்கும் அம்பர் ரக ராட்டையை 40 வருடங்களுக்கு முன்பு எகாம்பர் நாத் என்பவர் வடிவமைத்தார். இந்த நவீன ராட்டையால் நூல் நூற்பவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது.

இது நூல் நூற்பவர்களுக்கு மானிய விலையில் ரூ.2 ஆயிரத்துக்கு வழங்கப்படுகிறது. மின்-உற்பத்தி, சேமிக்கும் பேட்டரிக்காக தனியாக ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது என்று பந்தாரி தெரிவித்தார்.

(இந்த இ-ராட்டை பற்றிய முந்தைய செய்தி 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி எமது இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது).

வெப்துனியாவைப் படிக்கவும்