ஊட்டியில் செப்டம்பர் மாதம் துவங்கிய 2வது சீசன் தற்போது களை கட்டியுள்ளது. நவராத்திரி மற்றும் காலாண்டு பரிட்சை விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இரண்டாவது சீசனுக்காக இந்த ஆண்டு முதன்முறையாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் செடிகளில் கடந்த சில நாட்களாக பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவை பூங்காவிலுள்ள இத்தாலி கார்டன், ஜப்பான் கார்டன் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.
பூங்காவை கடந்த இரு நாட்களுக்கு முன்பு 14 ஆயிரம் பேரும், நேற்று முன்தினம் 16 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்துள்ளனர். நேற்றும் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க் உட்பட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
செப்டம்பர் மாதம் துவங்கும் 2வது சீசன் நவம்பர் வரை நீடிக்கும். பொதுவாக 2வது சீசனில் விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.