அஜ்மேரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் பாலைவன விளிம்பில் உள்ள அமைதியான நகர் புஷ்கர். இந்துக்களின் புனித யாத்திரைத் தலமான புஷ்கர் நகரம், அழகான புஷ்கர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
`நாக் பகாட்' அல்லது நாகமலை அஜ்மேருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை எல்லையாக இருக்கிறது.
புஷ்கர் ஏரியைப் பற்றி புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. யாகம் செய்வதற்கு உரிய இடம் ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாராம். அப்போது அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும், மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர்.
முப்புறமும் மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம். இவற்றில் முக்கியமானது பிரம்மா ஆலயம். நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
WD
புனிதமாகக் கருதப்படும் புஷ்கர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுவார்கள்.
அமைதி தவழும் புஷ்கரில், அக்டோபர் - நவம்பர் மாதத்தில் வரும் கார்த்திகை பெளர்ணமி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகைப் பௌர்ணமி உற்சவத்தின் போது இந்த நகரமே விழாக் கோலம் பூணும். மக்கள் ஆரவாரம் அலைமோதும், பிரம்மாண்டமான கால் நடைச் சந்தையும் அப்போது நடைபெறுகிறது. இந்தப் புஷ்கர் விழாவின்போது வண்ண வண்ணக் கடைகள் புதிதாக தோன்றுகின்றன. இவைதான் உற்சவத்தின் முக்கிய நாயகமாக விளங்குகின்றன. இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் கண்களையும், காதுகளையும் குளிர்விக்கின்றன.
உற்சவத்தின் மற்றுமொரு அம்சமாக நாவில் நீர் ஊறச் செய்யும் பாரம்பரியத் திண்பண்டங்களும் விற்கப்படுகின்றன. வண்ண வண்ண உடைகள் அணிந்த கிராம மக்கள் விழாவுக்கு மெருகூட்டுகின்றனர்.
இந்த அழகான பின்னணியில், கவர்ச்சிகரமான பொம்மலாட்டம் உட்பட ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கால்நடைகள் ஏலம் விடப்படுவது, ஒட்டகப் பந்தயங்கள் ஆகியவை கொண்டாட்டங்களுக்குப் பொலிவூட்டுகின்றன.
புஷ்கரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்
WD
பிரம்மா கோவில் : இந்தியாவில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோவில் இங்குதான் அமைந்துள்ளது. இந்த கோயில் செந்நிறத்தில் கூரான கோபுரத்தைக் கொண்டது. தலைவாசலில் பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது.
சாவித்திரி கோயில் : பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு என ஒரு கோயில் இங்குள்ளது. இது பிரம்மா கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமைந்துள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோயிலில் இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் காண்பது அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.
மான்மகால் : புஷ்கர் கரையில் ஆமெர் மன்னர் முதலாவது ராஜா மான்சிங் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை தான் மான்மகால். இது வெறும் பார்வையிடும் தலமாக இருந்தது. ஆனால் தற்போது ஆர்.டி.டிசி. ஹோட்டல் சரோவராக மாற்றப்பட்டு, வருகிறவர்களுக்கு வசதியான தங்குமிடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அங்காடிகள் : பெரிய கடைவீதி நெடுகிலும் வரிசையாகக் கடைகளில் எம்பிராய்டரி துணிகளும், காலணிகளும், வண்ண மணி மாலைகளும், வளையல்களும், பித்தளைப் பாத்திரங்களும், பித்தளை மணிகள் பதிக்கப்பட்ட இடைவார்களும், ஒட்டகங்களுக்கு கண்ணாடி வேலைப்பாடுடைய துணி உறைகளும், வண்ண வண்ணச் சேலைகளும், தோல் பொருட்களும், அழகிய சுவரோவியங்களும், தோளில் மாட்டும் தொங்கு பைகளும் விற்கப்படுகின்றன. நல்ல கைவேலைப்பாடு கொண்ட பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அதற்க ராஜஸ்தான் செல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு அவ்வளவு கைவினைப் பொருட்கள் இங்கு கிடைக்கின்றன.
முக்கிய அங்காடிகள் மையங்கள், ஹோம் சர்க்கஸ், பஸாஸா பஜார், ஸராஃபா பஜார், மாலகீரா பஜார், கேதல்கஞ்ச் பஜார் ஆகியவை ஆகும்.
எவ்வாறு செல்லலாம்
விமானம் : அருகில் உள்ள ஜெய்பூர் விமான நிலையம் 146 கி.மீ. தொலைவில் உள்ளது.
ரெயில்: அருகிலுள்ள ரயில் நிலையம் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள அஜ்மேர்.
சாலை : புஷ்கர் நகரத்திற்குச் செல்ல நல்ல சாலைத் தொடர்பு வசதிகள் உள்ளன.
உள்ளூர் போக்குவரத்து: அஜ்மேருக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது. அஜ்மேரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எங்கு தங்கலாம் : புஷ்கர் நகரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. முக்கியமாக ஏராளமான தர்மசாலைகளும், சத்திரங்களும் கட்டிவைக்கப்பட்டுள்ளன. அதில்லாமல் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கழிவறைகளுடன் பல கூடாரங்களையும் அமைத்து வைத்துள்ளது. இந்த கூடாரங்களில் தங்கிக் கொள்வதும், அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவு மையத்தில் ராஜஸ்தான் சிறப்பு உணவுகளை சாப்பிடுவதும் புஷ்கர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் விரும்பும் ஒரு விஷயமாகும்.
கடைவீதியில் வாங்கக் கூடியவை : புஷ்கர் விழாவின் போது ஏராளமா சாலையோரக் கடைகளில் மணிமாலைகள், வளையல்கள், எம்பிராய்டரி சால்வைகள், துணிகள், ஒட்டகங்களுக்கு எம்பிராய்டரி போட்டு கண்ணாடி பதித்த துணி உறைகள், என்று வகைவகையான பொருட்களின் விற்பனை நடக்கிறது. அழகாக நெய்யப்பட்ட கம்பளங்களும், ஒட்டகத் தோல் பொருட்களும் கிடைக்கின்றன. எதுவாக இருந்தாலும் அழகிய கைவேலைப்பாடு கொண்ட பொருட்களைப் பார்த்து வாங்குங்கள்.