தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறமும் ஓய்வு விடுதிகள்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (15:26 IST)
நான்கு மற்றும் ஆறு வழித் தடங்கள் கொண்ட தேசிய நாற்கர சாலைகளின் இருபுறமும் 50 கி.மீ. இடை வெளியில் பயண வசதி மையங்கள், வர்த்தக மையங்கள், ஓய்வு விடுதிகளை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி 500 இடங்களில் இப்பயண வசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு மையமும் சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ளதாக அமையும். இதில் தொழில் முன்வோருக்கு தேவையான இடம் 15 ஆண்டு குத்தகைக்கு பிரித்து வழங்கப்படும். தேவைப்பட்டால் இந்த குத்தகை காலத்தை முப்பது ஆண்டுகள் வரை நீடிக்கலாம். இம்மையங்கள் 50 கிலோ மீட்டருக்கு ஒன்றாக சாலையின் இருபுறமும் மாற்றி மாற்றி அமைக்கப்படும். அதனால் வாகனங்கள் சாலையைக் குறுக்கே கடக்க வேண்டிய தேவை இராது.

இப்பயண வசதி மையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள், கழிவறைகள், குறுகிய கால ஓய்வகங்கள், முதலுதவி மையங்கள், தொலை‌பே‌சி கடைக‌ள், பெட்ரோல் பம்ப்புகள், வாகனங்களுக்கான சிறு பழுதுபார்க்கும் கடைகள், அன்றாடம் பயன்படுத்தும் சிறு பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், அரசின் முக்கிய சமூக நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தகவல் பிரசார மையங்கள் ஆகியவை இடம் பெறும்.

ராஜஸ்தான், கர்நாடகம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 8 பயண வசதி மையங்களை அமைக்க இந்துஸ்தான் பெட்ரோலியம் கழக‌த்துட‌ன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்