உங்கள் பற்களுக்கு சரியான டூத் ப்ரஷ் எது? எப்படி கண்டுபிடிப்பது?
புதன், 12 ஏப்ரல் 2023 (10:39 IST)
தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் பல் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் சரியான டூத் ப்ரஷ்ஷை பயன்படுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் மக்கள் பல் சார்ந்த பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். துரித உணவுகள், அவசரமாக பல் துலக்குவது அல்லது பல் துலக்காமலே இருப்பது போன்ற செயல்களால் பல் சொத்தை, ஈறு வீக்கம் உள்ளிட்ட வாய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
தற்போது பல நிறுவனங்கள் பேஸ்ட் மற்றும் டூத் ப்ரஷ்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் நமது வாய்க்கு சரியான டூத் ப்ரஷ் எது என்பதை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம். தற்போது விற்பனையாகி வரும் டூத் ப்ரஷ்கள் Soft, Sensitive Care, Deep Clean, Charcoal clean என பல பெயர்களில் வெளியாகிறது. இதில் உங்களுக்கு சரியான டூத் ப்ரஷ் எது?
டூத் ப்ரஷ்ஷின் தலை:
டூத் ப்ரஷ் வாங்க செல்லும்போது அதன் தலைப்பகுதியை கவனிப்பது அவசியம். டூத் ப்ரஷ்ஷின் தலை வட்டம், நீள் வட்டம், சதுரம் ஆகிய வடிவமைப்புகளில் உள்ளது. குழந்தைகளுக்கு சிறிய வட்டத்தலை உள்ள ப்ரஷ்ஷை வாங்குவது நல்லது. பெரியவர்கள் தங்கள் வாய் அமைப்பிற்கு ஏற்றவாறு பெரிய வாயாக இருக்கும்பட்சத்தில் சதுர தலை ப்ரஷ்களையோ அல்லது சாதாரணமாக நீள்வட்ட தலை ப்ரஷ்களையோ வாங்கலாம்.
ப்ரிஸ்டில் வகை:
டூத் ப்ரஷ்ஷில் உள்ள பற்களை சுத்தம் செய்யும் ப்ரிஸ்டில் என்னும் நரம்புகளின் டிசனை பார்ப்பது அவசியம். சில ப்ரஷ்களில் ப்ரிஸ்டில் Flat ஆக இருக்கும். சில ப்ரஷ்களில் Zig Zag ஆக குறுக்கே இருக்கும். நேர்வரிசை பற்களை கொண்டவர்கள் ஃப்ளாட் ஆன ப்ரிஸ்டில் உள்ள ப்ரஷ்களை வாங்கலாம்.
சிலருக்கு பல் வரிசை நேராக இல்லாமல் சற்று முன் பின்னாக, ஒரு பல் மேல் மற்றொரு பல் ஏறிக் கொண்டு இருக்கும். இப்படியான பல் வரிசை உள்ளவர்களுக்கு பற்களின் இடுக்குகளில் உணவுகள் எளிதில் சேர்ந்து பல் சொத்தை ஏற்படும். அதை தவிர்க்க Zig Zag ஆக ப்ரிஸ்டில் உள்ள டூத் ப்ரஷ்ஷை தேர்ந்தெடுப்பது நல்லது.
கைப்பிடி: இறுதியாக கைப்பிடியை கணக்கில் கொள்ளுங்கள். டூத் ப்ரஷ்கள் உருளையான கைப்பிடி, சதுரமான கைப்பிடி உள்ளிட்ட பல வகைகளில் வருகின்றன. உங்கள் கைகளுக்கு இலகுவாகவும், பல் துலக்க வசதியாகவும் கைப்பிடி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கான எந்த டூத் ப்ரஷ்ஷை தேர்ந்தெடுத்தாலும் காலை எழுந்த பின்பும், இரவு தூங்கும் முன்பும் 10 நிமிடங்களாவது பற்களை துலக்குவது அவசியம்.