வங்கக்கடலின் வளம் குன்றாத, சென்னை மாநகரின் நீர்ச் சோலையாகக் கருதப்படும் பாலவாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) என்ற இடத்தில் கடற்கரை யோரத்தில் கவின்மிகு கண்ணைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது புனித அந்தோணியார் திருத்தலம். இந்த ஆலயம் இந்த இடத்தில் உருவானது என்பதே புனித அந்தோணியார் நிறைவேற்றிய முதல் புதுமை என்று சொன்னால் அது மிகையாகாது. திருத்தலத்தில் "உலகிலேயே முதன் முறையாக மிக உயரமான நற்கருணை கோபுரம்" இந்த ஆண்டு பிப்ரவரி திங்கள் 26ம் நாள் திறக்கப்பட்டது.
குடிசை கோவில்
1997 - ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24ம் நாள் முதன் முதலாக இத்திருத்தலம் தோன்றியது எனச் சொல்லலாம். பாலவாக்கம் பல்கலை நகரிலுள்ள அலுவலகக் குடியிருப்பில் வாழும் கத்தோலிக் கிறித்துவ மக்கள் ஒருங்கிணைந்து, குடிசை கோவில் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மறைந்த முன்னாள் சென்னை மயிலை பேராயர் டாக்டர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களின் அனுமதியுடனும், அருள் ஆசியுடனும், மற்றும் அப்போது வட சென்னையில் உள்ள எருக்கஞ்சேரி பங்குத் தந்தையாக இருந்த அருட்பணியாளர் வின்சென்ட் சின்னத்துரையின் அயராத உழைப்பினாலும் வழி காட்டுதலாலும் இந்த புனித தளம் உருவாக்கத்திட்டத்தின் முதல் கட்டம் நிறைவேறியது. ஒரு குடிசை கோவில் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இத்திருத்தலத்தில் ஞாயிறு வழிபாடும் (திருப்பலி) செவ்வாய்கிழமை புனித அந்தோணியார் நவநாள் சிறப்பு வழிபாடும் நிறைவேற்றப்பட்டு வந்தது.
இந்தத் திருத்தலத்தின் திருப்பலி நிகழ்வுகளில் வெட்டுவாங்கேனி புனித அன்னாள் சுவக்கின் ஆலய பங்குத்தந்தையாக இருந்த அருட்பணியாளர் ஞ.ஆ. ஜார்ஜ் அவர்களின் பங்கேற்பு மிகச் சிறப்பாக இருந்தது. இச்சிற்றாலயத்தை நாடி வரும் பக்தர்கள் பல்வேறு சாதி, மதம், மொழி இவற்றை சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
பக்தி வழிபாடு
புதுமை செய்யும் ஆற்றலுடைய நம் புனிதரின் அருள் வரத்தால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஒவ்வொரு வெவ்வாய்கிழமையும் சிற்றாலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் பங்கேற்பதற்காக வருகின்ற மக்கள் உடல் நோய்கள் நீங்கப் பெற்றனர். பல்வேறு தேவைகளோடு வரும் அனைவரும் மனநிறைவு பெற்றுச் சென்றனர்.
கோவில் தரை மட்டம்
ஆனால் திடீரென்று, ஒரு நாள் குடிசைக் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. எப்படி இது நிகழ்ந்தது என்று தெரியாவிட்டாலும் இதுவும் நன்மைக்கே என்ற மன ஆறுதலுடன் பதுவை புனிதரின் புதுமை நிகழ ஒரு நேரம் வரும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் அனைவரும் வேண்டுதல்களுடன் இறைச் சித்தத்திற்காக காத்திருந்தனர் என்றே சொல்லலாம்.
இறைவனின் சித்தம்
ஆம், இறைவனின் சித்தம் விரைவிலே நிறைவேற்றப்பட்டது. புனித அந்தோணியார் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த பக்தர் ஒருவர், தன்னுடைய மறைந்த மனைவியின் நினைவாக என் 38, எம்.ஜி.ஆர். சாலை பாலவாக்கம் என்ற இடத்தை தியான மண்டபம் கட்டுவதற்காக இலவசமாக கொடுக்க முன் வந்தார். இந்த விருப்பத்திற்கு பேராயர் அவர்கள் அவ்விடத்தில் ஒரு ஆலயம் கட்ட ஒப்புதல் தெரிவித்தார்கள். புதுமை புனிதரின் அருள் வரத்தில் சாட்சியாக கிடைக்க பெற்ற இந்த இடத்தில் ஒரு தேவாலயமும் கட்டி, இழந்த மக்களின் நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும் விரமாக, மீண்டும் புதுமைப் புனிதருக்கு ஆலயம் எழுப்ப அஸ்திவாரம் இடப்பட்டது. இது ஒரு மாபெரும் புதுமை.
மீண்டும் எழுந்தது
இன்று வழிபாடு நடக்கின்ற இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ள மனை, மறைந்த பாசமிகு பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களின் முயற்சியால் விலை கொடுத்து வாங்கப்பட்டதொன்றாகும். அவரே இந்த ஆலயத்தின் அடிக்கல்லை நாட்டி அஸ்திவாரமிட்டார். சென்னை - மயிலை உயர் மறை மாவட்டத்தின் அப்போதைய சொத்துக்களின் பொறுப்பாளராக இருந்த அருட்பணியாளர் ஞ.து. லாரன்ஸ் ராஜ் அவர்களிடன் இந்த தேவாலயம் கட்டும் பணி ஒப்படைக்கப்பட்டது. அவர் சலிக்காமல் சவால்களை சந்தித்தார். மிக மிக குறுகிய காலத்திலேயே பாலவாக்கம் பங்கு மக்களின் வேண்டுதல்கள், கனவுகள் நிறைவேற்றப்பட்டன. தியான மண்டலத்தின் மேல் கம்பீரமாக எழுந்து ஒளிவீசிக் கொண்டிருக்கிறது, புதுமைப் புனிதர் பெயரில் அமைந்துள்ள இத்தேவாலயம்.
புனித திமொத்தேயு
தேவாலயம் கட்டும் பணி முழுமையான பின் 2002 ஏப்ரல் 2ம் நாள் புதிய தேவாலயம் அழுகுற மிளிர்ந்தது. வழிபாட்டு பீடத்தில் புனித திமொத்தேயுவின் புதுமைப் பொருள் வைக்கப்பட்டு தேவாலயம் புனிதப்படுத்தப்பட்டது. இம்மாபெரும் திருவழிபாட்டு நிகழ்ச்சியினை பங்கேற்று நடத்திக் கொடுத்தவர் திருச்சி மறை மாவட்டத்தின் ஆயர் மேதகு டாக்டர் அந்தோணி டிவோட்டா மற்றும் முன்னாள் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு டாக்டர் அமலநாதர் அவர்களும்தான்.
இந்த புதிய பங்கு (பாலவாக்கம் கடற்கரை அந்ததோணியார் திருத்தலம்) ஆலயம் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பங்கின் ஒரு பகுதியையும் வெட்டுவாங்கேணி பங்கின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்டது.
அருள் மழை
இனிமையும், பழமையும் ஒரு சேர பெற்ற இத்திருத்தலம் மென்மேலும் ஆல் போல் தழைத்து, கோடானு கோடி மக்களை தன்பால் கடற்கரை தூய அந்தோணியார் வழியாக ஈர்த்து, அருள் மழை பொழிகின்ற மாபெரும் திருத்தலமாக மாறவேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் எண்ணம்.