பண்டார வாடை புனித காணிக்கை மாதா கோயில் சிறப்பு!

தஞ்சை மாவட்டம் பண்டார வாடை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது பிரசித்தி பெற்ற புனித காணிக்கை மாதா கோயில்.

இக்கோயிலானது ராஜகிரி என்ற கிராமத்திற்கும், பண்டாரவாடைக்கும் பொதுவான மாதா கோயில் என்பதால் இரு கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்களுமே இங்கு வருகிறார்கள்.

இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். இயேசு கிறிஸ்து பிறந்து 40 நாள் ஆன பின்னர் அன்னை மரியாள், இஸ்ரேலில் உள்ள தேவாலயத்தில் குழந்தை இயேசுவை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தாள். மோசஸின் கட்டளைப்படி அப்போதைய வழக்கமான இரு மாடப்புறாக்களை காணிக்கையாக மரியாள் எடுத்துச் சென்றாள்.

இதன் காரணமாக பண்டார வாடை கோயிலில் இயேசு பிறந்த 40-வது நாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்னை மாதா காணிக்கை கொடுத்ததைத் கொண்டாடுவதால், காணிக்கை மாதா கோயில் என்றே பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

மாடப்புறாக்கள் காணிக்க

இயேசுநாதர் பிறந்த 40 நாட்களுக்குப் பின்னர் மரியாளும், சூசையப்பரும் குழந்தை இயேசுவை தூக்கிக் கொண்டு தேவாலயம் சென்றனர். அந்த ஊரின் மரபுப்படி ஏழைகளின் காணிக்கையான ஒரு ஜோடி மாடப்புறாக்களையும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.

எகிப்து நாட்டில் இருந்து இஸ்ரேல் மக்கள் வெளியேறிய சமயத்தில் கடவுளுடைய தூதன் அவர்களுடைய தலைச்சன் குழந்தைகளைக் கொல்லாது விட்டுவிட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் மக்கள் தங்களுக்கு பிறக்கும் முதல் ஆண் குழந்தையை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பது மோசஸின் சட்டம். இந்தச் சட்டத்தை இஸ்ரேல் மக்கள் பின்பற்றி நடந்தார்கள். அதேபோல் மரியன்னையும் பின்பற்றினாள்.


ஆலயத்தில் இயேசுவை காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததால், மரியாளை காணிக்கை மாதா என்று அழைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் இவ்விழா பெரும்பாலான மாதா கோயில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 2-ல் சிறப்ப

பண்டார வாடை மாதா கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி இயேசு பிறந்த 40ம் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 1ம் தேதி இரவு (இன்று) வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காணிக்கை மாதா பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பண்டார வாடையில் உள்ள மாதா கோயிலை பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த பிளையூட்ஸ் என்ற குரு கட்டினார்.

இக்கோயிலில் உள்ள மாதாவிடம் குழந்தை வரம் வேண்டி வருவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. அப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு காணிக்கை ராஜ், காணிக்கை மேரி போன்ற பெயர்களை வைக்கிறார்கள்.

பண்டார வாடை மற்றும் ராஜகிரியில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள் என்றாலும், கிறிஸ்தவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகி வருகிறார்கள்.

இந்த திருவிழாவிற்கு சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் வந்து மாதாவை வழிபட்டு காணிக்கை மாதாவின் அருளையும், ஆசியையும் பெற்றுச் செல்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்