திருப்பாம்புரம் ஈசன்!

திருப்பாம்புரத்திற்கு சொந்தமான இறை சிறப்புகள் எண்ணற்றவை!

பாற்கடலை கடைந்து அமுதெடுக்கும்போது ஒரு அசுரன் தேவர்களுக்கு தெரியாமல் அமுதுண்டான். இதை அறிந்த மோகினி வடிவில் இருந்த திருமால், சக்கரம் வீசித் தலையைச் சீவினார். அமுதுண்டதால் சாகா நிலை பெற்ற இவன் தலையும் பாம்பின் உடற்பாகமும் பெற்று ராகுவானான். பாம்புத் தலையும் உடற்பாகமும் பெற்றவன் கேதுவானான். எனவே ராகு, கேதுக்கள் பாம்புகளாகச் சித்த்ரிக்கப்படுகிறார்கள்.

கும்பகோணம் - திருநள்ளாறு காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடி அருகில் "கற்கத்தி" என்ற ஊரில் இறங்கி தென் திசையில் 2 கி.மீ நடந்து செல்ல வேண்டும் ராகுவும் கேதுவும் இணைந்தருள் புரியும் இத் திருத்தலத்துக்கு.

ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம் - இந்திரன் சாபம் நீங்கிய தலம் - கங்கை பாவம் தொலைந்த தலம் என்று எண்ணற்ற இறைச்சிறப்புகள் கொண்ட இவ்விடம் தான் சந்திரன் பழி நீங்கிய தலமும்.

விநாயகர் ஒருமுறை இறைவனை வணங்கியபோது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னையும் தொழுவதாக நினைத்துக் கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட ஈசன் பாம்பினங்கள் அனைத்தும் தமது சக்தியை இழக்க சாபமிட்டார்.

அஷ்ட மகா நாகங்களும் - ராகுவும் கேதுவும் சாப விமோசனத்திற்காக பணிந்து ஈசனை வேண்டியபோது - பாம்பினங்கள் அனைத்தும் சிவராத்திரியில் தம்மைப் பூஜித்து சாப விமோசனம் பெற அருளினார். அதிலிருந்து மகாசிவராத்திரி மூன்றாம் சாமத்தில் ராகுவும் கேதுவும் நாகங்களும் பாம்புரநாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றனர்.

இவ்வூரில் பாம்புகள் சிவனடியார்களாகத் திகழ்வதற்கு புராண வரலாறு விளக்கம் கூறியுள்ளது.

உலகைத் தாங்கும் ஆதிசேஷன் சுமை தாளாமல் நலிவுற்று வருந்தியபோது இறைவனின் ஆணைப்படி மகாசிவராத்திரி முதல் சாமம் குடந்தை நாகேஸ்வரனையும், இரண்டாம் சாமம் திருநாகேஸ்வரர் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரமும் வந்து வழிபட்டு விமோசனம் பெற்றது தான் இதற்கு காரணம்.

ராகு அரசாங்கத்தில் பதவி, புகழ் பெறுவதற்கும் உலகச் சுற்றுப் பயணம் செய்வதற்கும் உதவுபவன். கேது வியாதி சரிசெய்யவும், மருத்துவர்களை உருவாக்கவும் வல்லவனாவான். பக்தி நெறிகளில் மனதைச் செலுத்த மிகவும் உதவுபவன்.

ராகுவிற்கு கோமேதகமும், கேதுவிற்கு வைடூரியமும் உகந்த கற்களாகும்.

ஜாதகத்தில் சாலசர்ப்ப தோஷம் இருந்தால். . . 18 வருட ராகு திசை நடந்தால் . . . 7 வருட கேது திசை நடந்தால் லக்கினத்திற்கு 8 - ல் கேதுவோ ராகுவோ இருந்தால் . . . ராகுபுத்தி கேதுபுத்தி நடந்தால் . . . களத்திர தோஷம் இருந்தால் . . . புத்திர தோஷம் இருந்தால் . . . இரு பாலருக்கும் திருமணம் தடைபட்டால். . . கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் . . . பாம்பை அடித்திருந்தால் . . . கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாள் மற்றும் ஏகசரீர ராகு கேது பகவானுக்கு அபிஷேகம் செய்து ராகு கேதுக்கு பலவண்ண ஆடை சாற்றி, இயன்றால் கோமேதகம், வைடூரியம் அணிவித்து சங்கு புஷ்பம், மல்லிகை, நீல மந்தாரை, இலுப்பைப்பூ, செவ்வரளி, நாகலிங்கப்பூ ஆகியவற்றால் அர்ச்சித்து, உளுந்துப்பொடி, கொள்ளுப்பொடி கலந்த அன்னம் சமைத்து ராகுகால நேரத்தில் அபிஷேக அர்ச்சனைகளை செய்தால் துன்பங்கள் ஓடும் - துயரங்கள் விலகும்.

இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புர நாதர், பாம்புரீஸ்வரர், பாம்புரேசர் என்று வணங்கப்படுகிறார்.

இறைவி வண்டுசேர் குழலி, பிரமராம்பிகை, வண்டார்குழலி - வண்டார் பூங்குழலி, வண்டார் பூங்குழல்வல்லி, மாமலையாட்டி என்றும் அழைக்கப்படுகிறார்.

தலமரம் - வன்னி, தீர்த்தம் - ஆதிசேடதீர்த்தம்.

திருப்பாம்புரத்திற்கு சொந்தமான இறை சிறப்புகள் எண்ணற்றவை என்பது மிகையல்ல! கும்பகோணம் திரு நாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம், நாகூர், காளஹஸ்தி எனும் ஐந்து தலங்களின் சிறப்பும் ஒருங்கே பெற்ற தலம் இது.

இறைவியை வண்டு வணங்கும் தலம் . . .

அத்தி பூக்காத தலம். . .

ஆலம் விழுது தரையைத்தொடாத தலம். . .

பாம்புகளே ஈசனாய் காட்சியருள் புரிவதால் நீங்களும் ஒரு முறை குடும்பத்துடன் "தென் காளஹஸ்தி" என்று அழைக்கப்படும் திருப்பாம்புரம் போய் ஆசி பெறுங்கள்!

வெப்துனியாவைப் படிக்கவும்