கடவுள் பற்றிய ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்து

திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:43 IST)
சூரியன் பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதாயினும் வெகு தூரத்துக்கு அப்பாலிருப்பதால் ஒரு சிறிய தட்டைப்போலக் காணப்படுகின்றது. அது போலவே, ஈசுவரன் அளவற்ற மகத்துவ‌‌ம் உடையவனாயிருந்தும், நமக்கும் அவனுக்குமிடையே உள்ள தூரத்தினால் நாம் அவனுடைய உண்மையான மகத்துவத்தை அறியச் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்.
 
நாணலும் பாசியும் மூடிய குளத்தில் துள்ளி ஓடும் மீன்களை வெளியிலிருந்து காண முடியாது; அது போல மனிதனுடைய இருதயத்தில் விளையாடும் ஈசுவரனைக் காணவொட்டாதபடி மாயை மறைக்கின்றது.
 
திவ்விய மாதாவை நம்மால் ஏன் காண முடியவில்லை? அவள், திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்தி, பிறர் கண்ணில் படாமல் தான்மட்டும் எல்லாவற்றையும் பார்க்கும் உயர்குல மாதரைப் போன்றவளாவாள். அவளுடைய உண்மையான பக்தர்கள் மட்டும், மாயையாகிய திரையைத் தாண்டி சமீபத்தில் சென்று அவளை தரிசிக்கின்றனர்.
 
காவல்காரன், தனது விளக்கின் வெளிச்சம் எவர்மீது படும்படி திருப்புகிறானோ அவரைப் பார்க்க கூடும். ஆனால் அந்த விளக்கைத் தன்மீது திருப்பாதிருக்கும் வரையில் அவனை ஒருவராலும் பார்க்க முடியாது. அதுபோல, ஈசுவரன் எல்லோரையும் பார்க்கிறான். ஆனால், தனது கிருபை மூலமாக அவன் தன்னைத் தோற்றுவிக்கும் வரையில் ஒருவராலும் அவனைக் காண முடியாது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்