காவிரிக் கரையை ஒட்டிய தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் 70வது திருத்தலமாக ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோவில் திகழ்கிறது. சைவ அடியார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற இந்த ஸ்தலம் சோழ, பாண்டிய, நாயக்க அரசர்களால் வணங்கி போற்றப்பட்ட திருத்தலமும் ஆகும்.
இந்த தலத்தின் மிக சிறப்பான விஷயம் ஸ்தலத்தின் ஷேத்ர பாலகனாக எமபெருமான் விளங்குவதுதான். இதற்கு புராண கதையும் உள்ளது. உலக உயிர்களை கவர்ந்து செல்லும் எமபெருமான் அதனால் ஏற்படும் பாவங்களால் நிலைகுலைந்து சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் அவரை திருவாஞ்சியம் தலத்தில் தவம் மேற்கொண்டு பூஜிக்க அருள்கிறார். அதன்படியே எமபெருமான் திருவாஞ்சியத்தில் கடும் தவம் புரிந்து தனது பாவங்களை அழித்து சிவபெருமானின் அருள் பெற்றார்.
கோவில் கருவறையில் லிங்க வடிவில் வாஞ்சிநாதர் காட்சியளிக்கிறார். கருவறை விமானக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மர், துர்க்கை சிற்பங்கள் காணப்படுகின்றன. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.