ஏகாதசி விரதத்தின் சிறப்பு அம்சங்களும் பலன்களும் !!
வியாழன், 6 அக்டோபர் 2022 (09:34 IST)
ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும்.
துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை. துவாதசி திதி மிக, மிக குறைவான நேரமே இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம்.
ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.
ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் அனைவரும் விரதம் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.
நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.
ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.