சோமவார பிரதோஷ விரதம்: சிறப்புகளும் பயன்களும்!

திங்கள், 17 ஏப்ரல் 2023 (09:47 IST)
சோமவார பிரதோஷம் என்பது திங்கட்கிழமையில் நிகழும் பிரதோஷம் ஆகும். இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது பல்வேறு தோஷங்களை விலக்கி இன்பம் அளிக்கக்கூடியது.

பிரதோஷத்தில் நித்திய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், சோமவார பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என 20 வகை பிரதோஷங்கள் புராணங்களில் உள்ளது.

திங்கள் சந்திரனை குறிக்கும் கிழமையாகும். பிறை சந்திரனை தலையில் தரித்த சிவபெருமானுக்கு உகந்த நாளான பிரதோஷமும், திங்களும் இணைந்து வரும் இந்த சோமவார பிரதோஷம் சிவ வழிபாட்டில் சிறப்பானதொரு நாளாக அமைகிறது.

இன்றைய பிரதோஷம் பாற்கடலை கடைந்த நாள் ஆகும். இந்த பாற்கடலில் இருந்துதான் சந்திரனும், மகாலெட்சுமியும் தோன்றினார்கள். இந்த பாற்கடலின் விஷத்தை அருந்திதான் ஈஸ்வரமூர்த்தி திருநீலகண்டராய் உலகை காக்க அவதரித்தார்.

சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதோஷநாள் சிவ தரிசனம் செய்வது சிறப்பு. 

சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல் சூடிய சிவனுக்கு சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை உகந்த தினம். தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும்.

சிவபெருமானையும், அவரது வாகனமான நந்தியையும் இந்த நாளில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவன் கோவில்களில் நடைபெறும் நந்தி அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு மனமுருகி ‘நமச்சிவாய’ மந்திரத்தை உச்சரித்தால் தீராத பிரச்சினைகளும் தவிடுபொடியாகும்.

Edit by Prasanth.K
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்