நாளை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. இந்த ஆண்டு வரும் புரட்டாசி சனிக்கிழமைகள் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக, சனி திசை, புதன் திசை நடப்பவர்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி போன்ற சனியின் தாக்கத்தில் உள்ள ராசிக்காரர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, வளமான வாழ்வைப் பெறலாம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், முடிந்த அளவு அன்னதானம் செய்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னி ராசி புதனுக்கு உகந்த வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் எடுத்ததால், சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வணங்குவது அவசியம்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் ராசிக்கு 5-ல் சனி சஞ்சரிக்கும் போது பஞ்சம சனியாகவும், 8-ல் அட்டமத்துச் சனியாகவும், 12, 1, 2 ஆகிய இடங்களில் ஏழரை சனியாகவும் இருப்பார். இக்காலங்களில் குழந்தை பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக செலவு, உடல் மெலிவு போன்ற சிரமங்கள் ஏற்படும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால் செல்வமும், நிம்மதியும் கிடைப்பதுடன், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு இத்தகைய சிறப்புமிக்க மகத்துவம் உண்டு.