நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.
பணமிருந்தாலும், அதனை பாதுகாப்புடன் வைக்க , தைரியத்தையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்களுடன் வகுக்கப்பட்டதுதான் நவராத்திரி பூஜை முறைகள் ஆகும்.
சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜய தசமியாக கொண்டாடுகிறோம். நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் தொழில்களையும், கல்வியையும், எல்லா கலைகளையும் போற்றும் விதமாகவும், அடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றி திருநாளாகவும் உலகெங்கும் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த விஜயதசமி நாளில் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பித் தால் வெற்றியும் புகழும் கிடைக்கும்.