ஏகாதசி தோன்றிய புராணம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (11:53 IST)
ஏகாதசி பற்றி புராணங்கள் பல்வேறு கதைகளை கூறுகின்றன. அவற்றில் ஒன்று, விஷ்ணு புராணத்தில் முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால், அவர்கள் அனைவரும் அசுரனை அழித்து தங்களை காக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.


சிவபெருமான் அவர்களிடம் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுமாறு கூறுகிறார். அதன்படி தேவர்களும் முனிவர்களும் ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணடைந்தனர். தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய ஸ்ரீமகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. இதனால், மிகவும் களைப்படைந்த ஸ்ரீமகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுப்பதைப் போல் நடித்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அசுரன் முரன் ஸ்ரீமகாவிஷ்ணுவை கொல்லத் துணிந்தான். இரு துண்டாக வெட்ட எத்தனித்த போது அவரின் வியர்வை மூலம் சக்தியானது ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.

அந்த பெண்ணை அசுரன் முரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஹூங்காரம், அசுரனை எரித்து சாம்பலாக்கியது. அதாவது போர் புரியாமல் சத்தத்தினால் சாம்பலாக்கிவிட்டாள் அந்த தேவி நித்திரையில் இருந்து விழித்தெழுந்து தன் ஞான த்ருஷ்டியின் மூலம் நடந்ததைக் கண்ட ஸ்ரீமகாவிஷ்ணு, அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகாவிஷ்ணுவின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்