சித்தர்களாலும், முனிவர்களாலும், ரிசிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞாலத்தால் கண்டறிந்த தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும். இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும்.
இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம், உடல், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றன. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக் கிரகங்களின் பார்வை ஒரு காரணம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு, கேது, சனி ஆகும். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான்.
சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார். இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலை கீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி, நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாக காட்டி புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.