ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில், ஆடி மாதம் தனக்கென ஒரு தனிச்சிறப்பைப் பெற்று, அம்மன் மாதம் என்றே போற்றப்படுகிறது. நாளை, அதாவது ஜூலை 17ஆம் தேதி வியாழக்கிழமை, ஆடி மாதத்தின் முதல் நாள். குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில் ஆடி மாதம் பிறப்பது மிகவும் விசேஷமானது.
ஆடி முதல் நாள் அதிகாலையில் எழுந்ததும், வீட்டின் வாசலை தெளித்துப் பெரிய மாக்கோலம் இட வேண்டும். வீடு, வாசல் அனைத்தையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்கள் சூட்ட வேண்டும். பின்னர், ஒரு கலசச் சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரித்து பூஜைக்குத் தயாராக வைக்க வேண்டும்.
அதன் பிறகு, காமாட்சி அம்மன் விளக்கேற்றி, உங்களது இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தை மனதார வணங்க வேண்டும். ஆடி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்கள் முழுமையடைய வேண்டும் என்றும், வேண்டிய வரங்களெல்லாம் கிடைக்க வேண்டும் என்றும், எல்லா சூழ்நிலையிலும் துணையாக நிற்க வேண்டும் என்றும் அன்னையின் அருள் வேண்டி மனதாரப் பிரார்த்திக்க வேண்டும்.
இறுதியாக, அம்பிகைக்கு நைவேத்தியமாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பாயசம் என உங்களால் முடிந்ததைச் சமைத்துப் படைக்கலாம்.