சூர்ப்பனகை என்பவள் முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது அவளது பெயர் சுமுகி. ஆனந்த குருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின் மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகி ஒருதலைப்பட்சமாகக் காதலித்தாள். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள்.
அதற்கு, பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டான் சங்கசூடணன். ஏமாற்றமடைந்த சுமுகி, தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன் கெடுத்து விட்டதாக பழி போட்டு விட்டாள். இதை நம்பிய குரு, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக் கதறினான்.